Skip to content

“மாணிக்கத்துக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி!”

November 22, 2012

”நான் சினிமாவில் நடிக்க வர்றதுக்கு முன்னாடி போற இடத்துல எல்லாம், ‘சிவாஜி பேரன்’னு பெருமையா சொல்லிட்டு இருப்பேன். ஆனா, இப்போ நடிக்க ஆரம்பிச்ச பிறகு ‘சிவாஜி பேரன்’னு யார் சொன்னாலும் ரொம்பப் பயமா இருக்கு!” நெஞ்சில் கை வைத்துப் பேசும் விக்ரம் பிரபுவின் வார்த்தைகளில் உண்மை யிலேயே தொனிக்கிறது பயம். நாயகனாக அறிமுகமாகும் ‘கும்கி’ படம் வெளிவருவதற்கு முன்னரே மடமட, கடகடவெனப் படங்களில் ஒப்பந்தமாகிக்கொண்டு இருக்கிறார் அன்னை இல்ல இளைய தலைமுறை.

 ”ஏன் இவ்வளவு பயம்… அதான் நடிப்பு உங்க ஜீன்லயே கலந்திருக்குமே?”

”அப்படி எதுவும் இருந்தா சந்தோஷம். ஆனா, அதுல எனக்கு நம்பிக்கை இல்லை. எங்க குடும்ப ஜீன்ல வெயிட்டான உடல்வாகு இருக்குனு சொல்வாங்க. நடிக்கலாம்னு முடிவு பண்ணதும் அதை முதல்ல உடைக்கணும்னு முடிவுபண்ணேன். யானைப் பாகன்னா உடம்பு மெல்லிசா இருக்கணும். அதுக்காக ஜிம் போய் எடை குறைச்சேன். அதே சமயம் வொர்க்-அவுட் கட்ஸ் இருக்கக் கூடாதுனு மெனக்கெட்டேன். ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துல தினம் நாலு மணி நேரம் ஓடி, நாலு மாசத்துல 30 கிலோ எடை குறைச்சு இளைச்சேன். அப்புறம் டான்ஸ், சண்டை, ஜிம்னாஸ்டிக், யோகானு கத்துக்கிட்டு எனக்கே என் மேல அபார தன்னம்பிக்கை வந்த பிறகுதான் நடிக்கலாம்னு வந்து நிக்கிறேன். அதனால, ‘சிவாஜி பேரன்தானே… ஈஸியா வாய்ப்பு கிடைச்சிருக்கும்’னு ஒரு வரில கமென்ட் பண்ணாம, படத்தை முழுசாப் பார்த்துட்டு உங்க விமர்சனத்தை போஸ்ட் பண்ணுங்க… நான் தலைவணங்கி ஏத்துக்கிறேன்!”

”அநேகமா தமிழ் சினிமால யானைகூட இந்த அளவுக்கு எந்த ஹீரோவும் க்ளோஸா பழகினது இல்லைனு டிரெய்லர் சொல்லுது. உங்களுக்கும் யானைக்குமான கெமிஸ்ட்ரி ரகசியம் சொல்லுங்க?”

”யானைப் பாகன் கேரக்டருக்கு ஏத்த உயரம், உருவம்தான் பிரபு சாலமன் சார்கிட்ட பாஸ் மார்க் வாங்க வெச்சது. வாசனை, குரல் ரெண்டை யும் வெச்சுதான் ஒரு யானை தன் பாகனை அடையாளம் கண்டுக்கும். அடிக்கடி பாகன் மேல எச்சில் துப்பும். தடவிக் கொடுக்கும். என்கூட நடிச்ச யானையோட பேர் மாணிக்கம். ஆரம்பத்துல என்கிட்ட ஒட்டலை. விடாம தவம் இருந்து வெல்லம், வாழைப்பழம், பருப்பு சாதம்லாம் உருட்டி உருட்டிக் கொடுத்து ஃப்ரெண்ட் ஆக்கிக்கிட்டேன். 12 அடி உயர யானை. சும்மா மதமதனு திமிரா நிக்கும். மலை உச்சியில நிப்பாட்டி மேல ஏறும்போது, ஒரு திமிறு திமிறுச்சுன்னா, அதலபாதாளத்துலதான் விழணும். யானையோட ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு மூடு சொல்லும். எல்லாத்தையும் பக்கத்துல இருந்து பார்த்துப் பழகி மாணிக்கத்தோட கெமிஸ்ட்ரி வொர்க்-அவுட் பண்ணேன். நல்ல தோஸ்த் ஆன பிறகு, ஷூட்டிங் ஸ்பாட்ல டீ கேட்குற மாதிரி என்கிட்ட வாழைப்பழம், வெல்லம்லாம் கேட்டு வாங்கிச் சாப்பிடும். ஒரு கட்டத்துல என்ன ஆச்சுன்னா, ஒரிஜினல் பாகன் மாணிக்கத்தை என் கன்ட்ரோல்ல விட்டுட்டு அவர்பாட்டுக்கு வீட்டுக்குப் போயிடு வார். படத்துல மாணிக்கத்தோட எனக்கு லிப் கிஸ் மட்டும்தான் இல்லை. மத்த எல்லா கெமிஸ்ட்ரியும் உண்டு!”

”தாத்தா நீங்க நடிக்கணும்னு சொல்லியிருக்காரா?”

”படிக்கணும்னு சொல்லியிருக்கார். படிக்க வசதி இல்லாமதான் சின்ன வயசுல வீட்டை விட்டு ஓடி வந்தார் அவர். அந்த நிலைமை யாருக்கும் வரக் கூடாதுனு தன் சின்னத் தம்பியை லண்டன்ல படிக்கவெச்சார். என் அப்பா, பெரியப்பாவை பெங்களூருல படிக்கவெச்சார். அவர் சொன்ன மாதிரி படிச்சுட்டுதான் நடிக்க வந்திருக்கேன்!”

” ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் தன் இரண்டாவது படத்துல உங்களை ஹீரோவா கமிட் பண்ண என்ன காரணம்?”

”இவன் என்ன சொன்னாலும் கேட்டுக்குவான்னு நினைச்சாரோ என்னவோ… படத்தோட பேரு ‘இவன் வேற மாதிரி’. டைட்டிலே கதை சொல்லுதுல்ல. பிரபு சாலமன் சார் எனக்கு அப்பா மாதிரி. சரவணன் அண்ணன் மாதிரி. அப்பாகிட்ட ஓப்பனா எல்லாத்தையும் பேச முடியாது. லூஸு மாதிரி ஏதாவது பேசிடுவோம்னு பயந்து பயந்து பேசுவேன். சரவணன்கிட்ட அந்தப் பயம் இல்லை. ஜாலியும் கேலியுமா வேலை பார்த்துட்டு இருக்கோம்!”

From → Uncategorized

One Comment
  1. Theebika permalink

    ALL THE BEST VIKRAM PRABU…..

Leave a comment