கூப்பிடு தூரத்தில் இறைவன்!

disrobing-of-Draupadi-

Written by London swaminathan

Article No 1731; Date 19th March 2015

Uploaded at 9-48 am London Time (GMT)

கதை சொன்னவர் சுப்ரமண்ய சிவா; புத்தகத்தின் பெயர்: மோக்ஷ சாதன ரஹஸ்யம்; வெளியிட்ட ஆண்டு 1925

(சொற்கள் என்னுடையவை)

தஞ்சாவூரில் பெரியதாசர் என்று ஒரு சிறந்த பக்தர் இருந்தார். அவர் சதா சர்வ காலமும் இறை வழிபாட்டிலேயே நேரத்தைச் செலவிட்டு வந்தார். அவருடைய பெருமை அரசன் காதுகளையும் எட்டின. ஒரு நாள் அரசனே நேரே வந்தான். கொஞ்சம் பேச்சுக் கொடுத்துவிட்டு, கடவுள் எங்கே இருக்கிறார்? என்றார்.

உடனே பெரியதாசர் கொஞ்சமும் தயங்காமல் கடவுள் “கூப்பிடு தூரத்தில் இருக்கிறார்” என்றார். பெரிய தத்துவார்த்த பதிலை எதிர்பார்த்த அரசனுக்கு இப்படி அவர் பதில் கூறியது என்னவோ போல இருந்தது. தன்னை பெரியதாசர் கிண்டல் செய்கிறாரோ என்று தோன்றியது.

அப்படியா? இதோ என் சேவகர்களை அனுப்பி கூப்பிடு தூரத்தில் தேடிப் பார்க்கிறேன் என்றார்.

(ஒருவர் கூப்பிடும் குரல் எவ்வளவு தூரம் வரை கேட்கிறதோ அதைக் கூப்பிடு தூரம் என்று தமிழில் செப்புவர். ஆங்கிலத்தில் இதை Hailing Distance ஹெய்லிங் டிஸ்டன்ஸ் என்பர்)

சப்தம் போட்டுக் கூப்பிட்டுவிட்டு அவ்வளவு தூரம் வரை சேவகர்களை அனுப்பிப் பார்த்ததில் கடவுளின் சுவடே தெரிய இல்லை.

PONRHanumanSacredHeart400

பெரியதாசரிடம் அரசன் சொன்னார்: “அரசனிடம் பொய் சொல்லுவது பெரிய குற்றம். அது உங்களுக்குத் தெரியும். உண்மையைச் சொல்லுங்கள் கடவுள் எங்கே இருக்கிறார்?”

நான்  தான் முன்னமே சொன்னேனே! கடவுள் கூப்பிடு தூரத்தில் இருக்கிறார் என்று.

நான் தேடிப் பார்த்தேன் கடவுள் கூப்பிடு தூரத்தில் இல்லையே- என்றான் அரசன்.

பெரியதாசர் சொன்னார்: மன்னவனே; திரவுபதி கதை உனக்குத் தெரியாதா? அவளைத் துச்சாதனன் சபைக்கு இழுத்து வந்து அவளது புடவையை உருவினான். ஒரு பெண்ணுக்கு உலகில் இதைவிடப் பெரிய கொடுமை ஏதும் இல்லை. உயிரே போனாலும் பரவாயில்லை; மானம் போகக் கூடாது என்று பெண்கள் நினைப்பர். அவள் தனது இரு கைகளாலும் புடவையைப் பிடித்துக் கொண்டு, “அடே கண்ணா, துவாரகாபுரீவாசா, என்னைக் காப்பாற்று” – என்று கதறினாள்.

துவாரகாபுரீவாசன், நாமோ ரொம்ப தூரத்தில் உள்ளோம். அவளோ தன் புடவையைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறாள் என்று எண்ணிப் பேசாமல் இருந்துவிட்டார்.

நேரம் ஆக, ஆக திரவுபதிக்குத் தெரிந்துவிட்டது. இனி மனித முயற்சியில் ஒன்றும் நடவாது என்று உணர்ந்து, இரு கைகளையும் உயரே உயர்த்தி, “அடே ஹ்ருதய கமலவாசா! உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்”– என்று கதறினாள். அடுத்த நொடியில் உலக மஹா அற்புதம் நிகழ்ந்தது. துச்சாதனன் உருவிட, உருவிட புடவை வளர்ந்தது. அவன் மயக்கம்போட்டு வீழ்ந்தான். எப்படி?

துவாரகாபுரீ வாசா என்று அவனைத் தொலைவில் வைத்து, தன்னுடைய  இரு கைகள் மீது நம்பிக்கை வைத்த வரை கிருஷ்ணன் தனது ஆசனத்தை விட்டு அகலவில்லை.

இருதய கமல (இதய தாமரை) வாசா என்று “கூப்பிடு தூரத்துக்குள்” வைத்து அழைத்தவுடன், வெளியே குதித்த கண்ணன், அவளைக் காப்பாற்றினான். கூப்பிடு தூரம் என்பது அவரவர்கள் இறைவனைப் பக்கத்தில் வைத்திருக்கிறார்களா, இல்லையா என்பதைக் காட்டும் சொல் என்றார்.

ramais in heart

அரசனுக்கு இந்தப் பதில் நல்ல திருப்தியைத் தந்தது. பெரியதாசரின் பெருமையை உணர்ந்து அவரது காலடியில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிச் சென்றான்!

அன்பர்களே, இந்தக் கதை புகட்டும் நீதி என்ன?

உள்ளத்தில் கடவுளை வையுங்கள்; அவன் மீது முழுநம்பிக்கை வையுங்கள். முழு நம்பிக்கையோடு கூப்பிட்டால் உடனே வருவான், அருள்வான்.

இருதய கமல வாசன் வாழ்க! இருதயங்கள் வெல்க!!

Leave a comment

Leave a comment