ரிஷாத், ஹிஸ்புல்லா, அஸாத்தை பதவியிலிருந்து உடன் நீக்குங்கள்! – அத்துரலிய தேரருக்கு ஆதரவாக வியாழேந்திரனும் உண்ணாவிரதம்

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரைப் பதவிகளில் இருந்து உடன் நீக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் அத்துரலிய ரத்தன தேரரால் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக, இன்று (01) காலை 7 மணி முதல் இந்தப் போராட்டத்தை இவர் ஆரம்பித்துள்ளார்.

“ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றம் சாட்டப்படுகின்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அஸாத் ஸாலி ஆகியோர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது அவர்களைப் பதவிகளிலிருந்து ஜனாதிபதியும் பிரதமரும் உடன் நீக்க வேண்டும். அத்துடன், அவர்கள் மீதான விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதே எனது கோரிக்கை. அவர்கள் மூவரையும் பதவிகளிலிருந்து உடன் நீக்கக் கோரி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அத்துரலிய ரத்தன தேரரின் போராட்டத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளேன்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.கிருஷ்ணப்பிள்ளை (வெள்ளிமலை), கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் எஸ். சோமசுந்தரம், தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *