சமகால அரசியலைப் பேசும் கவிதைகள்

சமகால அரசியலைப் பேசும் கவிதைகள்

மு.சிவகுருநாதன்

                   ‘அனல் குடித்த மலர்’, ‘தீபங்கள் பூத்த கார்த்திகை வீதி’, ‘மஞ்சள் தட்டான்கள் அழிந்துவிட்டன’, ‘சிறகு முளைத்த மனிதன் கவிஞனாகிறான்’, ‘கீழ்வானத்துக்குத் தீமூட்டும் எரிநட்சத்திரம்’, ‘நாம் இன்னும் சந்திக்கவே இல்லை’, ‘ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்’ போன்ற பல தொகுப்புகளின் வழி அறியப்பட்ட கவிஞர் கோ.கலியமூர்த்தி கவிஞர் தெ.வெற்றிச்செல்வன் மூலம் எனக்கு அறிமுகம். ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன் (ஏஜிகே) தொகுப்பிற்காக அவரிடம் கட்டுரையொன்றைக் கேட்டிருந்தேன்.

         கவிஞர், சொற்பொழிவாளர், வாசகர் என்று இயங்கக்கூடிய தோழர் எழுத்தைவிட உரையை நிரம்ப நேசிக்கின்றவர். அவரது இருப்பை வாசிப்பு, கவிதை, உரைவீச்சு என்று மட்டுமே தகவமைத்துக் கொண்டுள்ளார். எனவே அவரால் ஏஜிகே குறித்தோ அவரது நூல் குறித்து பேசியவற்றை  மீண்டும் எழுதித்தர இயலவில்லை. இருப்பினும் பாவெல் சூரியனின் ‘காலங்களின் உரையாடல்’ நேர்காணல் தொகுப்பு நூல் குறித்து ‘உங்கள் நூலகம்’ மாத இதழில் எழுதிய நூல் அறிமுகக் கட்டுரையிலிருந்து ஏஜிகே நேர்காணல் குறித்த பகுதியை மட்டும் முக்கியத்துவம் கருதி நூலில் இணைத்தோம். அதிகம் வாசிக்கிறவர்; ஆனால் அதிகம் எழுதுவதில்லை. கவிதை, உரைகளில் மட்டும் கவனம் செலுத்துபவராக இருக்கிறார்.  

           சென்ற ஆண்டு கவிஞர் இரா.எட்வின் பணி ஓய்வுவிழாவில் கவிஞரை முதன்முதலாக நேரில் சந்தித்தேன். அப்போது ‘சொற்கள் கூடு திரும்பும் அந்தி’  என்ற அவரது புதிய கவிதை நூலை எனக்களித்தார். மீண்டும் சென்ற மாதம் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகப் பயிலரங்கில் மீண்டும் சந்தித்தேன். அவர் அளித்த நூல் குறித்து எதுவும் எழுதாத எமது சோம்பல் குற்றவுணர்ச்சியைத் தந்தது. இனியும் தாமதிக்க வேண்டாம் என்றே இந்தப்பதிவு.

         கோ.கலியமூர்த்தியின் கவிதைகள் வெறும் கவிதைகள் அல்ல; அரசியல் கவிதைகள். காதலைப் பேசினாலும் அதிலும் அரசியல் இழையோடுகிறது. அரசியல் என்றால் யாருக்கான அரசியல் என்ற கேள்வி முதன்மையானது. மக்களுக்கான அரசியலைப் பேசும் இவரது கவிதைகள் சூழலியல், தலித்தியம், பெண்ணியம் ஒடுக்கப்பட்டோருக்கான அரசியலைப் பதிவு செய்கிறது. பணிநிமித்தம் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் பணிபுரிந்தார். ஆனால் கவிதையின் அரசியல் இவரைச் செல்லமாகத் ‘துப்பாக்கிக் கவிஞர்’ என்று அழைக்க வைத்திருக்கிறது.

       திணை திரிந்த பின்காலனிய நிலக்காட்சிகள், பிரபஞ்ச நாடகத்தில் பின்னணியாகும் பருவங்களின் திரைகள், காதலின் சிறகேறிக் கடந்தகாலம் மீட்டும் நினைவின் அலைகள், சங்ககாலம் தொட்டு சமகாலக் கவிதைவரை மாறிவரும் அழகியல் வகைமைகளைச் சுவீகரித்தல் என முற்றிலும் புதிய மொழிப்பரப்பு என்று மட்டும் பின்னட்டைக் குறிப்பு சொல்கிறது. கவிதைக்கு எந்தவொரு முன்னுரையோ அணிந்துரையோ அறிமுக உரையோ இல்லை. ஆகவே, கவிதைகளின் வழி அவர் வாசகர்களுடன் நேரடியாக உரையாட களத்தில் இறங்கிவிடுகிறார்.

“செம்மஞ்சள் தட்டான்கள்

அழைத்துவரும்  கார்காலம்

கார்த்திகை தீபங்கள் அசைந்து அசைந்து

 கையைசைத்து விடைகொடுக்க

கார்காலம் செல்கிறது.”, (மழைகொண்டு வரும் மஞ்சள் தட்டான் பக்.83)

          மழை, பரிதி, வெயில், ஆறு, மணல், கார்காலம், கோடை, செம்மஞ்சள் தட்டான்கள், காக்கை, தவளை, நத்தை, மரவட்டை, பல்லி, சிட்டுக்குருவி எல்லாம் இவரது கவிதையின் பேசும்பொருளாக இருக்கிறது. எனவே இயற்கைக் கவிஞர் என யாரும் முடிவு செய்துவிட வேண்டாம். இவற்றின் ஊடாகவும் இந்தப் படிமங்களின் வழியேயும் இயற்கை அழிக்கப்பட்ட  ஏகாதிபத்திய அரசியலின் சிடுக்குகளை இக்கவிதைகள்  பேசுகின்றன. இதன்வழியே இவரது கவிதை அழகியலை உணரவும் முடியும். சுவர்ப்பல்லிகளின் மொழி அறிந்தவர்களின் (பக்.07) கதை இவ்வாறு சொல்கிறது.

“மேஜிக்கல் ரியலிஸக் கதை மட்டும் இல்லை

ஏகாதிபத்தியத்தின் கதையும் கூட”.  (பக்.07)         

 “குவாரியாகிவிட்ட குறிஞ்சியிலிருந்து 

மருதம் நோக்கி வந்த மயில்கள்”, – சாத்தான்கள் பிடியில் ஏதேன் தோட்டம் (பக்.115

“மழைகொண்டு வந்த மஞ்சள் தட்டான்கள் 

அழிந்த நிலமெங்கும் 

அரளிப்பூக்களை மலர்த்தும் 

பலவழிச்சாலைகள் 

மரணம் நோக்கி விரைபவை”, – பால்யத்தின் படிமங்கள் தட்டான்கள் (பக்.124)

          தொடுதலில் வண்ணங்களை இழக்கும் வண்ணத்துப்பூச்சியின் வனப்பைவிட  ‘தட்டான்களின் தளுக்கு’ கவிஞரை ஈர்க்கிறது. எனவே, ‘மஞ்சள் தட்டான்’ படிமம் நிறைய இடங்களில் வருகிறது. தட்டான்களின் அரசியலைப் புரிந்துகொள்ளவும் இடமிருக்கிறது.

“நானொரு மஞ்சள் தட்டானைத்

தேடிக்கொண்டிருக்கிறேன்.

வராத மழையை

மிக எளிதான அழைத்து வந்தன

செம்மஞ்சள் தட்டான்கள்

சிறகுகளில்

வண்ணத்துப் பூச்சிகள் வடிவானவைதான் எனினும்

தட்டான்களின் தளுக்கு அவற்றுக்கில்லை

ஈசல்கள் கார்காலத்தின் இன்னொரு அடையாளம்

ஆனால்

கருகி வீழும் அவற்றின் கதி

கண்ணீர் சிந்திக் கார்காலத்தை அவமதிப்பது

அது

கைக்கிளை அல்லது பெருந்திணைக் காமம்

தட்டான்கள்

இளம்பருவத்துப் பரவசம்”, (மழைக்கு ஆயிரம் சிறகுகள் பக்.136)

       கருப்பு, திருட்டு, பித்ரு, சத்ரு, கரவா கரைந்துண்ணும் புகழ்மாலைகளுக்கிடையே   காக்கை,

“செத்த மாட்டின் குடலானாலும்

விரதப் புனித உணவானாலும்

ஆகாரம் அவ்வளவுதான் எங்களுக்கு

கூவிக்கூவி அழைக்க வேண்டாம்

கூண்டுக்கிளிகள் அல்ல நாங்கள்”,

என்று சமத்துவம் பாடும் திராவிடப் பறவை (காக்கை) கவித உரக்கச் சொல்கிறது.

“காக்கைகளின் பாடல்கேட்டு

கவியெழுதக் கற்றவன் கோடையைச் சபிப்பதில்லை

கொண்டாடவே செய்கிறான்”, – காக்கைகள் பாடும் கவிதைகள் (பக்.45)

        பின்நவீனத்துவம் மற்றமைகள் (Others) மீதான கரிசனத்தை வலியுறுத்துகிறது. இங்கு மற்றமைகளைப் பேச நேர்ந்த காலம் கனிந்ததை விளக்கும் கவிதை இது.

“மற்றமைகளைப் பேச ஒரு  

மீச்சிறுவெளி  

அடரிருட்டு நடுவே ஓர்  

மின்மினிச் சிறகொளி

எத்தனை காலமாயிற்று

இங்கு வர”,  – மற்றமைகளைப் பேசுதல் (பக்.61)

           பண்பாட்டுப் படையெடுப்பின் தாக்கத்திற்கு  ஆளான நிலையில்,

“பட்டைச் சாராயத்துக்குப்

பழகிய குலசாமி”யின் ‘பசிமயக்கமும்’ (பக்.129)

“கிராமத்தில் இப்போது

நதியென்றால் சுடுகாடு

வயலென்றால்  ரியல் எஸ்டேட்

கண்நிறைந்த நீரோடு

கையாலாகாத

அம்மனின் பெயரில்தான்

அமைந்திருக்கிறது நகர்”, – அம்மனின் பெயர் கொண்டவள் (பக்.140) கவிதையில் பெயரளவில் இருக்கும் அம்மனின் இருப்பும் கேள்விக்குள்ளாகிறது.

       லோடு ஏற்றி ஓட்டிவரும் வாகனத்துக்குக் குட்டியானை என்று பேர் வைத்தவன் (பக்.13), நகரமெங்கும் அலைகின்ற குட்டியானைகள் (பக்.161),  களிறுகள் வெளியேறிய காடுகளில் கஞ்சாமணம் வீசுகிறது (பக்.15), நதிபெருகக் காத்திருக்கும் நாணல்கள் (பக்.11), குளத்துகோர் இரங்கற்பா (பக்.189), ஸ்மைலிகளின் மொழி (பக்.40), தவளைகளின் தாகத்தை முகில்கள் அறியும் (பக்.29), கடவுள்களின் கல்லரைத் தோட்டம் (பக்.132) போன்ற கவிதைகளின் பேசுபொருளை  தலைப்பே நமக்கு முன்னுரைக்கின்றன.

 “நெஞ்சோடு கிளத்தல் 

இளமையின் சலனம் 

மனத்தொடு புலம்பல் 

முதுமையின் தொடக்கம்”, (பக்.117)

      ‘மனத்தொடு புலம்பல்’ (பக்.117) இளமை X முதுமை முரண்பாட்டை மட்டுமல்ல, காதல் X கலகக்குரல் வெளிப்பாட்டையும் நிகழ்த்துகிறது.

“ஆறு குளம் நீர்நிலைகள்

அழிந்தகதை புலம்புவது

கடந்ததைத் தேடுகிற புலம்பல் இல்லை

அது

கார்ப்பரேட் காலத்தின் நுகர்வுவெறி

கைப்பற்றுவதற்கு எதிரான

கலகக்குரல்

அது காலத்தின் ஒப்பாரி”, (பக்.118)

“ஊரிழக்கும் வலி ஒரு ஊமைவலி

யாரிடத்தும்

பகிர்ந்துகொள்ள முடியாத

பால்கட்டிய மார்பின் வலி”, –  ஊரிழக்கும் வலி (பக்.113)  என்ற கவிதையில் ஒருவகையான nostalgia தன்மை காணப்படினும் மறுபுறம் சீழ்பிடித்த கிராமங்களைப் (பக்.54) பதிவு செய்கிறது.

“முடைநாற்றமடிக்கும் அந்த பால்யத்தின் நினைவுகள்

அக்கிப்புண்ணுக்குக் காவிமண் பூசியவை

வடுவுக்குள் உயிர்த்திருக்கும் ஆறாத காயங்கள்

சாதிவெறி பிடித்த நம் கிராமங்களின்

போலிக்கருணை அருவருப்பானது” (பக்.54) என்று சொல்லி,

“ஆயிரம் துயரங்கள் உண்டெனினும் நண்பா

அரவணைத்த நகரம் பெருங்கருணை மிக்கது

நனதிந்தச் சிறகுகளும் வானமும் அது தந்தது

கறைபடிந்த பால்யத்தைக் களைந்தபின்பே

நாமடைந்தோம்

பொதுவாகப் புழங்க ஒரு சிறுபரப்பை

சிறுபரப்பில் காலூன்றிச் சிறகுவிரித்துத்தான்

விரிவானம் அடைந்தன நம் குஞ்சுகள்”, (பக்.55) என்ற யதார்த்தச் சூழலும் பதிவாகிறது. வெகுதூரம் விலகி… (பக்.34) கவிதை ஏக்கம், யதார்த்தம் இரண்டையும் இணைத்தே பதிவு செய்கிறது.

        அகமும் புறமும் தமிழர் வாழ்வியல் நாணயத்தின் இருபக்கங்கள் ஆதலால், கூடலும் கூடல் நிமித்தமாக… (பக்.96), மீகாமம் (பக்.138), நீருக்கு காதல் புரியும் (பக்.159) போன்ற பல கவிதைகள்,

“கரையில்  காத்திருக்கும் கள்கலயம் போல்

பொங்கி நுரைக்கும் காமத்தை”, (பக்.97) அள்ளித் தருகின்றன. இத்துடன்,

“காவிரி கொள்ளிடம் இரண்டிலுமே நீரில்லை

சாரைசாரையாய் லாரிகள் ஊரும் கரைகளில்

அஞ்சலியாய்ப் பூத்தூவும் வேம்பின் கிளைகளில்

காகங்கள் பாடுகின்றன கோடையின் பாடலை

அத்தனைக் கசப்பு வழிகிறது பாடலில்”,  (பக்.160) என்று கவித்துவம் நிரம்பி வழியும் இக்கவிதையில் இன்றைய வாழ்வின் கசப்பு பதிவாகிறது.

“மடலேறுதலில் தொடங்கிய காதல் 

உடன்கட்டை ஏற்றுவதில் 

போய் முடிந்தபோது 

அடிமை விலங்குகளே ஆபரணம் ஆயின”, _ மௌனக் கவிதைகள் இறந்துவிட்டன (பக்.130) என்று காதல் சிதைந்த கதையுடன், கவிதையின் கதையும் பேசுபொருளாகிறது.  

         “மௌனம் என்பது என்பது தியானம் அல்ல; மரணம்”, (பக்.131) என்று சொல்லி

“கூச்சல்தான் கவிதை நமக்கு

மௌனக்கவிதைகள்

இறந்துவிட்டன”, (பக்.131) என்று அறைகூவி நவீனகவிதையின் இறப்பை அறிவிக்கிறது.

          பசி என்றால் பதற்றமடைந்து காதல், அன்பு, கருணை பாடும்  கவிதைகளின் நிலை யை கீழ்க்கண்ட கவிதை விவரிக்கிறது.  

“பக்தர்களுக்கு ஆசிவழங்கும்

பரிதாபமான கடவுளைப்போல

நீலம்பாரித்த விழிகளோடு

அணு உலைப் புற்று படர்ந்து

அலைகள் கதறும் கரைகளில்

செத்துக் கரையொதுங்குகின்றன”,  – கரையொதுங்கும் கவிதைகள் (பக்.19)  

         நவீன கவிதைகளில் அரசியல் தொனி, பிரச்சார நெடி இருக்கக்கூடாது என இலக்கணம் வகுத்த கூட்டம் தங்களது அரசியலின் ஓர் அங்கமாகவே இதைச் செய்தனர். மாற்று அரசியலை முடக்கும் எதிர் அரசியல் செயல்பாடாகவே  இதனைப் பார்க்க முடியும். அரசியலைப் பேசுவதுதான் தமிழ்க் கவிதையியல் கோட்பாடாக இருந்து வந்திருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக தோழர் கோ.கலியமூர்த்தியின் சமகால அரசியல் கவிதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.  

நூல் விவரங்கள்:

சொற்கள் கூடு திரும்பும் அந்தி –  கவிதைகள்

கோ.கலியமூர்த்தி

முதல் பதிப்பு: மே 2023

பக்கங்கள்: 194

விலை: ரூ. 220

வெளியீடு:

வேரல் புக்ஸ்,

6, இரண்டாவது தளம்,

காவேரி தெரு,

சாலிகிராமம்,

சென்னை – 600093.

அலைபேசி: 9578764322

மின்னஞ்சல்: veralbooks2021@gmail.com

பாரதிதாசன்: தமிழ் அறிவொளிக் கால, பின்காலனிய முன்னோடி

பாரதிதாசன்: தமிழ் அறிவொளிக் கால,  பின்காலனிய முன்னோடி

(‘புதுமலர்பாவேந்தர் பாரதிதாசன் ஆவணச்சிறப்பிதழ் அறிமுகம்)

மு.சிவகுருநாதன்

          ‘புதுமலர்’ இதழ் வள்ளலார், கவிஞர் தமிழ் ஒளி ஆகியோருக்கு முன்பு ஆவணச் சிறப்பிதழ் வெளியிட்டது. பாரதிதாசனின் பிறந்த (1891, ஏப்ரல் 29) மற்றும் நினைவு நாள் (1964, ஏப்ரல் 21) வரும் ஏப்ரல் மாதத்தினை ஒட்டி வெளியான இச்சிறப்பிதழில் ஜமாலன், ஈரோடு தமிழன்பன், கண.குறிஞ்சி, வே.மு.பொதியவெற்பன், எஸ்.சண்முகம், ஆ.தனஞ்செயன், இரா.முரளி, செந்தலை ந.கவுதமன், எல்.இராமமூர்த்தி, மணிகோ பன்னீர்செல்வம்  ஆகியோரின் பாரதிதாசன் குறித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

          பாரதிதாசனின் படைப்புகளை ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்த்து அரசே மலிவுப்பதிப்பாக வெளியிட வேண்டும். மகாராஷ்டிர மாநிலத்தில் மூடநம்பிக்கைகளுக்காகக் குரல்கொடுத்துப் போராடி, இந்து சனாதனவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட டாக்டர் நரேந்திர  தபோல்கரின் கோரிக்கையை ஏற்று அம்மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவந்ததுபோல், பாவேந்தர் பாரதிதாசன் நினைவாக, மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவரவேண்டுமென, இதழின் தலையங்கம் வலியுறுத்துகிறது.

        ‘தமிழ் நவீனத்துவ மரபில் பாரதியும் பாரதிதாசனும்”, என்ற கட்டுரையில் தமிழில் மறுமலர்ச்சிக் காலத்தில் இயங்கிய பாரதியும் பாரதிதாசனும் என்றாலும் பாரதி மறுமலர்ச்சியுடன் நின்றுவிட, பாரதிதாசனோ தமிழ் அறிவொளி இயக்கத்தின் முன்னத்தி ஏராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருப்பதை அவரது இலக்கிய இயக்கம் வெளிப்படுத்துவதாக உள்ளது,  என்று   ஜாமலன் புதிய பார்வைக் கோணத்தை முன்வைக்கிறார்.

    பாரதி சமஸ்கிருத தர்மாக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர். பாரதிதாசன் தமிழ் அறக் கோட்பாட்டை ஏற்றவர். இதனால் திருக்குறளில் உள்ள துறவறம், வீடுபேறு உள்ளிட்ட சமணம் சார்ந்த நம்பிக்கைகளைப் புறந்தள்ளி,  சமஸ்கிருத தர்மாக் கோட்பாட்டின் அடிப்படைகளான நால் வர்ணம், நால்வேதம், நான்கு ஆசிரமம், நான்கு நிலைகள் ஆகியவற்றை மறுத்து, முத்தமிழ், முக்கனி, முச்சங்கம், மூவேந்தர்கள், அறம், பொருள், இன்பம் என்ற மூன்று நிலைகள்   என்கிற தமிழ் அறக் கோட்ப்பாட்டை தனது காப்பியங்களில் எடுத்துரைப்பதை ஜமாலன் விரிவாக விளக்குகிறார்.

        தமிழர் நிலவளங்களைப் பாதுகாப்பதும் தமிழ் மொழி மீதான பண்பாட்டுத் திணிப்பை எதிர்ப்பதும் பாரதிதாசனின் முதன்மை நோக்கமாக இருப்பதால் அவரை தமிழ்ப் பின்காலனியத்தின் முன்னோடி என்று பேரா.இரா.முரளியின் கட்டுரை மதிப்பிடுகிறது.

        பாரதிதாசனுடான நினைவுகளைப் பகிரும் ஈரோடு தமிழன்பனின் ‘பாவேந்தர் – சில நினைவுகள்’ கட்டுரையில் பெரியாரியத் தாக்கம் இருந்த காரணத்தினால் பொதுவுடையாளர்கள் பாரதிதாசனை உரிய இடத்தில் வைத்துப் பார்க்கவோ, பாராட்டவோ முன்வரவில்லை என்கிறார். பாரதிதாசன் வீட்டை அடமானம் வைத்து ‘பாண்டியன் பரிசு’ காவியத்தைத் திரைப்படமாக்க முயன்று ஏமாற்றங்களால் உடல்நலம் குலைந்துபோனதையும் எடுத்துக்காட்டுகிறார். இக்கட்டுரையில் பாவேந்தர் இறந்த நாள் தவறாக உள்ளது. (21.04.75  அல்ல 21.04.64) புதுவை முதல்வர் சுப்பையா என்றும் உள்ளது. அதுவும் தவறு. இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான வ.சுப்பையா (1911-1993) என்று இருக்க வேண்டும்.

         சீர்திருத்தக் கவி, தமிழ்த் தேசிய கவி, பொதுவுடைடைமைக் கவி, பிரபஞ்சக் கவி போன்ற பாரதிதாசனின்  சிந்தனைப் பரிமாணங்களையும் அவரது கவிதைகளில் உள்ள சில முரண்பாடுகளையும் விளக்குகிறது தோழர் கண.குறிஞ்சியின் கட்டுரை.

       ‘மணிக்கொடி’ இதழில் எழுதிய பாரதிதாசனை நவீன இலக்கிய உலகம் பொருட்படுத்தவில்லை, என்கிற சுகுணா திவாகரின் கருத்தை பகுதி உண்மை என்று சொல்லும் தோழர் வே.மு.பொதியவெற்பனின் கட்டுரை (பாரதிதாசனும் புதுமைப்பித்தன்), இதன் பொருட்டு பேரா. ய.மணிகண்டன், தி.க.சி., இளங்கோ கிருஷ்ணன், தமிழவன் போன்ற தரப்புகளை இடையீடு செய்து, பாரதி பரம்பரை, பெரியார் பரம்பரை இரண்டிலும் ஒருசேர இயங்கிய பாரதிதாசனுக்கும் மணிக்கொடியாளர்களுக்கும்  இடையிலான உடன்பாடு மற்றும் முரண்பாடுகளின் வெவ்வேறு தரப்புகளை தமது வழக்கமான பாணியில் மேற்கோளிடுகிறார். 

         பாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பு’ மூலம் ‘தமிழ்’ என்ற சொல் அவரது கவிதைகளின் இயற்கூறாகவும் விளங்குவதையும் ‘தமிழ்’ என்ற குறியீட்டை கவிதையாடலின் பரப்பில் நீட்சி கொள்ளச் செய்வதையும் நவீன இலக்கிய விமர்சகர் எஸ்.சண்முகம் எடுத்துக்காட்டுகிறார். இயற்கையின் எண்ணிலியான அசைவுகளை பல்வேறு காட்சிகளாக பிரதியாக்கம் செய்திருக்கும் ‘அழகின் சிரிப்பு’ தமிழின் மொழிபிம்பத்தை அகவயப்படுத்தியுள்ளது என்றும் கூறுகிறார்.

        “வட்ட மேசையில் சுயமரியாதை இதழியலின் இருக்கை” என்ற் பேரா.மணிகோ பன்னீர்செல்வத்தின் கட்டுரையில் சுயமரியாதை இதழியலின் படைக்கலன்களின் ஒன்றான ‘புதுவை முரசையும்’  பாரதிதாசனின் எழுத்தாக்கங்களையும் எடுத்துரைக்கிறது. ஸ்வராஜ்யம் பற்றிய சுயமரியாதை நோக்கு, நாட்டைச் சுற்றிய ராட்டை, ஆணவச் சுதந்திரம் அடைந்துவிட்டோர், வகுப்புவாரி உரிமையிலிருந்து இரட்டை வாக்குரிமை, வட்ட மேசையில் படர்ந்த  சதுர்வருணம் போன்ற தலைப்புகளில் பாரதிதாசனது பெரியாரியப் பார்வை வெளிப்படுத்தப்படுகிறது.     

       பாரதியார் வழியாக பெரியாரை வந்தடைந்த பாரதிதாசன, பரந்த அறிவுப்பார்வை கொண்டு உலகை அணுகி கவிதைகளில் புதிய போக்குகளைக் கையாண்டதையும் ‘பெரியார் ஒளியில் பாரதிதாசன்’ என்கிற செந்தலை ந.கவுதமன் கட்டுரை அவரது படைப்பு வழிநின்று நிறுவுகிறது.

        கவிதை என்பது வெறுமனே அகவுணர்வு வெளிப்பாட்டிற்கான வடிகால் சாதனமாக அமைவது என்னும் நிலைப்பாட்டிலிருந்து வேறுபடும் வகையில், சமுதாயத்தைப் பாதுகாக்கப் போராடுவோரின் ஆயுதமாகக் கவிதையின் பரிமாணத்தை வலிமைமிக்கதாக மாற்றியதை பாரதிதாசனின் சாதனையாக முனைவர் ஆ.தனஞ்செயன் கட்டுரை குறிப்பிடுகிறது.

       பேரா.எல்.இராம்மூர்த்தியின்  ‘பாவேந்தர் தமிழ்’ கட்டுரை எனும் கட்டுரை, மொழியியலின் ஊடாக பாரதிதாசனின் கருத்தியல்  கோட்பாடு அணுகுமுறைகளை ஆராய்கிறது. நாம் X பிறர், தெற்கு X வடக்கு, தமிழ்  X பிறமொழிகள், நகரம் X கிராமம், மாற்றம் X பழமை, அறிவியல் விவசாயம் X பண்டைய விவசாயம், சந்தைப் பொருளாதாரம் X தேவை சார்ந்த பொருளாதாரம், வளர்ச்சி X நிலைத்தன்மை போன்ற இருமை எதிர்வுகளைக் கட்டமைக்கும் மொழியியல் கூறுகளை கட்டுரை எடுத்துரைக்கிறது.

          இன்றைய அரசியல் சூழலைக் கவனத்தில் கொண்டும் நவீன இலக்கிய உலகில் பாரதியைப் போன்று யாரும் அதிகம் உச்சரிக்காத பாரதிதாசனின் பல்வேறு நவீன முகங்களை வெளிப்படுத்தும் வகையில் ‘புதுமலர்’ ஆவணச் சிற்ப்பிதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அமைந்துள்ளது சிறப்பான ஒன்றாகும்.  

சோலை சுந்தரபெருமாளுக்கான வண்டல் விழா

சோலை சுந்தரபெருமாளுக்கான வண்டல் விழா

(நிகழ்வுப் பதிவு)

மு.சிவகுருநாதன்

           சோலை சுந்தர பெருமாள் குடும்பத்தினரும் ‘பேசும் புதியசக்தி’ இதழும் இணைந்து ஏற்பாடு செய்த “சோலை சுந்தர பெருமாள் நினைவு சிறுகதைப் போட்டியின் பரிசளிப்பு விழா” 11/05/2024 அன்று மாலை 6:00 மணிக்கு திருவாரூர் செல்வீஸ் டைமண்ட் ஹாலில் நடைபெற்றது. மறைந்த தோழரை நினைவுகூறவும் அவரது படைப்புகள் குறித்து விவாதிக்கவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்நிகழ்வு களம் அமைத்துத் தந்தது எனலாம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பலர் சோலை சுந்தரபெருமாளைக் கொண்டாடிய இவ்விழாவில் பங்கேற்று அணிசெய்தது நிகழ்வின் சிறப்பாகும்.

          சோலையின் நெருங்கிய  நண்பரும் திரு.வி.க. அரசுக்கல்லூரியின்  தமிழ்த்துறைத் தலைவருமான பேரா.தி.நடராசன் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து அவரது சிறப்புரையில் சோலையின் வண்டல் எழுத்துகள் குறித்தும் செந்நெல் நாவல், கீழத்தஞ்சை விவசாயத்தின் அழிவைப் பேசும் பால்கட்டு, எல்லைப் பிடாரி நாவல்கள் குறித்தும் அவர் பெற்ற பரிசுகள் குறித்தும் விரிவாகப் பதிவு செய்தார். வண்டல், வண்டல் மண் மற்றும் மக்கள் மீதும் அவர் கொண்டிருந்த பெருவிருப்பத்தை எடுத்துக்காட்டினார். செந்நெல், மரக்கால், தாண்டவபுரம் ஆகிய நாவல்களை எழுத அவர் மேற்கொண்ட கள ஆய்வுகளையும் எடுத்துச் சொன்னார்.

        தமுஎகச  மாவட்டத் தலைவர் மு.சௌந்தரராஜன் தனது சிறப்புரையில், பல நாவல்களையும்  நிறைய சிறுகதைகளையும் எழுதியிருக்கும் சோலை குறித்து பலருக்குத் தெரியாது. அவரது ஊரில் நடந்த இறுதியஞ்சலி நிகழ்வின் மூலம் அந்த ஊர் மக்களே அறிந்துகொண்டனர். இந்நிகழ்வு தொடரவேண்டும். அடுத்த ஆண்டிலிருந்து  தமுஎகச வையும் இணைத்து இவ்விழாவை எடுக்க வேண்டும் என்றும் பேசினார்.

           தமுஎகச  முன்னாள் மாவட்டச் செயலாளர் இரெ.பகவான்ராஜ் தனது சிறப்புரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களுடன்  நெருக்கமான நட்பு கொண்டிருந்தார்  எனவும்,  அவர் எப்போது வந்தாலும் சோலை பற்றியும் அவரது குடும்பத்தைப் பற்றியும் விசாரிப்பார் என்றும் சோலை குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். ‘தாண்டவபுரம்’ நாவல் மதவெறியர்களால் எரிக்கப்பட்டபோது திருவாரூர் பேருந்து நிலையத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேரா. அ.மார்க்ஸ் அவர்கள் பங்கேற்றதையும் நினைவுபடுத்தினார்.

         பின்னர் எனது சிறப்புரையில்,   10 நாவல்கள், 6 குறுநாவல்கள், 78 சிறுகதைகள் ஆகியவற்றை எழுதியிருக்கும் சோலை சுந்தரபெருமாள் ‘செந்நெல்’ நாவலுக்குப் பிறகு மக்கள் அரசியல் பேசும் படைப்புகளை எழுதினார். அதனால்தான் என்னவோ சாகித்ய அகாதெமி போன்ற விருதுகள் அவருக்கு கிடைக்கவில்லை. வண்டல் எழுத்து என்ற வகையினத்துடன் வண்டல் உணவு என்று அதன் பண்பாட்டு அடையாளங்களை நிறுவ, மீட்டெடுக்க முயன்றார். தஞ்சை வட்டார வழக்குச் சொல்லகராதியைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அது இன்னும் அச்சு வடிவம் பெறவில்லை.

             ஒருங்கிணைந்த தஞ்சை மண்ணின் சிறுகதைகளை கா.சி.வேங்கடரமணி முதல் யூமா. வாசுகி வரை, உ.வே.சாமிநாதய்யர் முதல் சிவகுமார் முத்தய்யா வரை என இரு தொகுதிகளைக் கொண்டு வந்தார். தனது படைப்புகள் குறித்த விமர்சனங்களுக்கு உரிய மதிப்பளித்தார். செந்நெல், தப்பாட்டம் நாவல் குறித்த விமர்சனங்களைத் தொகுத்து நூலாகவும் வெளியிட்டார். தன்மீது மட்டும் ஒளிவட்டம் பாய்ச்சாமல் இளைஞர்களின் எழுத்தை ஊக்குவித்துப் பாராட்டினார். இந்தச் சிறுகதைப்  போட்டிக்குத்  திருவாரூர் பகுதியிலிருந்துகூட நிறைய எழுத்தாளர்கள் கலந்துகொண்டிருப்பது தெரிகிறது. அவர்களை உற்சாகப்படுத்த சோலை போன்ற ஆளுமை இன்றில்லை.

        கல்விப்புலத்தில் பணியாற்றியதால்  அதன் மீதான விமர்சனங்களை பல்வேறு சிறுகதைகளில் எழுதியுள்ளார். பண்ணையாரான வாத்தியார் காலை முதல் விவசாயப் பணிகளை மேற்பார்வையிட்டு விட்டு 10 மணிக்குப் பள்ளிக்குச் சென்றதும் கட்டுரை நோட்டுக் கட்டுகளைத் தலையணையாக்கித் தூங்குவதை ‘தூண்’ கதையில் பதிவு செய்து எதிர்ப்பைச் சம்பாதித்தார். இதைப்போன்ற 14 கதைகளை ‘வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். (பாரதி புத்தகாலயம், செப்.2011)

        ‘கோக்காலி’ என்றொரு சிறுகதை எழுதினார். கோக்காலி என்பதை வைக்கோலை அள்ளும் ஒரு வேளாண் கருவி; அதாவது வளைந்த குச்சி.  உங்கள் ஊரில் இதற்கு என்ன பெயர் என்று வினவுவார். அவற்றைப் பற்றிய தரவுகளைத் திரட்டுவதிலும் ஆராய்வதிலும் ஆர்வம் காட்டுவார்.  அவருடைய படைப்புகள் பரவலாகச் சென்றடைய அவற்றை நாட்டுடைமையாக்க வேண்டும், என்றும் கூறினேன். 

          போட்டிக்கு வந்திருந்த 200க்கு கதைகளில் பலகட்ட பரிசீலனைக்குப் பிறகு 25க்கு மேற்பட்ட சிறந்த கதைகளைத் தேர்வு செய்தோம். பார்த்தவுடன் நிராகரிக்கும் மோசமான கதைகளும் பல நல்ல கதைகளும் இருந்தன. மூன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய நிலையில் இது கடினமான ஒன்றாகவே இருந்தது. பரிசு பெற்ற கதைகள் ‘பேசும் புதியசக்தி’ இதழில் வரும் மாதங்களில் தொடர்ந்து வெளியாகும். 

        முதல்பரிசு பெற்ற வானவனின் ‘கூந்தாலிக்கூடு’ வெள்ளாமையையும் ஆடுகளையும் பாதுகாக்க கயிற்றுக் கட்டிலுடன்  நொச்சிக் குச்சிகளை வளைத்து தென்னங்கீற்று பாவிய காவலுக்குப் படுக்கும் ஒரு நடமாடும் கூடாரமாகும். இக்கதை விதைநெல் கோட்டைக் கட்டுதல், விவசாயம், ஊர்த் திருவிழா என்று கிராம வாழ்வை யதார்த்தமாகப் படம் பிடிக்கிறது.

        இரண்டாம் பரிசு பெற்ற கோ.சுனில் ஜோகியின் ‘ஓயி’ (வெள்ளம்) கதை சென்னை வெள்ளத்தையும் நீலகிரி கனமழைப் பொழிவை இணைக்கும் ஒரு அழகானக் கதையாகும். இன்று மனிதச் சமூகம் இயற்கையைப் பேரிடராக்க் கருதும் பொதுப்புத்திக்கு வந்துள்ளது. இம்மாதிரியான படைப்புகள் இயற்கை மற்றும் மனிதர்கள் மீதான நேசத்தைப் பேசுகின்றன.

       மூன்றாம் பரிசுபெற்ற புலியூர் முருகேசனின் ‘புரூதர் எனும் டால்ஃபின்’ மதக் கலவரங்கள், போர்கள் அதனால் பாதிக்கப்படும் குழந்தைகள், அகதிகள் பற்றிப் பேசும் fantasy கதையாக உள்ளது. பில்கிஸ் பானு 2002 லிருந்து நீதிக்காகப் போராடி வருகிறார். அவருக்கான நீதி இன்னும் கிடைத்தபாடில்லை. மதவெறியில் கொலையுண்ட அவரது சலீகா எனும் மூன்று வயது குழந்தையும் பிறக்காமலேயே  கொல்லப்பட்ட  குழந்தையும் இக்கதையின் கதாபாத்திரங்களாக வருகின்றன.

           இம்மூன்று கதைகளும் வெவ்வேறு சூழலை அடையாளம் காட்டும் வகையில் அமைந்தவை. தேர்வாகாத பிற கதைகள் மோசமானவை என்பதல்ல; அவற்றிலும் பல நல்ல கதைகள் இருந்தன, என்றும் கூறி இந்நிகழ்வை ஏற்பாடு செய்த அவரது குடும்பத்தினர், பேசும் புதியசக்தி ஆசிரியர் ஜெ.ஜெயகாந்தன், தமுஎகச, தகஇபெ தோழர்கள் அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தேன்.

          தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் பேரா.இரா.காமராசு அவர்கள் தனது தலைமையுரையில், சோலை முதலில் கலை இலக்கியப் பெருமன்றத்தில்தான் இருந்தார்.  அன்று அங்கிருந்த இறுக்கமான மொழிநடையும் இலக்கியமும் சோலைக்கு ஒத்துவரவில்லை. அதன்பிறகு தமுஎகச வந்தார். சோலை சுந்தரபெருமாள், சி.எம்.முத்து, உத்தமசோழன் ஆகிய மூவரும் சமகாலத்தில் தஞ்சை மண்ணின் படைப்பாளிகளாக இருந்தனர். வண்டல் மண் சார்ந்த மருதநில அரசியலைப் பேசியதால் பிறரைவிட சோலை முதன்மை பெற்றார்.

         டி.டி.கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா போன்றோர்களின் தத்துவ, வரலாற்று மொழிபெயர்ப்பு நூல்களை வாசித்து அவை குறித்து விவாதித்தும் தொடர்ந்து உரையாடியும் வந்தார். தன்னுடைய படைப்புகள் விரிவான உரையாடல்களையும் விவாதத்தையும் விரும்பினார். சோலை மாதிரியான எழுத்தாளர்களுக்கு விருது கிடைக்காது. அதற்கென பெரிய ‘லாபி’ உள்ளது. எனவே நாட்டுடைமை அவரின் வாசக தளத்தை விரிவாக்கும், என்றார்.

         பேரா.கி.நாச்சிமுத்து  திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியபோது சோலையைக் கொண்டு வண்டல் ஆய்வுகள்,  இருக்கை எனப் பெரிய முயற்சிகள் மேற்கொண்டார். அவை ஈடேறாமல் போய்விட்டன. அவர் இறுதிக்காலத்தில் பலவேறு உடல்நல மற்றும் வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்கொண்டார். இன்று குடும்பமும் குழந்தைகளும் நல்ல நிலையில் இருக்கும்போது அவர் இல்லை எனபது வருத்தம் தருகிறது, என்றும் குறிப்பிட்டார்.

          பரிசு பெற்ற மூவருக்கும் தமுஎகச எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்  பரிசு வழங்கிச் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது குறிப்பிட்டதாவது: 

          ஒரு படைப்பாளியை நான்கு அளவுகோல்களை வைத்து மதிப்பிடுவது  வழக்கம். இவை என்னுடைய அனுபவத்தில் சரியாகவே இருந்திருக்கின்றன.  சோலை சுந்தர பெருமாள் என்னும் எழுத்தாளர் எதை எழுதினார், எப்படி எழுதினார், யாருக்காக எழுதினார், யாராக இருந்து எழுதினார் என்ற கேள்விக்களுக்கான விடையே அவரை மகத்தான எழுத்தாளராக பறைசாற்றுகின்றன.

        தஞ்சை மண் ஏராளமாக எழுத்தாளர்களைப் பார்த்திருக்கிறது.  காவிரியாற்றில் சுழித்தோடும் நீர், இசை தொடர்பாக எழுதிக் குவித்தவர்கள் ஏராளம். இங்கு  நாட்டியத்தைச் சொல்லமாட்டேன், அது களவாடப்பட்டது.  இந்த மண்ணையும் மக்களையும் மொழியை அவர்கள் எழுதவே இல்லை. வேளாண் உற்பத்தியில் ஈடுபடாத பிராமண எழுத்தாளர்களுக்கு இந்த மண், மக்கள் பற்றிய ஒவ்வாமை இருந்தது. விதிவிலக்காக கு.ப.ரா.வின் இரு கதைகளில் மட்டும் வெளிப்படுகிறது (ஒன்று: பண்ணைச் செங்கான்). கு.ப.ராஜகோபாலன் கரிச்சான் என்ற பெயரில் எழுதியவர். அவரது சீடராக கரிச்சான் குஞ்சு என்ற புனைப்பெயரில் எழுதிய ஆர்.நாராயணசாமி, மௌனி போன்றவர்களிடம் இந்த ஒவ்வாமை இருந்தது. மௌனியின் படைப்புகள் குறித்து எழுத்தாளர் ஜாமலன் ‘மௌனியின் இலக்கியாண்மை’ (காலக்குறி பதிப்பகம்) எனும் நூலில் விரிவாக எழுதியுள்ளார். மௌனி தனது படைப்புகளை வெளியிட சமஸ்கிருதமும் ஆங்கிலமும்தான் ஓரளவு ஒத்துவருகிறது; தமிழ் போதவில்லை என்றெல்லாம் சொன்னவர்.

        ஆயிரக்கணக்கான பக்கங்களில் புராணங்களை எழுதி வைத்துள்ளனார். இவற்றைக் கேள்விக்குள்ளாக்க, அவற்றைப் படிக்க அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் சோலை துணிச்சலுடன் களமிறங்கி அடித்தார்.  ‘தாண்டவபுரம்’ நாவலில் திருஞான சம்மந்தருக்குத் திருமணம் செய்வித்து  சைவ மட ஆதீனங்களை நேரடியாக எதிர்கொண்டார். இது தொடர்பான வழக்கையும் எதிர்கொண்டார். எப்போதும் விவாதிக்கும் எழுத்திற்காகச் சண்டையிடும் நபராக சோலை விளங்கினார்.

                 கி.ரா. கரிசல் இலக்கிய வகைமையை உருவாக்கி அதன் பிதாமகனாக இருந்ததைப்போல வண்டல் இலக்கியத்தை உருவாக்க வேன்டும் என்று கனவு கண்டார். நடைமுறையில் அது சாத்தியமாகவில்லை. அதுகுறித்தும் நாம் ஆய்வு செய்ய வேண்டும், என்றும் சொன்னார்.

        சோலை படைப்புகளை அரசுடைமையாக்குவது அவரது குடும்பத்தினர் விருப்பத்தினரைப் பொறுத்தது. அவர்கள் விரும்பினால் அரசிடம் இது குறித்து பேசலாம். இன்று பதிப்பகங்கள் எழுத்தாளர்களுக்கு ‘ராயல்டி’ அளிப்பதில்லை. அச்சிட்டு விநியோகம் செய்யும் தங்களுக்கே முழு உரிமை என பதிப்பகங்கள் எண்ணுகின்றன. நூல்களை அரசுடையாக்கினால் பலர் பதிப்பிப்பார்கள். தமிழ் இணையக் கழகத்தில் மின்னூலாக வெளியாகும். படைப்பு பரவலான வாசகர்களைச் சென்றடையும். அரசு கொடுக்கும் பரிவுத் தொகையை இம்மாதிரியான விழாக்களுக்குப் பயன்படுத்தலாம், என்றார்.

       பரிசுபெற்ற வானவனின் ‘கூந்தாலிக்கூடு’ கதை எவ்வித அரசியலையும் பேசாது கிராம வேளாண் வாழ்க்கையை அதன்போக்கில் பதிவு செய்கிறது. கோ.சுனில் ஜோகியின் ‘ஓயி’ மழை, வெள்ளம், மின்வெட்டு, சார்ஜ் இல்லாத அலைபேசி என  வாசகர்களை பதற்றத்தில் வைத்து கதை சொல்கிறது. புலியூர் முருகேசனின்  ‘புரூதர் எனும் டால்ஃபின்’ உலக அரசியல் பேசுகிறது. போர், மதவெறிப் பாதிப்புகளை இறந்த குழந்தைகள் வாழும் கற்பனைத் தீவில் கதை நிகழ்த்தப்படுகிறது.

       இந்த விழாவை ஏற்பாடு செய்த அவரது குடும்பத்தினர், இவ்விழாவிற்கு ஓட்டுநராக இருந்து வெகு சிறப்பாக நடத்திக் காட்டிய  பேசும் புதியசக்தி ஆசிரியர் ஜெ.ஜெயகாந்தன், தமுஎகச தோழர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடை பெற்றார்.

           பேசும் புதியசக்தி முதன்மை ஆசிரியர் ஜெ.ஜெயகாந்தன் பேசும்போது, சோலை எனது தந்தை எழுத்தாளர் ராஜகுருவின் நண்பர். தந்தையைப் போன்ற அவர் எனக்கும் நண்பர். இலக்கியம், எழுத்துகள் குறித்து அவருடன் நேரம் போவதே தெரியாமல் உரையாடிய காலங்கள் உண்டு. கடந்த மூன்றாண்டுகளாக அவரது துணைவியாரைத் தொடர்புகொண்டு, சோலையின் பெயரில் எதாவது செய்ய வேண்டும் என்றுத்  தொடர்ந்த நச்சரிப்பின் விளைவாக இந்த விழா ஏற்பாடாகியுள்ளது.  இடங்கள், பரிசுத் தொகை, முக்கியமல்ல. 200க்கும் மேற்பட்ட கதைகளிலிருந்து 25 நல்ல கதைகளைத் தேர்வு செய்து அவற்றிலிருந்து மூன்று வெவ்வேறு பாணிகளுக்கு இந்தப் பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றை தேர்வு செய்த நடுவர் குழுவினர், போட்டியில் பங்கேற்றவர்கள், விழாவில் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

        பரிசு பெற வந்திருந்த வானவன் தனது குடும்பத்தினருடனும் கோ.சுனில் ஜோகி, புலியூர் முருகேசன் ஆகியோர் அவர்களது நணபர்களுடன் வந்திருந்தனர். விருதாளர்களின் ஏற்புரைக்கு தலா 5 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. மூவரும் சில நிமிடங்களில் ஏற்புரை வழங்கி விழாவை இனிதே நிறைவடைய உதவினர்.

         மரபு, இயற்கை ஆர்வலராகச் செயல்பட்டு மரம் நடுதல், விதைகள் வழங்குதல், இயற்கை வேளாண்மை என பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த நான் நண்பர்களின் வேண்டுகோளால் எழுத்துலகில் நுழைந்தேன். சென்ற ஆண்டு நான் எழுதிய ‘உரக்குழி’ எனும் நாவல் ஜீரோ டிகிரி பப்ளிஷிங் (புது எழுத்து பிரசுரம்) பதிப்பகத்தால் தேர்வுபெற்று நூலாக வெளிவந்தது, என்று வானவன்  குறிப்பிட்டார்.

       நீலகிரி தோத்தகிரிப் பகுதியிலிருந்து வரும் நான் வாழ்வில் மூன்றாவது முறையாக ரயிலில் பயணம் செய்து, முதல்முறையாக திருவாரூர் வண்டல் மண்ணை மிதித்துள்ளேன் என்றார் கோ.சுனில் ஜோகி. சோலையின் படைப்புகளை கல்லூரியிலிருந்தே படித்துவருவதாகவும் தற்போது அவரது ‘தப்பாட்டம்’ நாவலை ரயில் பயணத்தை வாசிப்பதாகவும் சொன்னார். சோலையின் ‘மண்ணாசை’ சிறுகதை குறித்தும் குறிப்பிட்டார்.

        மழை, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள், இயற்கையைப் பாதுகாப்பது பற்றியெல்லாம் இங்கு பேசினார்கள். இயற்கையைப் பாதுகாப்பது ஒருபக்கம் இருக்கட்டும். அந்தப் பேரிடர்களிடமிருந்து மீள நமக்குத் தரவேண்டிய பல்லாயிரம் கோடிப் பணத்தைத் தரமறுத்து, கண்துடைப்பாக 250 கோடியை மட்டும் கொடுக்கும் அரசியலை விமர்சிப்பதே எனது எழுத்தின் பணியாக இருக்கும், என்று புலியூர் முருகேசன் தனது ஏற்புரையில் தெரிவித்தார். 

          சோலையின் துணைவியார் திருமதி சு.பத்மாவதி அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது. விழாவில் புலவர் எண்கண் மணி, பேரா. க.ஜவகர், சிவகுமார் முத்தய்யா, பத்தரிக்கையாளர்கள் நவமணி, எஸ். நீதிராஜன்,சு.தியாகராஜன், சிம்ளி இரா. விஜயன், சு.பொன்முடி, சு.கமலநாதன்  மற்றும் பெயர் தெரியாத, உடனடியாக நினைவிற்கு வராத பலர் இந்நிகழ்வில்  கலந்துகொண்டனர்.  

     (கூட்டத்தில்    பங்கேற்ற நினைவுகளிலிருந்து எழுதப்பட்டது. விடுபடல்கள், சொற்களில் மாறுபாடு இருக்கலாம்.)

காந்தியின் ரத்த வாரிசுகள்

காந்தியின் ரத்த வாரிசுகள்

 (மகாத்மாவின் கதை தொடரின் பதினேழாவது அத்தியாயம்.)

மு.சிவகுருநாதன்

                 மகாத்மா காந்தி தேசத்தந்தை என்று புகழப்பட்டிருந்தாலும் அவரது பெயர் பிற்காலத்தில் குழப்பத்திற்கு உள்ளாகிவிட்டது. ஜவகர்லால் நேருவின் மகளான இந்திரா பிரியதர்சினி பார்சி (ஜொராஸ்டரியம்) சமயத்தைச் சார்ந்த பெஃரோஸ் காந்தி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஆண்வழிச் சமூக வழக்கப்படி இந்திரா பிரியதர்சினி இந்திரா காந்தி ஆனார். அவரது இரு மகன்களுக்கு ராஜூவ் காந்தி, சஞ்சய் காந்தி எனப் பெயரிட்டார். நேருவின் மறைவுக்குப் பின் இந்திரா காந்தி பிரதமரானார். இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்பு ராஜூவ் காந்தி பிரதமரானார். சோனியா காந்தி – ராகுல் காந்தி, மேனகா காந்தி – வருண் காந்தி என்ற பெயர் சூட்டல்கள் இவ்வாறு குழப்பம் ஏற்படக் காரணமாயிற்று. ஜவகர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் ஆகிய இருவரில் நேருவை அரசியல் வாரிசாக காந்தி தெரிவுசெய்த வரலாற்றின் பின்னணியில் இந்தப் பெயர்சூட்டல் தற்செயலாக நிகழ்ந்த ஒன்று. மேலும் மகாத்மா காந்தியின் ரத்த வாரிசுகள் தேர்தல் அரசியல் களத்தில் இல்லை. அவரது கொள்கை வாரிசுகள் சிலர் அரசியலில் பங்குபெற்றனர். காந்தியின் குடும்ப வாரிசுகள் ஆலமரத்தின் விழுதுகளாய் எங்கும் பரந்து விரிந்து அவரது பெருமையைப் பறைசாற்றும் விதமாக வாழ்கின்றனர்.

         காந்திக்கு  ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ் என நான்கு ஆண் குழந்தைகள். மூத்தமகன் ஹரிலால் 23 ஆகஸ்ட் 1888இல் பிறந்தார். இவர் பிறந்தவுடன் காந்தி பாரிஸ்டர் படிப்பிற்கு இங்கிலாந்து சென்றார். ஆடம்பர வாழ்க்கையை விரும்பிய அவர் மீது எளிய வாழ்வு திணிக்கப்பட்டதை ஏற்க இயலவில்லை. தந்தையைப் போலவே தாமும் பாரிஸ்டராக விரும்பினார். ஆனால் மேற்கத்தியக் கல்விமுறையை எதிர்த்துப் புதிய கல்விமுறையை உருவாக்கிய காந்தி இதற்கு இசையவில்லை. காந்தி தனது சோதனை முயற்சிகளுக்கும் அனைத்துப் பணிகளுக்கும் குடும்பத்தினரை ஈடுபடுத்தத் தயங்காதவர். இதுவே இருவருக்குமிடையே முரண்பாடுகள் தோன்றக் காரணமாக அமைந்தது. காந்தியின் கொள்கைகளைத் தனது செயல்பாடுகள் மூலம் விமர்சனத்திற்கு உள்ளாக்கினார். இவர்களுக்கிடையே நடந்த பாசப்போராட்டங்கள் ஒருவகையில் காவியத்தன்மை மிக்கவை.

       காந்தியின் விருப்பமின்றி 1906இல் குலாப் காந்தியை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரு பெண்கள் மூன்று ஆண்கள் என 5 குழந்தைகள்; இரு குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்தனர். ஹரிலால் தந்தைமீது கொண்ட பாசத்தால் மூத்த ஆண் குழந்தைக்கு காந்திலால் எனப்பெயரிட்டார். ரசிக்லால் சாந்திலால் ஆகிய இருவரும் சிறுவயதிலேயே இறந்தனர். ராணி, மனு என இரு பெண்களும் இருந்தனர். காந்திலாலுக்கு சாந்திலால், பிரதீப் என குழந்தைகளும் ராணிக்கு அனுஷ்ரியா, பிரபோத், நீலம், நவ்மாலிகா என நால்வரும் மனுகாந்திக்கு உர்மி என்ற குழந்தையும் பிறந்தனர்.

         1918இல் இன்ஃப்ளுயன்சா தொற்றால் குலாப் காந்தி மரணமடைந்தார். குழந்தை விதவையான குலாப்பின் சகோதரியை குமி அடலாஜாவை இரண்டாம் திருமணம் செய்ய நினைத்தார். அதுவும் நடைபெறவில்லை. அதன்பிறகு குடும்பத்தைவிட்டுப் பிரிந்து மது, மாது என தெருவோர வாழ்க்கையில் ஈடுபட்டார். பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் உண்டு. அது தொடர்பான வழக்கறிஞர் அறிவிக்கையில் 1915 முதல் பிரிந்து வாழ்வதை காந்தி உறுதிப்படுத்தினார்.  ஹரிலால் 1947 வரை அவ்வப்போது காந்தியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். அவரை மனந்திருந்தி வாழ காந்தியும் பெருமுயற்சி மேற்கொண்டார். ஆனால் அவையனைத்தும் தோல்வியில் முடிந்தன.  காந்தியின் சொற்களை அவர் துளியும் செவிமெடுக்கவில்லை. காந்தி ஹரிலாலுக்கு எழுதிய கடிதங்களில் குடிப்பழக்கம், மோசமான நடத்தைகளைக் கண்டித்தார். ஹரிலால் காந்தி ஒருகட்டத்தில் குடும்பத்தை விட்டுப் பிரிந்தார்.

        1936இல் அப்துல்லா காந்தி என்ற பெயருடன் முஸ்லீம் மதத்தைத் தழுவினார். சில ஆண்டுகளில் மீண்டும் இந்துவானார். காந்தி அந்நியப் பொருள்களைப் புறக்கணிக்க இயக்கம் நடத்திய நிலையில் இவர் அந்நியப் பொருள்களை விற்பனை செய்தார். விடுதலைப் போராட்டத்தைவிட ஹரிலால் காந்தியைச் சமாளிப்பது கூடுதல் பிரச்சினையாக இருந்ததை காந்தி தமது கடிதத்தில் குறிப்பிடுகிறார்.  ஹரிலாலின் மகள் மனுபென் காந்தி 1943 முதல் காந்தியின் உதவியாளராக இருந்தார். காந்தி என் தாய் (Bapu My Mother) எனும் நூலை எழுதினார். காந்தி படுகொலைக்குப் பின் குஜராத் பவநகரில் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை நடத்தி, தனது 40 வயதில் காலமானார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இவரது நாட்குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டு வெளியானது.

       காந்தியின் இறுதிச் சடங்கில் ஹரிலால் அலங்கோலமான அடையாளத்துடன் கலந்துகொண்டார். அவரை அடையாளம் காணமுடியாத அளவிற்கு மோசமாக இருந்தது. அதன்பிறகு எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. நான்கு மாதங்களுக்குப் பிறகு ஜூன் 18, 1948இல் பம்பாயில் உள்ள முனிசிபல் மருத்துவமனையில் 55 வயதில் காசநோயால் இறந்தார். பம்பாய் காமாதிபுராவில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் காந்தியின் மகன் என்று அங்கு யாரிடமும் கூறவில்லை. இறந்தபிறகு அவரது பையில் கிடைத்த ஆதாரங்களில் அடிப்படையில் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

       அவரது பேத்தி நீலம் பரீக் Ganghiji’s Lost Jewel: Harilal Gandhi என்ற நூலில் அவரது வாழ்க்கையை எழுதினார். இதனடிப்படையில் எடுக்கப்பட்ட பெரோஸ் அப்பாஸ் கானின் Gandhi, My Father என்ற திரைப்படம் காந்தி – ஹரிலால் உறவுச் சிக்கல்களைப் பேசுகிறது. காவியத்தன்மையுடைய இந்த தந்தை-மகன் உறவைப் பற்றி பல்வேறு படைப்புகள் எழுதப்பட்டுள்ளன. இவரது வாழ்வின் முற்பகுதியை ஹரிலால் த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று கலைச்செல்வி தமிழில் நாவலாக எழுதியுள்ளார். ‘இரண்டு தந்தையர்’ எனும் சுந்தர் சருக்கையின் நாடகத்தை சீனிவாச ராமானுஜம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 

        பிப்ரவரி 10, 1940இல்  பிறந்த ஹரிலால் காந்தியின் பேரன் சாந்திலால் காந்தி ஓர் புகழ்பெற்ற இதய மருத்துவர். 1967இல் அமெரிக்கா சென்று அங்கேயே குடியுரிமை பெற்றுத் தங்கினார். 2012 கான்சாஸ் மாகாணப் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார். காந்தியின் வழித்தோன்றல் என்று சொல்லி இவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவில்லை. ஒர் இதய மருத்துவர் என்று குறிப்பிடப்படுவதையே  பெரிதும் விரும்பினார். இவர் ஜனவரி 12, 2015இல் காலமானார்.

       இரண்டாவது மகன் மணிலால் காந்தி அக்டோபர் 28, 1982இல் ராஜ்கோட்டில் பிறந்தார். 1897இல் காந்தி இவரை தென்னாப்பிரிக்காவிற்கு உடன் அழைத்துச் சென்றார். ஃபீனிக்ஸ் குடியிருப்பிலும் டால்ஸ்டாய் பண்ணையிலும் இவரது இளமைப்பருவம் கழிந்தது. 1915இல் காந்தியிடன் இந்தியா திரும்பினாலும் குஜராத்தி மற்றும் ஆங்கில வார இதழான ஒப்பீனியன் பணிகளுக்காக 1917 மீண்டும் தென்னாப்பிரிக்கா அனுப்பப்பட்டார்.  அவ்விதழின்ஆசிரியராக 1920 முதல் மரணமடையும் வரை (1956) பணியாற்றினார். தண்டி அணிவகுப்பில் சென்ற 78 பேரில் ஒருவர். விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறை சென்றவர்.

      1926இல் தென்னாப்பிரிக்காவில் வாழும் பாத்திமா கூல் என்ற இஸ்லாமியப் பெண்ணைக் காதலித்தார். அவரை மணம்புரிய தந்தையின் அனுமதியை வேண்டினார். மதமாற்றம் அதர்மம் என்றும் நம்பிக்கைகள் ஆடை போன்று மாற்றிக்கொள்ளக் கூடியதல்ல என்ற காந்தி இதனை ஏற்க மறுத்தார். இந்தச் சிக்கலைத் தீர்க்க சேவாகிராமத்தில் வாழ்ந்த கிஷோர்லால் மஷ்ருவாலாவின் உறவுக்காரப் பெண் சுசீலாவை 1927இல் மணமுடித்து வைத்தார். இவர்களுக்கு சீதா (1928), எலா (1940) என்ற மகள்களும் அருண் (1934) என்ற மகனும் பிறந்தனர். இவர்களது வம்சாவளியினர் இன்றும் தென்னாப்பிரிக்காவில் வசிக்கின்றனர். அருண்லால் காந்தியும் எலா காந்தி சமூக, அரசியல் செயல்பாட்டாளர்கள்.

          சீதா துபேலியாவின் மகள் கீர்த்தி மேனன் ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழக மூத்த இயக்குநர், கல்வியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர் என பன்முக ஆளுமை கொண்டவர். அந்நாட்டின் கல்விக் கொள்கை உருவாக்கம், செழுமைப்படுத்துதலில் பங்காற்றியவர். இவரது மகள் சுனிதா மேனன் பத்தரிகையாளராக உள்ளார்.

            1940 ஜூலை 1இல் டர்பனில் பிறந்த எலா காந்தி படிப்பு முடிந்ததும்  மேவா ராம் கோபின் என்பவரை மணந்தார். இவருக்கு ஐந்து குழந்தைகள். இவர் சமூகச் செயல்பாட்டாளராகவும் அரசியல்வாதியாகவும் இருந்தார்.  நடால் பெண்கள் அமைப்பில் நிர்வாகக் குழுவில் பங்கேற்றார். நடால் இந்தியக் காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக முன்னணி போன்றவற்றிலும் பங்கேற்றார். நிறவெறிப்போரின் போது ஓன்பது ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 1994-2004 காலத்தில் தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். வாடகைத் தாய்களின் உரிமைகள், குடும்ப வன்முறைத் தடுப்பு போன்றவற்றில் இவரது பணிகள் அளப்பரியது. மகாத்மா காந்தி உப்பு யாத்திரைக் குழு, மகாத்மா காந்தி  மேம்பாட்டு அறக்கட்டளை ஆகியவற்றின் தலைவராகச் செயல்படுகிறார். சர்வதேச அமைதி விருது, பத்ம பூஷன் விருது போன்றவற்றைப் பெற்றுள்ளார்.    

        அருண் மணிலால் காந்தியுடன் வசிக்க  சேவாகிராமிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  1947இல் 13 வயதில்  மீண்டும் தென்னாப்பிரிக்காவிற்குப் பெற்றோருடன்  சென்றார். 1987 தனது மனைவி சுனந்தாவுடன் அமெரிக்கா சென்றார். அங்கு காந்தி பெயரில் அகிம்சை நிறுவனம் அமைத்தார். காந்தி மற்றும் அகிம்சை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார். 21 பிப்ரவரி 2007இல் இவர் மரணமடைந்தார். இவரது மகன் துஷார் காந்தி எழுத்தாளர் மற்றும்  சமூகச் செயல்பாட்டாளர் ஆவார். இவரது மனைவி சோனல் தேசாய் காந்தி; மகன் ராவல் காந்தி. மகளுக்கு கஸ்தூரிபா நினைவாக கஸ்தூரி காந்தி எனப் பெயரிட்டார். 1998இல் குஜராத் வதோராவில் மகாத்மா காந்தி அறக்கட்டளையைத் தொடங்கி அதன் தலைவராக உள்ளார். இந்த அறக்கட்டளை இன்று மும்பையில் இயங்குகிறது.

        துஷார் காந்தி 2005இல் தண்டி யாத்திரையின் 75வது நிகழ்விற்குத் தலைமையேற்றார். ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிராக பைலிருனாப் பாசியைப் பயன்படுத்தும் பரப்புரைக்கு நல்லெண்ணத் தூதுவராகச் செயல்பட்டார்.  காந்தியின் இறுதி நாட்கள், காந்திப் படுகொலை, சதி, விசாரணை, கபூர் ஆணையம், இந்து தீவிரவாதம் குறித்து Let’s Kill Gandhi எனும் நூலில் விரிவாக எழுதியுள்ளார். 2018இல் பசுப் பாதுகாப்புக் குண்டர்களைக் கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வென்றார். காந்தி அறக்கட்டளை ஆராய்ச்சி ஊழியர்கள் இந்தூர் கஸ்தூரிபா ஆசிரமத்தில் சேதமடைந்திருந்த கஸ்தூரிபாவின் நாட்குறிப்பைக் கண்டுபிடித்தனர். குஜராத்தியில் எழுதப்பட்ட இவற்றைப் பதிப்பித்தார். ‘The Lost Diary of Kastur, My Ba’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இவரது பணிகள் இன்றும் தொடர்கின்றன.

       மூன்றாவது மகன் ராம்தாஸ் காந்தி தென்னாப்பிரிக்கா நடால் காலனியில் ஜனவரி 2, 1897இல் பிறந்தார். 14 வயதில் தென்னாப்பிரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். இந்தியாவில் சம்ப்ரான் சத்தியாகிரகத்திலும் கைதானார். 1919இல் நவஜீவன் வார இதழின் ஆசிரியராகப் பணி செய்தார். பட்டேல் நிறுவிய பர்தோலி ஆசிரம நிர்வாகியாகவும் செயல்பட்டார். நிர்மலா காந்தியை மணந்தார். இவருக்கு கனு காந்தி எனும் மகனும் சுமத்ரா காந்தி, உஷா காந்தி என்ற மகள்களும் உண்டு.

          காந்தியின் வாழ்க்கைமுறை மற்றும் கோட்பாடுகள் பிறருக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியதை உணர்ந்திருந்தார். விடுதலைப் போராட்டத்தில்  நீண்டகாலம் சிறை வாழ்வை அனுபவித்தார். இதனால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. காந்தியின் விருப்பப்படி காந்தியின் இறுதிச் சடங்கைச் செய்தார். இளைய சகோதரர் தேவதாஸ் காந்தி சடங்கில் உடன் பங்கேற்றார். 1969 ஏப்ரல் 14, தனது 72வது வயதில் காலமானார்.

       காந்தியின் புகைப்படத் தொகுப்புகளில் அவரது கைத்தடியைப் பிடித்து இழுத்துச் செல்லும் சிறுவன் இடம்பெறும் படம் ஒன்று இருக்கும். அச்சிறுவன் காந்தியின் பேரன் கனு காந்தி. 1928இல் பிறந்த இவர் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்று, நாசா மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையில் விஞ்ஞானியாகப் பணிபுரிந்தார். இவருக்குக் குழந்தைகள் இல்லை.  2014இல் இந்தியா திரும்பிய இவர் நவம்பர் 7, 2016இல் தனது 87வது வயதில் சூரத் நகரில் காலமானார்.

          நான்காவது மகன் தேவதாஸ் காந்தி தென்னாப்பிரிக்காவில் மே22, 1900இல் பிறந்தார். விடுதலைப் போராட்டங்களிலும் காந்தியின் ஆசிரமப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியராகப் பணியாற்றினார். ராஜாஜியின் மகள் லெட்சுமி மீது காதல்வயப்பட்டார். அப்போது தேவதாசுக்கு வயது 28; லெட்சுமிக்கு வயது 15. ஐந்தாண்டுகள் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ளக் கூடாது என்று காந்தி இவர்களுக்கு நிபந்தனை விதித்தார்.  நிபந்தனையைப் பூர்த்தி செய்த்தும் இவர்களும் 1933இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ராஜ்மோகன் காந்தி, கோபாலகிருஷ்ண காந்தி, ராமச்சந்திர காந்தி ஆகிய மூன்று மகன்களும் தாரா காந்தி என்ற மகளும் பிறந்தனர். 1918இல் தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட தட்சணபாரத் இந்தி பிரச்சார சபாவின் (DHHPS) முதல் பிரச்சாரகர் இவரே. தென்னிந்தியாவில் இந்தியைப் பரப்புவதே இதன் நோக்கமாகும். ஆகஸ்ட் 3, 1957இல் இவர் இயற்கை எய்தினார்.

        ராஜ்மோகன் காந்தி 1935 ஆகஸ்ட் 7இல் பிறந்தார்.  எழுத்தாளர், வரலாற்று அறிஞர், ஆய்வாளர், பேராசிரியர், சூழலியர், சமூக ஆர்வலர் எனப் பன்முகங்கள் கொண்டவர். தென்னாசியா மற்றும் மத்தியக் கிழக்கு படிப்பிற்கான ஆய்வுப் பேராசிரியராக இருந்தார். அமெரிக்க இலினாஸ் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். உஷா காந்தியை மணந்தார். இவருக்கு சுப்ரியா, தேவதத்தா என இரு மகள்கள்.

        இந்தியாவின் நம்பிக்கைகள், நல்லிணக்கம், ஜனநாயகம் போன்றவை பாதுகாக்கவும் ஊழல் மற்றும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும் மாற்றத்திற்கான சிந்தனைகளை விதைத்து வருகிறார். பஞ்ச்கனி மலை வாழிடப் பாதுகாப்பு இவரது சூழலியல் பங்களிப்பாகும். ஹிம்மத் வார இதழ் மூலம் நெருக்கடிநிலைக் கொடுமைகளுக்கு எதிராகவும் மனித உரிமைகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார். 1989 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் ராஜூவ்காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.  பின்னர் மாநிலங்களவை உறுப்பினராத்  தேர்வானார். 2014இல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து கிழக்குத் தில்லித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 

      ராஜாஜி (Rajaji: A Life), பட்டேல் (Patel: A Life) வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. இவர் எழுதிய Understanding the Muslim Mind எனும் நூல் ‘இந்திய முஸ்லீம் தலைவர்கள் – விடுதலைப் போராட்டமும் அதற்கு அப்பாலும்’ என்றத் தலைப்பில் தமிழில் வெளியாகியுள்ளது. காந்தி ஏன் இன்னும் முக்கியமானவர்? – காந்தியத்தின் இன்றைய மதிப்பீடு, மோகன்தாஸ் – ஒரு மனிதன், மக்கள், பேரரசின் உண்மைக்கதை, பழிவாங்குதலும் நல்லிணக்கமும் – தென்னாசிய வரலாற்றைப் புரிந்துகொள்ளல், நவீன தென்னிந்தியா – 17 ஆம் நூற்றாண்டு முதல் நமது காலம் வரை, பஞ்சாப் – ஔரங்கசீப் முதல் மவுண்ட்பேட்டன் வரையிலான வரலாறு, கான் அப்துல் கஃபார் கான் – பக்தூன்களின் வன்முறையற்ற பாட்ஷா, எட்டு உயிர்கள் – இந்து முஸ்லீம் மோதல் பற்றிய ஆய்வு போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பின் போது புனையப்பட்ட செங்கோல் கதையை விமர்சித்து கட்டுரை எழுதினார். காந்தியத்தின் வழியில் என்றும் உண்மையை உரக்கச் சொல்லும் வரலாற்று ஆசிரியராகத் திகழ்கிறார்.

          காந்தியின் இன்னொரு பேரனான கோபாலகிருஷ்ண காந்தி ஏப்ரல் 22, 1945இல் பிறந்தார். இந்திய ஆட்சிப்பணி அலுவலராக 1968-1985 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பணி செய்தார். அதன்பிறகு இந்தியக் குடியரசுத் துணைத்தலைவரின் செயலாளாராகவும், பின்பு இந்தியக் குடியரசுத் தலைவரின் இணைச் செயலாளராகவும் பணிபுரிந்தார். தென்னாப்பிரிக்கா, நார்வே, இங்கிலாந்து போன்ற நாடுகளின் தூதராகப் பணியாற்றினார். இவர் தற்போது சென்னையில் வசிக்கிறார்.

         தத்துவ அறிஞரான  ராமச்சந்திர காந்தி ஜூன் 9, 1937இல் பிறந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பஞ்சாப், பெங்களூரு, விஸ்வபாரதி போன்ற பல்கலைக் கழகங்களில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார். ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் தத்துவத் துறையை உருவாக்கினார். காந்தியையும் ரமணரையும் தத்துவ நோக்கில் அணுகும் நூலை எழுதினார். சீதாவின் சமையலறை – நம்பிக்கை மற்றும் விசாரணை எனும் நூல் குறிப்பிடத்தக்கது. மேலும் சில நூல்களை எழுதியுள்ளார். இந்துத்துவ சக்திகள் பாபர் மசூதி இடிக்க வேண்டும் என்று பரப்புரை செய்தபோது இந்து மதத் தத்துவங்கள் அடிப்படையில் மறுப்பை வெளியிட்டார். 2002இல் குஜராத்தில் நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலையைக் கண்டித்தார். காந்தியின் வாரிசுகள் உண்மையின் பக்கம் நின்றதை இது எடுத்துக்காட்டுகிறது. இவரது மகள் லீலா காந்தி பின் காலனியக் கோட்பாட்டாளர் ஆவார்.

        ராமச்சந்திர காந்தியின் மகள் லீலா காந்தி (1966) கவிஞர், கல்வியாளர், கோட்பாட்டாளர் என பன்முகப் பரிமாணம் கொண்டவர். சிகாகோ, தில்லிப் பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக இருந்தார். பின் காலனியம் தொடர்பான ஆய்வுகளில் குறிப்பிடத்தக்கவர். Post-Colonial Studies என்ற ஆய்விதழின் இணையாசிரியாகவும்   Post-Colonial Text  என்ற மின்னணு இதழின் ஆசிரியராகவும் உள்ளார். Measures of  Home இவரது கவிதை நூலாகும்.

      பின் காலனிய நெறிமுறைகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகள் – ஒரு விமர்சன அறிமுகம் என்னும் நூல், இக்கோட்பாடுகளை அறிமுகம் செய்வதோடு பின் காலனியம், பின் நவீனத்துவம், பின் அமைப்பியல், மார்க்சியம், பெண்ணியம் ஆகியவற்றுக்கிடையேயான தொடர்புகளையும் விளக்குகிறது. மகாத்மா காந்தியின் அகிம்சை மற்றும் சைவ உணவுக் கோட்பாடுகள் பிற நாடுகளில் ஏற்படுத்திய தாக்கங்களை ஆய்வு செய்துள்ளார். பின் காலனிய நாடுகளின் மொழி, பண்பாடு போன்றவற்றையும் ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். இவரது ஆய்வுகளும் எழுத்துகளும் கல்விப்புலத்தை செழுமைப் படுத்துகின்றன.

      காந்தியின் ரத்த வாரிசுகளின் சில குறிப்பிடத்தக்க பணிகள் மட்டும் இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இன்றைய இந்திய அறிவுச்சூழலில் காந்தியின் கோட்பாடுகளையும் அவற்றைத் தாண்டியும் காந்தியின் வாரிசுகள் காந்தியத்தின் சாரம் மற்றும் மக்கள் சார்ந்த பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது வேறு எந்த ஆளுமைக்கும் கிடைக்காத பெருமையும் சிறப்புமாகும். அந்த வகையில் காந்தி கொடுத்து வைத்தவர் என்றே சொல்லலாம்.

 (தொடரும்…)

நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ் மே 2024

தஞ்சையில் பொதி 76 நிகழ்வு

தஞ்சையில் பொதி 76 நிகழ்வு

மு.சிவகுருநாதன்

தோழர் வே.மு.பொதியவெற்பன் அவர்களின் பவளவிழா நிறைவு நிகழ்ச்சி தஞ்சை பெசண்ட் அரங்கில் சிம்ளி, முக்கூடல், சிலிக்குயில் ஆகிய அமைப்புகளும் நண்பர்களும் இணைந்த 28/04/2024 முழுநாள் நிகழ்வாக நடந்தேறியது.

பேரா. அ.மார்க்ஸ், பேரா.இரா.காமராசு, பேரா. தெ.வெற்றிச்செல்வன், பேரா. இலக்குமி குமாரன் ஞானதிரவியம், பசு.கவுதமன், கடவூர் மணிமாறன், கவிஞர் நா.விச்வநாதன், களப்பிரன் போன்றோர் காலை அமர்வில் பொதியின் பணிகளையும் அவருடனான நட்பையும் எடுத்துரைத்தனர்.

மதிய அமர்வில் ஜமாலன், கண.குறிஞ்சி, பேரா. இரா.கந்தசாமி, பேரா. ந. முருகேச பாண்டியன், பேரா. கண்ணம்மாள் மனோகரன், புலியூர் முருகேசன், இரா.விஜயன் ஆகியோர் பொதியின் நூல்கள் குறித்த ஆய்வுரையை நிகழ்த்தினர்.

தோழர் ஸ்டாலின் சரவணன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். பொதி வழக்கம் போல பாடலுடன் சுருக்கமாக நன்றி கூறி நிறைவு செய்தார்.

நிகழ்வில் போதியின் நூல்கள் 20% கழிவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. 

எழுத்தாளர் சி.எம்.முத்து, சு.அழகேஸ்வரன் , பாரதி புத்தகாலயம் சிராஜூதீன், கருப்பு பிரதிகள் நீலகண்டன், யூமா வாசுகி, கோமகன், குடந்தை ஆடலரசன், திருநல்லம் அமானுஷ்யன், செ.சண்முகசுந்தரம் , இரா.செழியன், நடராஜன் சிவகுரு, மங்கையர்க்கரசி பிரகாஷ், சௌந்தர வதனா சுகன் போன்ற பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். 

முதுபெரும் தோழரை வாழ்த்த விழா எடுத்ததும் அதில் பலர் திரண்டதும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக அமைந்தது.

புதிய கல்வி நூல்கள் அறிமுகம்

இந்து தமிழ் திசை – திசைகாட்டி

புதிய கல்வி நூல்கள் அறிமுகம்

கலையும் கல்விக் கனவுகள்

கோபால்

          கல்வித் துறை சார்ந்து கூர்மையான விமர்சனக் கட்டுரைகளை எழுதிவருபவர் மு.சிவகுருநாதன். ‘இந்து தமிழ் திசை’ உள்பட பல்வேறு இதழ்களில் அவர் எழுதிய 27 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கல்வி தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு இடையிலான வேறுபாடுகள் தகர்ந்துவருவதாக நூலின் முன்னுரையில் கவலை தெரிவிக்கிறார்.

      பொதுத்தேர்வு அழுத்தம், அரசுப்பள்ளிப் பாடநூல்களில் உள்ள பிரச்சினைகள், வினாத்தாள் குளறுபடிகள் என அன்றாடக் கல்வித்துறைப் பிரச்சினைகள் சார்ந்த கட்டுரைகள் மட்டுமல்லாமல், கல்வி குறித்த புரிதலையும் பார்வையையும் விசாலப்படுத்தும் கட்டுரைகளும் நூலில் இடம்பெற்றுள்ளன.

நூல் விவரங்கள்:

கலையும் கல்விக் கனவுகள்

மு.சிவகுருநாதன்

வெளியீடு: பன்மை

விலை: ரூ.200

தொடர்புக்கு: 9842402010

நன்றி: இந்து தமிழ் திசை – திசைகாட்டி 23 ஏப்ரல் 2024

எஸ்.வி.ராஜதுரை 85:  தமிழ் அறிவுலகின் பேராளுமை

எஸ்.வி.ராஜதுரை 85:  தமிழ் அறிவுலகின் பேராளுமை

மு.சிவகுருநாதன்

சமகாலத் தமிழ் அறிவுச்சூழலை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டிருக்கும் அறிஞர் எஸ்.வி.ராஜதுரை. மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் போன்ற கோட்பாடுகளுடனும் அவற்றைத் தாண்டியும் அரசியல், கலை, இலக்கியம், சமூகம், பொருளாதாரம், மனித உரிமை சார்ந்த படைப்புவெளியில் மட்டுமல்லாது, களப் போராளியாகவும் இயங்கிவருகிறார்.

        நா.வானமாமலை, தொ.மு.சி.ரகுநாதன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, கோ.கேசவன், கோவை ஞானி, எஸ்.என்.நாகராஜன் என்கிற வரிசையில் தமிழ் அறிவுச்சூழலுக்குப் பாரிய பங்களிப்பை நல்கியவர் எஸ்.வி.ராஜதுரை. தமிழ் அறிவுலகுக்கு மக்கள் சார்ந்த கருத்தியல், அரசியல் தெளிவை தமது எழுத்துகளில் அவர் வழங்கியுள்ளனர். மேற்கண்டவர்களது எழுத்துகள், பார்வைக் கோணங்களில் வேறுபாடுகள் இருப்பினும் அடிப்படைகள் ஒன்றாக அமைந்தன. இந்த அறிஞர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

        சிறுகதை எழுதும் ஆர்வத்தில் இலக்கிய உலகில் நுழைந்த அவரை அரசியல் ஆட்கொண்டது. அவர் சார்ந்திருந்த இடதுசாரி இயக்கத்தின் இலக்கியப் படைப்பு குறித்த மிகக் கறாரான அணுகுமுறை அவரை கட்டுரை, மொழிபெயர்ப்புகளை நோக்கித் திருப்பிவிட்டது என்கிறார். ஒருவகையில் இது தமிழ் அறிவுலகத்திற்கு கிடைத்த கொடை எனலாம். 

       அரசியல், கருத்தியல் முரண்பாடுகளையும் தாண்டி ‘க்ரியா’ ராமகிருஷ்ணன், சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் போன்றோருடன் நட்பைப் பேணியவர் எஸ்.வி.ஆர். அவரே சொல்கிறபடி மிக மென்மையான நொறுங்கிவிடும் இதயம் கொண்டவர். பிறர் மீதான விமர்சனங்களுக்கு மென்மொழியை நாடுபவர்.              நோபல் பரிசை மறுத்த ழான் பால் சார்த்தர், புரட்சியின் இலக்கணமாகத் திகழ்ந்த அந்தோனியா கிராம்ஷி, போர்ச்சுகீசிய நாவலாசிரியர் ஹொஸே ஸரமாகோ போன்ற ஆளுமைகளைத் தமிழ்ச்சூழலில் விரிவாக அறிமுகம் செய்தவர் எஸ்.வி.ஆர்.

           மார்க்சியத் தத்துவம் சார்ந்து எழுதினாலும் அனைவருக்கும் புரியும் மொழியில் எளிமையாகவும் விரிவாகவும் உரிய சான்றாதாரங்களையும் கொண்டு எழுதும் பாணியைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.  அவரது உடல்நிலை, இணையரின் உடல்நிலை பாதிப்புகளைத் தாண்டி கருத்தியலும் எழுத்துகளும் தொடர்ந்து இயங்க வைத்திருக்கின்றன. 

         இந்தத் துன்பகரமான காலத்தில்தான் யானிஸ் வருஃபாகிஸின் பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம், இரத்தம் கொதிக்கும் போது ஆகிய மொழியாக்கங்களும்  ஸரமாகோ – நாவல்களின் பயணம்,  ரஷியப் புரட்சி – இலக்கிய சாட்சியம் – மறுபதிப்பு      போன்றவையும்  விரைவில் வெளியாகும் உச்சிவெயில்  தொகுப்பும் உருவாகியுள்ளன. இது ஒருபுறம் மனநிறைவளித்தாலும் இதன் பின்னணியில் அவர் பட்ட துயரங்கள் அளவில்லாதவை. இடதுகண் பார்வையிழப்பு, முகநரம்பு வலியோடும் மார்க்ஸ், கிராம்ஷி, காந்தி, அம்பேத்கர், பெரியார் அனுபவிக்காத உடல் உபாதைகளையும் கொடுமைகளையுமா நான் அனுபவித்துவிட்டேன் என்ற கேள்வியுடன் புதிய உத்வேகத்திலும் கடின உழைப்பிலும் இவை பிறந்திருக்கின்றன. அவரது வாழ்வில் நெடுங்காலமாக வலிகளுக்கு மருந்தாகப் படைப்பிலக்கியம் பயன்படுவதையும் குறிப்பிடுகிறார்.

        1848இல் 23 பக்கங்களில் வெளியான மார்க்ஸ் எங்கல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மொழிபெயர்த்து அனைவருக்கும் புரியும் வண்ணம் அறிமுகம், விளக்கக் குறிப்புகள் என விளக்கமான நூலை எழுதினார். அந்நியமாதல், இருத்தலியமும் மார்க்ஸியமும்  என்ற இருநூல்களும்  அந்நியமாதல் குறித்து எழுதியவை. அன்புள்ள டாக்டர் மார்க்ஸ் – சோசலிசப் பெண்ணியலாளர் ஷீலா ரௌபாத்தம் எழுதிய கடித மொழிபெயர்ப்பு நூல்,  ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம் போன்றவை வ.கீதா இணைந்து உருவாக்கியவை.    

       வ.கீதாவுடன் இணைந்து  பெரியார்: சுயமரியாதை சமதர்மம் என்ற விரிவான ஆய்வுநூல் இவரது கொடைகளுள் ஒன்று. அதன் தொடர்ச்சியாக பெரியார்: ஆகஸ்ட் 15 என்ற நூல் எஸ்.வி.ஆரால் எழுதப்பட்டு வெளிவந்தது. இவற்றின் துணைநூலாக பெரியார் மரபும் திரிபும், பெரியார், அண்ணா, கேசரி ஆகியோர் கட்டுரைகளை ‘ஆகஸ்ட் 15 துக்கநாள் – இன்பநாள்’ பதிப்பும் வெளிவந்தன. 2007-08இல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியாரியல் உயராய்வு மையத் தலைவராகப் பணியாற்றினார். உடல்நலனைப் பொருட்படுத்தாது தனது ஆய்விற்கும் எழுத்துப் பணிகளுக்கும் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்.  பெரியார், சுயமரியாதை இயக்க ஆய்வுக்கான கடின உழைப்பில் இடதுகண் பார்வையை இழந்தார்.

     ஆனந்த் டெல்தும்டேவின் ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும், அம்பேத்கரியர்கள் – நெருக்கடியும் சவால்களும்  ஆகிய நூல்களை மொழிபெயர்த்தார். இந்திய அரசமைப்பு அவையில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரையின் மொழியாக்கம் குறுநூலாக வெளியானது. மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தொடர்பான திரிபுகளுக்கு மறுப்பாக எழுதியவை ஆயிரம் பக்கங்களைத் தாண்டும்.    

     இந்து இந்தி இந்தியா, இந்து இந்தியா – அக்ரனியிலிருந்து அத்வானி வரை,  பதி பசு பாகிஸ்தான்  போன்ற நூல்கள் இந்திய அரசியல், சமூக, பொருளாதாரச் செயல்பாடுகளைக் கூர்மையாக விமர்சிப்பவை; மதவாத வெறுப்பரசியலை எதிர்த்து எழுதியவை.

         சாட்சி சொல்ல ஒரு மரம், சொல்லில் நனையும் காலம், தீவுச் சிறையில் விடுதலை இலக்கியம், பார்வையிழத்தலும் பார்த்தலும்,  கூண்டுப் பறவைகள் பறந்தன பாடின…  என கவித்துவமான தலைப்புகளில் கலை, இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார். கவிதை, நாவல், இசை ஆகியவற்றை விரும்பி ரசிக்கிறார். அவற்றை அவரது அரசியல் வழி பிறருக்கு அறிமுகப்படுத்துகிறார். உலகக் கவிதைகளை மொழிபெயர்த்து அறிமுகப்படுத்துவதில்  தணியாத ஆர்வமும் அவற்றை தனது கட்டுரைகளில் தகுந்த இடங்களில் குறிப்பிடும் லாவகமும் அவரது எழுத்தெங்கும் நிறைந்துள்ளது. சமகால அரசியலை குறியீட்டுத் தன்மையுடன் அணுகும் ஸரமாகோவின் நாவல்கள் குறித்து ஸரமாகோ – நாவல்களின் பயணம்   நூல் விவரிக்கிறது.  

       மரணதண்டனை எதிர்ப்பு, தடா, பொடா சட்ட எதிர்ப்பு, தலித்கள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக களப்போராளியாக களம் கண்டார். பலரது மரண தண்டனையிலிருந்து விடுபடவும் பல்லாண்டுகளாக சிறையில் வாடியோர் விடுதலை பெறவும் காரணமாக இருந்தார்.  

       பரிமாணம், இனி ஆகிய இதழ்களின் வழி தமிழ் இதழியலுக்குப் புதிய பாதை சமைத்தார். ஷோபியன்: காஷ்மீரின் கண்ணீர்க்கதை, அயர்லாந்தின் போராட்டம்  தேசியமும் சோசலிசமும், மனிதாபிமான ஏகாதிபத்தியம் –  தேசிய விடுதலை  போன்ற நூல்கள் தேசிய இனப்பிரச்சினைகளைப் பேசுபொருளாகக் கொண்டவை. மார்க்ஸ் 200 கட்டுரைகளைத் தொகுத்துள்ளார்.

         ஏப்ரல் 10 அன்று தனது 85வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்த எஸ்.வி.ராஜதுரை எழுத்துப் பணிகளிலிருந்து விடை பெறும் முடிவை அறிவித்துள்ளார். கடந்த நான்காண்டுகளாக முகநரம்பு வலியால் அவதியுற்று வரும் நிலையில் சில மாதங்களில் வாதை பலமடங்கு அதிகரித்துள்ளதால் எழுத்துப் பணியிலிருந்து ‘விடை பெறுதல்’ தலைப்பிலான அவரது கட்டுரை வெளியாகியுள்ளது.

         “ஒரு மனிதன் தனது தொழிற்பாட்டில் நிகழ்த்தும் கடைசிச் செயல்  (Swan song). இதனால் சமுதாயத்திற்கோ எழுத்துலகிற்கோ எந்த இழப்பும் இல்லை”, என இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்தார் எஸ்.வி.ஆர். இது அவருக்கான சுமை இறக்கமாக இருந்தாலும்  தமிழ் அறிவுலகத்திற்கும் சமூகத்திற்கும் பெரும் இழப்பாகவே அமையும். இனி இலக்கிய வெளியைப் பொறுத்தவரையில் வாசிப்பு மட்டுமே ஒரே உறவு, எப்போதேனும்  பிடித்த கவிதைகளை உடல்நிலை அனுமதிக்கும் அளவிற்கு மொழிபெயர்க்கலாம் என்று சொல்லியிருப்பது  சற்று ஆறுதலைத் தருகிறது.

(கட்டுரையின் முழு வடிவம்)

நன்றி: இந்து தமிழ் திசை – கருத்துப்பேழை – ஏப்ரல் 13, 2024

மணல் வீடு 50

மணல் வீடு 50

மு.சிவகுருநாதன்

           மணல் வீடு 50 வது இதழ் (ஜனவரி – மார்ச் 2024) நமது கைகளில். 160 பக்கங்களில் படைப்புகளின் பெட்டகமாக வெளிவந்துள்ளது. அட்டைகளில் Michel V. Meulenert இன் வண்ண ஓவியங்கள் அணி செய்கின்றன. இந்த இதழின் சிறப்பாக ஒன்றிரண்டை மட்டும் இங்கு எடுத்துக்காட்டலாம்.

        ‘தொ.ப.வின் பிரதியாக்கம்: ஓர் பண்பாட்டுப் பொருள்வாத அணுகுமூறை’ என்ற தோழர் ஜமாலனின் கட்டுரை ஆய்வறிஞர் தொ.பரமசிவனை திராவிடப் பண்பாட்டு ஆய்வாளர் என்ற பொதுப்புத்தி சார்ந்த பார்வையை விட்டு விலகி அவரை கோட்பாட்டுச் சட்டகத்தில் வைத்து அணுக முயற்சிக்கிறது.

      அஞ்சலி: ‘மகாத்மா ஸ்டுடியோ’ கிரஹாம்பெல் (1953-2006) என்ற எஸ்.செந்தில்குமாரின் சிறுகதை சிறப்பாக வந்துள்ளது.

       கார்லோஸ் ஃபுயண்ட்டஸின் சிறுகதை ஒன்றை (சக்-மூல்) பிரம்மராஜன் மொழிபெயர்த்துள்ளார். மேலும் பிரேசிலியக் கவிஞர் ஜோ கப்ராஜி மெலோ நெட்டோ கவிதைகள்  சிலவற்றையும் மொழிபெயர்த்து அவரைப் பற்றி அறிமுகத்தையும் தருகிறார் பிரம்மராஜன்.

      கியூப ஓவியர் மிகசெல்லின் வண்ண ஓவியங்களுடன் அவரைப் பற்றிய குறிப்பும் இடம்பெறுகிறது.

    கவிதையில் நிகழும் பாலின உருமாற்றத்தை பக்தி காலம் தொட்டு நவீன கவிதை வரை பெரு. விஷ்ணுகுமாரின் கட்டுரை ஆய்வு செய்கிறது.

     ‘அரக்கரும் குரக்கினமும்’ என்ற நாஞ்சில் நாடனின் சிறுகதை, சு.வேணுகோபாலின் ‘பனங்காய் மயிலை’ நெடுங்கதை மட்டுமின்றி  பலரது கவிதைகள் கிராம முன்னேற்றம் குறித்த பாலசுப்பிரமணியம் முத்துசாமி கட்டுரை, சா.தேவதாஸ் மொழிபெயர்ப்புகள் என இதழின் கனம் கூடியிருக்கிறது.

   சிற்றிதழ் விவரங்கள்:

மணல் வீடு இதழ் 50 (ஜனவரி – மார்ச் 2024)

பக்கங்கள்: 160   விலை: ₹ 200 

ஆண்டு சந்தா ₹ 800 

ஆசிரியர்: மு.ஹரிகிருஷ்ணன்

வெளியீடு:

களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்,

மணல்வீடு,

ஏர்வாடி,குட்டப்பட்டி – அஞ்சல், 636453,

மேட்டூர் – வட்டம், சேலம் – மாவட்டம்.

பேசி: 9894605371

மின்னஞ்சல்: manalveedu@gmail.com

இணையம்: http://www.manalveedu.org

கல்வியில் உறைந்து கிடக்கின்ற அரசியலையும் பேசும் நூல்

கல்வியில் உறைந்து கிடக்கின்ற அரசியலையும் பேசும் நூல்

(‘கலையும் கல்விக் கனவுகள்’ நூல் குறித்த அறிமுகம்)

முனைவர் பே.சக்திவேல்

         தனிமனித முன்னேற்றத்திற்கும், சமூக முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமைவது கல்வி மட்டுமே. அதனால்தான் தமிழ்ச்சமூக வரலாற்றில் கல்வி குறித்த சிந்தனை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து உயிர்ப்புடன் இருந்து வருகின்றது. அடிப்படையில் கல்வி என்றால் கற்றல் – கற்பித்தல் என்ற அளவில் மட்டும் நின்றுவிடுவதில்லை. அது சமூக, அரசியல், மத, பண்பாட்டியல், உலகமயமாக்கல் எனும் பல்வேறு காரணிகளால் பெரும் தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றது.

       சமகாலச் சூழலில் இந்தப் போக்கை நாம் இயல்பாகக் காணமுடிகின்றது. இந்த நிலையில், கல்விசார் சிந்தனையைத் தொடர்ந்து நுணுக்கமாக அவதானித்து எழுதிவரும் மு.சிவகுருநாதனின்   ‘கலையும் கல்விக் கனவுகள்’ எனும் நூல் மிகுந்த அக்கறையுடன் சமகாலச் சூழலில் கல்வியின் நிலை பற்றியும் அதன்மீது தொழிற்படும் சமூக, அரசியல் காரணிகள் பற்றியும் நுணுக்கமான விவாதங்களை முன்வைப்பதாய் அமைந்துள்ளது.  இருபத்தேழு கட்டுரைகளையும். நூலாசிரியர், கல்வியாளர் பா.கல்யாணியிடம் நிகழ்த்திய நேர்காணல், பேசும் புதியசக்தியில் வெளியான நூலாசிரியரின் நேர்காணல் என இரு நேர்காணல்களுடன் அடர்த்தியான உள்ளடக்கத்தைக் கொண்டமைந்துள்ளது. கல்வி, பாடத்திட்டம், வினாத்தாள் என பலவற்றையும் இவற்றினுள் உறைந்துகிடக்கின்ற அரசியலையும் பேசும் இந்நூல் அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல்.

       கலை என்பதற்குக் குலைதல் என்பது பொருள். களைதல் என்பதற்கு அகற்றுதல் என்பது பொருள். கலையும் கல்விக் கனவுகள் எனில் குலைந்து போகும் கல்விக் கனவுகள் எனவும், களையும் கல்விக் கனவுகள் எனில் அகலும் கல்விக் கனவுகள் எனவும் பொருள் கொள்ளலாம். இரண்டிலும் பின்னதே நூல் பொருளுக்குப் பொருத்தமாகத் தெரிகின்றது. நூலாசிரியர் இது பற்றிக் குறிபிட்டு நூல் தலைப்பு குறித்துத் தெளிவுபடுத்தியிருக்கலாம்.

நூல் விவரங்கள்:

கலையும் கல்விக் கனவுகள்

2024 / கட்டுரைகள்

மு.சிவகுருநாதன்

வெளியீடு:

பன்மை, நிலா வீடு, 2/396, பி, புரட்டாசி வீதி, கூட்டுறவு நகர், தியானபுரம் – விளமல், மாவட்ட ஆட்சியரகம் – அஞ்சல், திருவாரூர் – 610004.

விலை: ரூ.200

தொடர்புக்கு: 9842402010, 9842802010

நன்றி: பேசும் புதியசக்திஏப்ரல் 2024

புதிய புரிதலையும் நுணுக்கமான அவதானிப்புகளையும் கொண்ட கட்டுரைகள்

புதிய புரிதலையும் நுணுக்கமான அவதானிப்புகளையும் கொண்ட கட்டுரைகள்

(‘விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும்’ நூல் குறித்த அறிமுகம்)

முனைவர் பே.சக்திவேல்

               ‘Sabaltern Studies’ எனப்படும் விளிம்புநிலையினர் பற்றிய நோக்கு, ஆய்வு என்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மிக முக்கியமான அதிர்வுகளை ஏற்படுத்தியது எனில் அது மிகையன்று. சமூகத்தை மேலிருந்து கீழாகப் பார்க்கும்போது மேல்தட்டு, அடித்தட்டு என்றும் வட்டமாகப் பார்க்கும்போது மையம், விளிம்பு என்றும் பார்க்கின்ற பார்வை தமிழ் ஆய்வுலகில் மிக அடிப்படையான ஒன்றாக உள்ளது. அடித்தட்டு, விளிம்புநிலை குறித்த நோக்கே சமகாலச்சூழலில் தேவையானதாகவும் உள்ளது. சாதி, மதம் போன்றவற்றின் அடிப்படையில் வர்க்கங்கள், அரசியல் என்பன தொழிற்படுகின்ற நிலையில் அடித்தட்டு மக்கள், விளிம்புநிலை மக்கள் குறித்த அரசியல் பார்வை ஆகியன எத்தகைய அவதானிப்புக்குட்பட்டனவாய் இருந்து வருகிறது என்பதைச் சமகாலச் சூழலில் நுணுக்கமாக அணுக வேண்டியுள்ளது. மு.சிவகுருநாதனின்  ‘விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும்’ எனும் நூற்கட்டுரைகள் இவற்றைச் சிறப்பாகப் புலப்படுத்தி நிற்கின்றன.

       சோலை சுந்தரபெருமாள், தேன்மொழி, சிவகுமார் முத்தய்யா ஆகியோரின் நாவல் குறித்த விமரிசனக் கட்டுரைகளும், பிற்காலச் சோழப் பெருமித வரலாற்றெழுதிய நூல்களை மடைமாற்றிய நூல்கள், இந்துத்துவம் கட்டியெழுப்புகிற வரலாற்றுக்கு மாற்றாக அசல் வரலாற்றை எழுதுதல், சுயமரியாதை இயக்கம் இஸ்லாமை மாற்றாகக் கொண்டாடியமை, அவைதீக மரபுகளை அணுகும் பார்வைகள், கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மொழிபெயர்ப்பு நூல் என்பன குறித்த கட்டுரைகளுடன் இருபது கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்நூல் நூலாசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவது போல வாசகப் பார்வையாக அமைந்திருப்பினும்கூட, விளிம்புநிலை, சாதி, மதம், பொருளாதாரம் எனப் பல்வேறு சமூக அசைவியக்கங்கள் பற்றிய புதிய புரிதலையும் நுணுக்கமான அவதானிப்புகளையும் முன்வைத்துள்ளது. இலக்கியப்பிரதி, வரலாற்றுப் பிரதிகளை எவ்வாறு அணுக வேண்டும் என்கிற தெளிவை வாசகர்களுக்குப் புலப்படச் செய்கின்றது.  

நூல் விவரங்கள்:

விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும்

2023 / கட்டுரைகள் 

மு.சிவகுருநாதன்

நன்னூல் பதிப்பகம், மணலி – 610203

விலை ரூ.200

தொடர்புக்கு: 9943624956

நன்றி: பேசும் புதியசக்திஏப்ரல் 2024