நேரம் …. 2

நம்ப முடியாத அளவுக்கு சில விநோதமான முரண்பாடுகள் என்னிடம் உண்டு. என்னால் வேகமாக நடக்க முடியும். ஆனால் மெதுவாக நடக்க முடியாது  சிரமப்படுவேன். தடுமாறுவேன். என்னால் எளிதாக ஆஸ்திரேலியாவுக்கு  சென்று வர முடியும். ஆனால் பக்கத்தில் உள்ள பரவாக்கோட்டைக்கு சென்று வர பெரிதும் சிரமப்படுவேன். எல்லோரும் வேதனையில் கண்ணீர் வடிப்பார்கள். நான் நல்ல ஜோக் கேட்டால் கண்ணீர் சிந்தி கண்களைத் துடைத்துக் கொள்வேன். அதிக ஓட்டு வாங்கி தோற்றிருக்கிறேன்.

ஏற்கனவே என் மனைவி இடக்காகப் பேசி என்னைக் கிண்டல் செய்வார்.  “ஒங்களுக்கு ஆக வேண்டிய காரியம் இருந்தா மட்டுந்தான் விஷ்ணுபுரம் ஃபங்ஷனுக்கு போவீங்களோ? ஒருதரம் வாசிப்பு சவால்ல பரிசு வாங்கப் போனீங்க. இப்ப ஒங்க புக்கு வெளியிடுறதுக்குப் போறீங்க. இல்லையா?”என்று விஷமமாகக்  கேட்டார்.

“எனக்கு வேற எதிரியே வேண்டாம். பரிசு வாங்குனது ஈரோடு முகாம்ல. கோவை விஷ்ணுபுர விழாவுல எனக்கு சொந்த வேலை எதுவுமில்ல. போனேன். அப்றம்  கொரோனா காலத்துல  ஒரு வருஷம் விழா நடக்கல. பயத்துல அடுத்த வருஷம் போகல. போன வருஷம் மெல்பன்ல இருந்ததால போகல. எதிர்க்கட்சி மாதிரி எல்லாத்துக்கும் உள்நோக்கம் கற்பிக்கப் ப்டாது” என்று சொல்லி சமாளித்தேன்.

மூன்று மாதங்களுக்கு முன் எழுதிய நூலை போதுமான கால அவகாசம் இருந்தும் என்னால் விஷ்ணுபுர விருது விழாவின்போது வெளியிட முடியாமல் போய்விட்டது. யார் மீதும் குற்றமில்லை. யாரையும் குறை சொல்ல முடியாது. எல்லாமே தற்செயல்தான். நான் ஒருவருக்கு உதவி கோரி ஒரு குறுஞ்செய்தி அனுப்புவேன். அவரிடமிருந்து பதிலில்லை. திரும்பத் திரும்ப நினைவூட்டுதல் அனுப்பி நச்சரிக்க நான் பெரிதும் தயங்குவேன். அது நாகரிகமோ, நாசூக்கோ இல்லை என்று தோன்றும்.

வேறு வழியின்றி அவருக்கு வலிக்காமல் மெல்ல நினைவூட்டுவேன். பிறகுதான் தெரியும். அந்த குறுஞ்செய்தி போய்ச் சேரவில்லை அல்லது அவர் அதைப் பார்க்கவில்லை. இதில் யார் மீதும் தவறில்லை. அது ஒரு துரதிருஷ்டம் அவ்வளவுதான். ஆனால் அது தாமதத்தை, தடங்கலை,துன்பத்தைக் கொடுத்து விடும்.

டிசம்பர் பிறந்தது முதலே சென்னையில் மழை தொடங்கியது. அது பெரு மழையானது. பெரு வெள்ளமானது. சென்னை வாழ்க்கையே பல நாட்களுக்கு சீரழிந்தது. அதற்கெல்லாம் யார் காரணம்? யாருமே காரணமில்லை ,அது ஒரு தற்செயல் நிகழ்வு என்பது உண்மையாகத் தோன்றலாம். அதற்கு ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் காரணம் என்பதும் உண்மையாகத் தோன்றலாம்.

அந்த மாதிரி பெருமழை,புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள்  எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். சில நாட்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் அதிக சீற்றத்தோடு பெருமழை திரும்பி வந்தது. மனிதன் ஒரு துரும்பு போல்தான் என்று அவை குரூரத்தோடு நினைவூட்டுகின்றன. நம் கையறு நிலை முகத்தில் அறைகிறது.

அதன் வீச்சு தொலை தூரத்தில் பாதுகாப்பாக இருப்பதாக நினைப்பவரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்காமல் விடுவதில்லை.  சென்னையின் சிரமங்கள் என்னையும் பாதித்தது. தொடர்ந்து  கிடைக்க அரிதாகிப் போன மின்சாரமும் இணைய இணைப்பும் என் புத்தக வெளியீட்டை கண்காணாத தொலைவுக்குத் தள்ளிப் போட்டன. கவர் டிசைன் இழுத்துக் கொண்டே போனது.  விழாவுக்குள் புத்தகப் பிரதிகள் கிடைக்கும் வாய்ப்பு அருகிக் கொண்டே போனது.

அட்டை வடிவமைப்பு முடிந்து, பதிப்பித்து, பிரதி கைக்கு வந்து, அதில் பிழைகள் நீக்கி பதிப்பு பணிகள் முடிய எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை. சென்னை மக்கள் அடிப்படையான அத்தியாவசியத் தேவைகளுக்கே சிரமப்படும் அதே நேரத்தில் என் புத்தக வெளியீடு பற்றிய கவலை உறுத்தல்  தந்தாலும் கவலை கவலைதான். ஒரு வீட்டில் எழவு என்றால் தெருவில் வீடுகளில் உள்ளவர்கள் டி.வி.யில் சீரியல் பார்த்து ரசிப்பதை தடுக்கவா முடியும்?  ஒலியை வேண்டுமானால் அவர்கள் சற்று குறைத்து வைக்கலாம். வாழ்க்கை அப்படித்தான்.

வாழ்வில் தொடர்ந்து இன்பங்களை மட்டுமே துய்த்து வாழ்ந்தவர் எவருமில்லை. தொடர்ந்து துன்பங்களில் மூழ்கி முடிந்தவரும் எவருமில்லை. இரண்டின் கலவையே வாழ்க்கை. நான் கலந்து கொண்ட முதல் விஷ்ணுபுர நிகழ்வே என்னை பரிசளித்து கௌரவித்து ஏற்றுக்கொண்டது. இப்போது ஒரு அரிய வாய்ப்பு கை நழுவுகிறது. அவ்வளவுதான். தினமுமா ஜாக்பாட் அடிக்கும்?  இப்படி எண்ணி ஆறுதல் பெற்றேன்.

வழக்கம்போல் விருது விழாவுக்கு என்று படிக்க வேண்டிய வேலை கடுமையாக இருந்தது. விருந்தினர்கள் மலேசிய எஸ்.எம்.ஷாகீர், ராமச்சந்திர குஹா,  எழுத்தாளர்கள் பா.ராகவன், அர்வின்குமார், வாசு.முருகவேல், சந்திரா, சுபத்ரா,  தீபு, லதா அருணாசலம், விக்னேஷ்வரன் அத்தனை பேரின் படைப்புகளையும் படித்தாக வேண்டும். படித்தால்தான் விழா நிகழ்ச்சிகளில் ஒன்ற முடியும். ஹெவி சிலபஸ்!

யுவன் சந்திரசேகரின் நூல்களில் நான் ஏற்கனவே ஏற்கனவே (தவறுதலாக ஒரே சொல்லை இரண்டு முறை போட்டு விட்டதாக நினைக்க வேண்டாம். “ஏற்கனவே” என்பது அவருடைய ஒரு நூலின் பெயர்!), குள்ளச் சித்தன் சரித்திரம், பகடையாட்டம், கானல்நதி, வெளியேற்றம் ஆகியவற்றைப் படித்திருக்கிறேன்.  குஹாவின் இந்திய வரலாறு—காந்திக்குப் பின் (இரண்டு பாகங்கள்), நவீன இந்தியாவின் சிற்பிகள், தென்னாப்பிரிக்காவில் காந்தி,  Patriots and Partisans ஆகியவற்றைப் படித்திருக்கிறேன். பா.ராகவனின் பொன்னான வாக்கு, பின்கதைச் சுருக்கம், ருசியியல், கால் கிலோ என்று தொடங்கும் கதை படித்திருக்கிறேன்.

கூடியவரை படித்ததை மீண்டும் படிக்க வேண்டாம் என்று ஒரு சின்ன கொள்கை. கால அவகாசம் எவ்வளவு உள்ளதென்று யாருக்குத் தெரியும்?  பிரபுவோடு பேசும்போது 25000 பக்கங்களுக்கு மேல் உள்ள வெண்முரசை மீண்டும் படிக்க முடிவு செய்தேன். முதற்கனல், மழைப்பாடல் படித்து முடித்து வண்ணக்கடல் தொடங்கும்போது விழா அறிவிப்பு வந்தது. விழா முடிந்தபின் தொடரலாம் என்று நிறுத்தினேன்.

விழாவை முன்னிட்டு  விருந்தினர் அனைவரது பல படைப்புகளை முடிந்தவரை படிக்க முடிவு செய்தேன். முதலில் பா.ராகவனின் சில நூல்களை படிக்க எண்ணினேன். ஒரு தப்பு செய்துவிட்டேன். ”மாயவலை” நூலை முதலில் எடுத்தேன். 1% முடியவே பல பக்கங்கள் போயின. பின்னரே புரிந்தது அதன் பக்கங்கள் 1578 என்று. மாயவலையில் சிக்கி விட்டேன். சுவாரஸ்யமான அந்த நூலை நடுவில் நிறுத்த மனமில்லை. படித்து முடித்தேன். அதற்கே பல நாட்கள் தேவைப்பட்டன.

யுவன் விழா நாயகர் என்பதால் ஒரு மரியாதைக்கு குள்ளச்சித்தன் சரித்திரத்தை மீண்டும் படித்தேன் கைவசம் வேறு நூல் இல்லை. வாசு.முருகவேலின் “ஜெப்னா பேக்கரி” நாவலைப் படித்தேன். என்னிடமிருந்த அல்லது கிடைத்த மற்றவர்களுடைய சிறுகதைகளை, மொழி பெயர்ப்புகளை, கட்டுரைகளை படித்தேன். போதுமென்ற எண்ணம் வழக்கம்போல வரவில்லை.

விஷ்ணுபுர விழாவுக்கு நானும் என் மனைவியும் வருவதாக படிவங்களை நிரப்பி, ட்ரைன் சீட் முன்பதிவு செய்தேன். விழாவன்று காலை முதல்தான் தங்குமிட வசதி அறிவிக்கப் பட்டது. முந்தைய நாள் இரவே நாங்கள் செல்கிறோம். வெண்முரசு இணையாசிரியரும் தங்குமிட பொறுப்பாளருமான ஸ்ரீனிவாசன் எங்களுக்கு விழா நடக்கும் ராஜஸ்தானி சங் அருகிலுள்ள விடுதியில் அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போன் செய்து தகவல் தெரிவித்தார். நிம்மதி.

ஏனோ வீல் ட்ராலிக்கு பதில் இரு பெரிய பேக்கில் அடைத்துக் கொண்டோம். அதன் காரணம் தஞ்சாவூர் சந்திப்பில் தெரிந்தது. எங்கள் கம்பார்ட்மென்ட் நிற்கக் கூடிய இடம் ஒரு மைல் தொலைவில் போல் இருந்தது. பேட்டரி கார் எங்கு நிற்கும் என்று தெரியவில்லை.  சிரமப்பட்டு சுமந்து நடந்து சென்றடைந்த போது தெரிந்தது. நாங்கள் கிளம்பிய இடத்திலிருந்து சிறிது நேரம் கழித்து கிளம்பியது என்று. நேரம் சரியில்லை என்று நினைத்தோம். அதே கொடுமை பின்னர் கோயம்புத்தூர் சந்திப்பில் வெளிவரும்போதும், இரண்டு நாள் கழித்து திரும்பும் போது உள்ளே போகும்போதும் நிகழ்ந்தது.

ரயிலில்  பக்கத்துப் பெண்மணி ஒரு ஐம்பது பேருக்காவது  போன் செய்து கொண்டேயிருந்தார். அம்பானி புண்ணியத்தில் இல்லையேல் பாதி சொத்து போன் செய்வதிலேயே காலியாகியிருக்கும். ஜன் ஷதாப்தியில் என்னால் சிறிதும் படிக்கவே முடியவில்லை.  நில நடுக்க அதிர்வு. கோவை ஜங்ஷனிலிருந்து ஆட்டோவில் கிளம்பினோம். விழா அரங்கை ஆட்டோக்காரர் தேடித் தேடி விசாரித்து பொறுமையாய் கொண்டு சேர்த்தார். விடுதியில் சொல்லி கையொப்பம் போடும்வரை அவர் வெளியில் நின்றிருந்தார் என்று மனைவி பிறகு சொன்னார்.

முதல் மாடியில் அறை. நல்லவேளை! லிஃப்ட் இருந்தது.

(தொடர்கிறது)

@@@@@@@

நேரம் …… 1

Categories அனுபவம், இலக்கியம், நூல் வாசிப்பு, விழா

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close