மக்களின் வரிப்பணத்தை பஜனைக்கு ஒதுக்கும் பாஜக எம்.பி!

மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காக செலவிடப்பட வேண்டிய, உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை அதற்கு பயன்படுத்தப்படாமல், தங்களின் இந்துராஷ்டிர திட்டங்களுக்காக பயன்படுத்தி வருகின்றது மோடி அரசு. உழைக்கும் மக்கள் மீது வரிக்கு மேல் வரிவிதித்து வஞ்சித்து வருகிறது.

0

த்தரப்பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி வீரேந்திர சிங் மஸ்த், கோயில்களில் பஜனை-கீர்த்தனை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கு தனது மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் 11 அன்று மாவட்ட அதிகாரிகளுக்கு மஸ்த் கூறிய உத்தரவில், “பஜனை-கீர்த்தனை” போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வதற்கும், கோவில்களுக்கு இசைக்கருவிகளை ஏற்பாடு செய்வதற்கும் பணம் தேவையென்றால், தனது பாராளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் (எம்.பி.எல்.ஏ.டி) நிதியைப் பயன்படுத்தலாம்” என்று கூறினார்.

படிக்க : நிலத்தை அபகரித்த ராமர் கோயில் டிரெஸ்டி – அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் மீது வழக்கு !

தொடர்ந்து நான்காவது முறையாக லோக்சபா எம்.பி.யாக இருக்கும் மஸ்த், “ஆன்மீக விழிப்புணர்வை” உருவாக்க தனது நிதியை பயன்படுத்தவிருப்பதாக கூறுகிறார்.

மாவட்டத்தின் முனிசிபல் கவுன்சில் பகுதியில் அமைந்துள்ள அனைத்து “சிறிய மற்றும் பெரிய கோவில்கள்” கணக்கெடுக்கப்பட்டு, பஜனை-கீர்த்தனை நிகழ்ச்சிகள் மற்றும் இசைக்கருவிகளை வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார் என்று மாவட்ட தகவல் துறை கூறியுள்ளது.

“தற்போதைய சூழ்நிலையில் பாரம்பரிய விழுமியங்கள் மறைந்து வருகின்றன. எனவே பஜனைகள்-கீர்த்தனைகள் மற்றும் அவற்றுக்கான இசைக்கருவிகளைப் பயன்படுத்துவது கலாச்சார மற்றும் மத செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். இது ஒரு அத்யாத்மிக் சஞ்சேனா அல்லது ஆன்மீக விழிப்புணர்வை உருவாக்கும்” என்று மஸ்த் கூறினார்.

ஐந்து பழமையான கோவில்களை புனரமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், பல்லியாவை சுற்றுலா மையமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட மாஜிஸ்திரேட் சவுமியா அகர்வால் கூறியுள்ளார்.

எம்.பி.எல்.ஏ.டி., திட்டத்தின் கீழ், எம்.பி.,க்கள், ஆண்டுக்கு, ரூ.5 கோடி பெறுகின்றனர். எம்.பி.க்களின் நாடாளுமன்ற தொகுதியில் தங்கள் பணியை செய்வதற்கு இந்த நிதியை பயன்படுத்தலாம். பொதுவாக, அரசு நிதியானது தொகுதிக்கான சாலைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படும். இருப்பினும், உத்தரப்பிரதேசம் மற்றும் பிற பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த நிதி இந்துராஷ்டிர கலாச்சாரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டும் நடைமுறை தற்போது அதிகரித்து வருகிறது.

படிக்க : இராமர் கோவில் : மூலக்கதை ஆர்.எஸ்.எஸ்.  திரைக்கதை தொல்லியல் துறை !

உதாரணமாக நாம் இராமர் கோவில் விவகாரத்தில் பார்க்கலாம். ஒருபுறம் அயோத்தியில் ராமர் கோவில் ரூ.1,800 கோடி செலவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. மறுபுறம், இந்தியாவில் 1,000 பேருக்கு வெறும் 0.5 என்ற அளவில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் மருத்துவமனைகளில் படுக்கைகள் இருக்கின்றன.

அடிப்படை பிரச்சினைகளுக்காக செலவிடப்பட வேண்டிய, உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை அதற்கு பயன்படுத்தப்படாமல், தங்களின் இந்துராஷ்டிர திட்டங்களான செத்துப்போன சமஸ்கிருத மொழியை மேம்படுத்த நிதி ஒதுக்குவதில் துவங்கி, வட இந்தியாவில் இல்லாத சரஸ்வதி நதியை தேடுவது, ராமர் கோவியில் கட்டுவது, ராமர் சிலையில் சூரிய ஓளி படும் வகையில் கட்டவேண்டும் என்று விஞ்ஞானிகளை டார்சர் செய்வது, தற்போது பஜனைக்கு நிதி ஒதுக்குவது வரை பல்வேறு நிகழ்வுகளுக்கு பயன்படுத்தி வருகின்றது மோடி அரசு. உழைக்கும் மக்கள் மீது வரிக்கு மேல் வரிவிதித்து வஞ்சித்து வருகிறது.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க