வணக்கம் சொல்லி மம்தாவை சந்தித்த ஹிலாரி

டைம்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்று சந்தித்தனர்.

வழக்கமான கைகுலுக்கல் மற்றும் வணக்கங்களையும் இருவரும் பரிமாறிக் கொண்டனர். இது திட்டமிட்டதல்ல எனவும், இந்த சந்திப்பினால் மேற்கு வங்கத்தில் நல்ல முன்னேற்றத்தை தரும் ‌என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹிலாரி:

“அன்னை தெரசாவை கவுரவிப்பதற்காக நான் 1995-ல் கொல்கத்தா வந்தேன். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் கொல்கத்தா வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா- அமெரிக்கா இடையிலான நட்பு அதிகரித்தப்படி உள்ளது. இதில் இந்தியா அதிக பொறுப்பு வகிப்பது நல்ல செய்தியாகும். இந்தியாவின் கொள்கை சிறப்பானவை. பர்மாவில் அரசியல், பொருளாதாரம் சீர்திருத்தம் ஏற்பட இந்தியா வலுவான நிலையில் உள்ளது.”

“நமது நட்புறவு மக்கள் அளவில் வரவேண்டும். என்னிடம் நீங்கள் எது பற்றி வேண்டுமானாலும் தயங்காமல் கேட்கலாம். பேசி விவாதிக்கலாம். நானும் எனது கணவர் கிளிண்டனும் அடிக்கடி விவாதித்து கொள்வோம். நானும் அவரும் இந்தியர்கள் மீது அதிக பாசம் வைத்துள்ளோம். நான் கடந்த தடவை இந்தியா வந்தபோது சென்னைக்கு சென்றிருந்தேன்.”

“பெண்கள் உயர்ந்த பதவிக்கு வருவது எவ்வளவு கடினம் என்பதை நான் அறிவேன். தடைகளை உடைத்தெறிந்து விட்டு தலைமைக்கு வரும் பெண்களுடன் நான் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வதுண்டு. மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எத்தகைய எதிர்காலத் திட்டங்களுடன் உள்ளார் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அல்-கொய்தாவை முற்றிலும் ஒழிக்க விரும்புகிறோம். அல்-கொய்தாவுக்கு தலைமையேற்றுள்ள ஜவகாரி பாகிஸ்தானில் இருப்பதாக நம்புகிறோம்.”

TAGS: