பிரத்யேக

புல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்)

சில பல வருஷங்களாகவே அதிகமாக இருந்த மனச்சோர்வு ஒரு வழியாகக் குறைய ஆரம்பித்திருக்கிறது.. மூக்கின் அருகில் இருந்த நீர் இப்போது கழுத்து மட்டத்துக்குப் போயிருக்கிறது. ஒரு காலத்தில் நூலகங்களில் தவம் கிடந்தவன்தான்; ஆனால் வீட்டிலிருந்து ஒரு மைல் கூட இருக்காத நூலகத்துக்கு இரண்டு மூன்று மாதம் முன்னால்தான் போனேன் – ஐந்து வருஷம் கழித்து!  படிப்பதே குறைந்துவிட்டது. சின்ன எழுத்துக்களைப் படிக்க முடியாதது ஒரு மனத்தடையாக இருக்கிறது. பார்ப்போம், இந்த வருஷமாவது கொஞ்சம் படிக்க முடிகிறதா என்று!



நான் எழுதும் பதிவுகளில் பாதிக்கு மேல் புத்தகம் பற்றிதான். அதனால் புத்தகங்களுக்காக ஒரு தனி ப்ளாக் ஆரம்பிக்கலாம் என்று ரொம்ப நாளாக யோசனை. இன்று ஆரம்பித்துவிட்டேன்!

சிறந்த சிறுகதைகள், சிறந்த நாவல்கள் என்று இரண்டு ஸ்டிக்கி பதிவுகள் வைத்திருக்க யோசனை. படிக்கும்போது, நினைவு வரும்போது இந்தப் பதிவுகளில் சேர்த்துவிட எண்ணம்.

ஒரு ப்ளாகையே சமாளிக்கமுடியவில்லை, இதில் இன்னொன்றா என்று சில சமயம் தோன்றுகிறது. ஓடுகிற வரை ஓடட்டும்!

ஜெயமோகன் இந்த தளத்தைப் பற்றி தன் ப்ளாகில் புத்தகங்களைப்பற்றிய ஆர்வம் கொண்டவர்கள் வாசிக்கவேண்டிய தளம் என்று குறிப்பிட்டு எங்களை கவுரவித்திருக்கிறார்.

எங்கள் பிற தளங்கள்:

தொகுக்கப்பட்ட பக்கம்: சுய அறிமுகம்

என் சிறுகதை – காமம் காமம் என்ப

காமம் காமம் என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்,
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதாதை வந்தாங்கு,
விருந்தே காமம் பெருந்தோளோயே!

எனக்குப் பிடித்த கவிதைகளில் ஒன்று. எனக்கே கற்பூர வாசனை தெரியும் கவிதை.


சொல்வனம் இதழில் என் சிறுகதை ஒன்று – காமம் காமம் என்ப – வெளியாகி இருக்கிறது. சொல்வனம் ஆசிரியர்களுக்கு என் நன்றி!

இந்தச் சிறுகதையை எழுதி 15 வருஷமாவது இருக்கும். இளம்பெண்ணின் sexual awakening, ஆண்களை தனக்கு அடிமைப்பட வைக்க முடியும் என்று ஒரு பெண் உணர்வதை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். பல வருஷங்களுக்கு முன் படித்த, எம்.வி. வெங்கட்ராம் எழுதிய மங்கலாகவே நினைவிருக்கும் பெட்கி  சிறுகதைதான் inspiration. மேலே சொன்ன கவிதையை அப்போதுதான் படித்திருந்தேன். உடனே இந்தக் கரு தோன்றி எழுதினேனே.

ஆனால் சரியாக வரவில்லை என்று தோன்றியது, ஜெயமோகனிடம் காட்டினேன். சகிக்கவில்லை என்றார் 🙂 சரி இறந்த பிறகும் எம்விவி நொந்துவிடப் போகிறார் என்று அமுக்கிவிட்டேன். ஏதோ பழைய குப்பைகளை (backups) புரட்டிக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்டதும் தூசு தட்டினேன். நண்பர் சுந்தரேஷ் இதெல்லாம் ஒரு கதையா என்று அலுத்துக் கொண்டார். விசு கொஞ்சம் தாட்சணியம் பார்த்து சில இடங்கள் பரவாயில்லை, அம்மா பாத்திரம் நன்றாக இருந்தது, ஆனால் விஜயராகவாச்சாரியார் சபலப்படுவதும் நாயகி வெகு அலட்சியமாக அடுத்த கிழவன் என்று சிந்திப்பதும் திடீர் மாற்றங்களாக இருக்கின்றன என்று சொன்னார். இருந்தாலும் கரு வலுவானது என்று தோன்றியதால் சொல்வனம் இணைய இதழுக்கு அனுப்பினேன், என் அதிருஷ்டம், அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

படித்துப் பாருங்கள்! முடிந்தால் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்!

சரஸ்வதி தியாகராஜன் ஒலிவடிவமாக்கி இருக்கிறார், அவருக்கு என் நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

பிடித்த அறிவியல் சிறுகதை: Surface Tension

(மீள்பதிவு)

james_blishஜேம்ஸ் ப்ளிஷ் எழுதிய (James Blish) Surface Tension எனக்குப் பிடித்த அறிவியல் சிறுகதைகளில் ஒன்று.

விறுவிறுப்பான, கச்சிதமான கதை. எழுப்பும் கேள்விகளோ முடிவற்றன. அறிவியல் சிறுகதைக்கு வேறென்ன வேண்டும்?

எளிமையான, நேரான கதை. ஏதோ ஒரு கிரகத்தில் தண்ணீரில் வாழும் மிகச் சிறிதாக்கப்பட்ட, மனித இனம். அவர்களின் தலைவன் தண்ணீரின் எல்லைகளைத் தாண்டி ‘வெளியே’ செல்ல விரும்புகிறான். எதிரிகளை வென்று, நட்பு உயிரினங்களின் நம்பிக்கையைப் பெற்று, சூரியனை நேரடியாகப் பார்த்து ‘விண்வெளிப் பயணத்தை’ வெற்றிகரமாக நடத்துகிறான். ஆனால் அவன் வாழும் தண்ணீரின் எல்லைகளோ ஒரு ஆழமற்ற குட்டையின் (puddle) நீர்க்குமிழியின் எல்லைகள்தான். அந்தக் குமிழியின் ‘Surface Tension’-ஐ உடைத்து வெளியேறுவதுதான் அவன் சாதனை.

நமக்கு பிரமாண்டமான பிரபஞ்சமாகத் தெரிவது வேறு ஒரு உயிரினத்துக்கு வெறும் நீர்க்குமிழியாகத் தெரியலாம். நமக்கு புவியீர்ப்பு விசையாகத் தெரிவது அந்த உயிரினத்துக்கு ‘Surface Tension’ ஆகத் தெரியலாம். நமது எல்லைகள் பிற உயிரினங்களுக்கு எப்படித் தெரிகின்றன, பிற உயிரினங்களின் எல்லைகளைப் பற்றிய நமது புரிதல் முழுமையானதுதானா என்ற முடிவற்ற கேள்விகளைக் கேட்கிறது இந்தச் சிறுகதை. எறும்புகளின் வாழ்க்கையைக் கூட நாம் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை நினைவுபடுத்துகிறது.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

1952-இல் வெளியான சிறுகதை. இணையத்தில் பத்திரிகை பக்கங்களையே பிரதி எடுத்திருக்கிறார்கள், அப்போது வரையப்பட்ட படங்களோடு படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அறிவியல் புனைவுகள்

தொடர்புடைய சுட்டி: Surface Tension சிறுகதை

தமிழ் வரலாற்றுப் புத்தகங்கள் (மா. ராஜமாணிக்கம்)

மா. ராஜமாணிக்கம் பல வரலாற்றுப் புத்தகங்களை எழுதி இருக்கிறார். எனக்குத் தெரிந்த வரையில் அவரது பங்களிப்பு என்பது தமிழக வரலாற்றை கோர்வையாக தொகுத்து எழுதியதுதான். ஏறக்குறைய கல்லூரிப் படிப்புக்கான அடிப்படை புத்தகங்களைத்தான் எழுதி இருக்கிறார். அவரது சொந்த ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் கல்லூரிப் பாடம் போல இல்லாமல் படிக்கக் கூடிய விதத்தில் எழுதப்பட்ட புத்தகங்கள். தமிழகத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள – குறிப்பாக பல்லவர், பிற்காலச் சோழர் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் பயனுள்ளவை.

ராஜமாணிக்கம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருந்தவர். தமிழ் இலக்கியம், சைவ சமயம் ஆகியவற்றிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி இருக்கிறாராம். 60 வயது வாக்கில் 1967-இறந்தார்.

இவரது நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டிருக்கின்றன.

maa_raajamaanikkam_pallavar_varalararuபல்லவர் வரலாறு (1944) புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு யோசித்தால் பல்லவ ராஜாக்கள் சண்டை போட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்கள். மிஞ்சிய நேரத்தில் கோவில் கட்டி இருக்கிறார்கள் என்ற பிம்பம்தான் எஞ்சுகிறது. அதுவும் சாளுக்கியர்களோடும் ராஷ்ட்ரகூடர்களோடும் பாண்டியர்களோடும் தலைமுறை தலைமுறையாகப் போர். சாளுக்கியர்களும் ராஷ்ட்ரகூடர்களும் காஞ்சிபுரம் வரைக்கும் சும்மா உல்லாசப் பயணம் வந்த மாதிரி படை எடுத்து வந்திருக்கிறார்கள். கல்லூரி பாடப்புத்தகம் போல இருந்தாலும் ஒரே மூச்சில் படிக்கலாம். பழைய காலத்துப் பல்லவர்களில் – ஐதீகங்களைக் கூட விடவில்லை, மணிபல்லவம், பாரசீகத்தில் பஹ்லவி குடியினர் (எனக்குத் தெரிந்த வரை பஹ்லவிகளுக்கும் பல்லவர்களுக்கும் ஸ்னானப்ராப்தி கூட கிடையாது) என்றெல்லாம் கூட குறிப்பிடுகிறார் – ஆரம்பித்து அபராஜித பல்லவனில் முடிக்கிறார். மன்னர்களின் வரிசை பற்றி ஒரு கழுகுப்பார்வை கிடைக்கிறது. ஆனால் புதிய insights என்று எதுவும் இல்லை. ஜெயமோகன் இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதியது இங்கே.

அதே மாவை மீண்டும் பல்லவப் பேரரசர் என்ற புத்தகத்தில் அரைத்திருக்கிறார். மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் பற்றி கொஞ்சம் விவரித்திருக்கிறார். வழக்கமான வரலாற்று பாடப் புத்தகப் பாணியில், கொஞ்சம் அலுப்புத் தட்டும் விதத்தில் எழுதி இருக்கிறார்.

சோழர் வரலாறு கல்லூரி பாடப்புத்தகம் மாதிரி எழுதப்பட்டிருக்கிறது. இங்கும் சிபி ஐதீகத்திலிருந்து ஆரம்பிக்கிறார். சோழ சாம்ராஜ்ய அழிவு வரை எழுதி இருக்கிறார். புத்தகத்தின் சிறப்பு மீண்டும் மீண்டும் ஆதாரங்களை – கல்வெட்டுகள், பாடல்கள் – ஆகியவற்றைக் கொடுத்திருப்பது. பிற நாட்டு ஆதாரங்களைக் குறிப்பிட்டாலும் அவை என்ன என்று விளக்காதது ஒரு குறைதான். ஒரு நிபுணர் எழுதியது என்று தெளிவாகத் தெரிகிறது. இரண்டாம் குலோத்துங்கன் புத்தகத்தில் அதே மாவு, ஆனால் குலோத்துங்கன் II பற்றி அதிக விவரங்கள்.

நாற்பெரு வள்ளல்கள் பாரி, ஆய், அதியமான், குமணன் பற்றிய கட்டுரைகள். படிக்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. நாற்பெரு புலவர்கள்: சீத்தலைச் சாத்தனார், கபிலர், பரணர், நக்கீரர் பற்றிய கட்டுரைகள். படிக்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. சேக்கிழார், புதிய தமிழகம் போன்ற புத்தகங்களைத் விர்க்கலாம்.

வேறு சில புத்தகங்களைப் பற்றியும் இங்கேயே எழுதிவிடுகிறேன்.

அவ்வை துரைசாமி, சேர மன்னர் வரலாறு: சங்கப் பாடல்கள், மற்ற ஆதாரங்களை முன் வைத்து பெருஞ்சோற்றுதியன், செங்குட்டுவன் போல பல மன்னர்களின் வரலாற்றை எழுதி இருக்கிறார். அவரது நடை கொஞ்சம் கஷ்டப்படுத்துகிறது. மன்னர்களின் காலகட்டத்தையும் விளக்கி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

சதாசிவப் பண்டாரத்தார், முதல் குலோத்துங்க சோழன்: எளிமையான, புரிந்து கொள்ளக் கூடிய, நேரடியான அறிமுகம். குலோத்துங்கனின் பூர்வாங்கம், அவன் காலத்து அரசியல், போர்கள், அரசு நிர்வாகம் போன்றவற்றை சுருக்கமாக எழுதி இருக்கிறார்.

கேப்ரியல் ஜூவா-டுப்ரேல் (Gabriel Jouveau-Dubreuil) எழுதியது ஃப்ரெஞ்சு மொழியில். இருந்தாலும் நான் படித்தவை பல்லவர் பற்றிய புத்தகங்கள் என்பதால் இங்கே சேர்த்திருக்கிறேன். Pallavas (1917) புத்தகமும் நிபுணர்களுக்குத்தான். பல்லவ அரசு எப்படி ஆரம்பித்தது என்று அவர் எழுதி இருப்பதைப் பரிந்துரைக்கிறேன். பல்லவ அரசர்களின் வம்சாவளியை கல்வெட்டுகள், செப்பேடுகள் மூலம் ஊகிக்கிறது. குறிப்பாக முற்காலப் பல்லவர்களின் வம்சாவளியை இந்தப் புத்தகம் நிறுவி இருக்க வேண்டும். Dravidian Architecture புத்தகம் கோவில் கட்டுமானங்கள், ஸ்தம்பங்கள் எப்படி கட்டப்படுகின்றன என்று விவரிக்கிறது. சிறு புத்தகம்தான், ஆனால் புரிந்து கொள்ள எனக்கு அறிவு பத்தாது. நேரில் பார்த்தால்தான் கொஞ்சம் புரியும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

தொடர்புடைய சுட்டிகள்:

படுகளம்: ஜெயமோகனின் சமீபத்திய தொடர்

கடந்த 15-20 நாட்களாக ஜெயமோகன் தன் தளத்தில் படுகளம் என்ற தொடரை எழுதி வருகிறார். தினமும் எப்போது அடுத்த அத்தியாயம் வரும் என்று காத்திருக்க வைத்த தொடர். நேற்றுதான் (மே 19, 2024) முடிவு பெற்றது.

சுவாரசியமான, விறுவிறுப்பான தொடர். உண்மைக்கு அருகிலாவது இருக்கும் என்றும் நினைக்கிறேன்.

ஆனால் என் கண்ணில் இது ஜெயமோகனின் முதல் வரிசைப் படைப்புகளில் ஒன்றல்ல. விறுவிறுப்பும் வேகமும் மட்டுமே இதன் முக்கிய பலங்கள். உண்மைக்கு அருகிலாவது இருக்கும் என்று நினைக்கிறேன்தான், ஆனால் நம்பகத்தன்மை அவருக்கே முக்கியமாக இருந்திருக்குமா என்பது எனக்கு சந்தேகம்தான். நாயகன் தன் போராட்டத்தை ஒரு சீரான திரைக்கதை போல உருவமைத்து அதை இம்மி பிறழாமல் நடத்துவது கொஞ்சம் சினிமாத்தனம் தெரிகிறது. முக்கிய எதிரி கொஞ்சம் மொக்கை, மிகச் சுலபமாக வெல்லப்படுகிறார், அவரது ஒவ்வொரு செயலும் முன்னாலேயே கணிக்கப்பட்டு அதன் எதிர்வினை நாயகனால் வடிவமைக்கப்பட்டிருப்பது உண்மையில் நடந்தால் அதிசயம்தான்.  நாயகனுக்கு  திரும்பும்  இடத்தில்  எல்லாம்  கிடைக்கும்  உதவியும்  கொஞ்சம்  அதீதம்தான். கடைசி முத்தாய்ப்பும் – நாயகனின் திருமணம் – கொஞ்சம் சினிமாத்தனமாகத்தான் இருக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் நல்ல திரைக்கதை, நல்ல திரைப்படமாக எடுக்கலாம். தனுஷ், விஜய் சேதுபதி மாதிரி யாராவது நாயகனாக நடிக்கலாம்.

ஆயிரம் நொட்டை சொல்லலாம். எப்போதுமே நொட்டை சொல்வது சுலபம் – ஜெயமோகன் எழுத்தில் கூட. வட்டார வழக்கை குழப்பி அடித்துவிட்டார் என்று கூட எங்கோ படித்தேன். நான் சென்னைக்காரன், அவர் எதைக் குழப்பினார் என்று கூட புரிந்து  கொள்ள முடியாது. ஆனால் கடைசி வரை விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக் கொண்டதும் (சிறு)வணிகம் என்ற உலகத்தைக் காட்டுவதும் பிரமாதமாக வந்திருக்கிறது.  பாத்திரப்  படைப்பும்  நன்றாக  இருந்தது. குறிப்பாக நாயகனின்  அம்மா  பாத்திரம்  அருமை.

கதையின்  உச்சக்கட்டக்  காட்சியாக  நான்  நினைப்பது  தன்  கடையை  மறைக்கும்  விளம்பரப்  பலகையை  நாயகன்  தகர்க்கும்  காட்சிதான்.  திரைப்படமாக்கினால்  மிக  நன்றாக  வரும்.

நான் கதையை விவரிக்கப் போவதில்லை. இந்த மாதிரி விறுவிறுப்பான கதைகளுக்கு சுருக்கம் எழுதுவது சில சமயம் அதன் சுவாரசியத்தைக் கெடுத்துவிடுகிறது. ஒரு வரி சுருக்கம் – சிறு வணிக உலகில் நுழையும் இளைஞன் கந்துவட்டி, தொழில் போட்டி, பெரிய வணிகர்கள் அலட்சியமாக சிறு வணிகர்களை அழிப்பது ஆகியவற்றை திறமையாக திட்டம் போட்டு சமாளிக்கிறான், அதற்கு மேல் படித்துக் கொள்ளுங்கள்!

கதைக்கு வரையப்பட்ட படங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அருமை!

பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்

தொடர்புடைய சுட்டி: படுகளம் தொடர்

திரு.வி.க.

பொதுவாக தமிழ் நடை என் கண்ணில் படுவதே இல்லை. யாருடைய நடை கண்ணில் பட்டிருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால், பாரதியின் நடையில் இன்றும் புத்துணர்ச்சி தெரிகிறது; கல்கியின் நடை சரளமாக இருக்கிறது, கலைஞரின் வலிந்து புகுத்தப்பட்ட செயற்கையான அலங்காரத் தமிழ் நடை கொஞ்சம் எரிச்சல் மூட்டுகிறது, ரா.பி. சேதுப்பிள்ளையின் நடையில் வேகம் தெரிகிறது, திரு.வி.க., வெ. சாமிநாத சர்மா ஆகியோரின் நடை சுகமானது, சுஜாதாவின் நடையில் நவீனமாக இருக்கிறது. என்று தோன்றுகிறது. சர்மா திரு.வி.க.வின் சீடர். பிள்ளை, சர்மா, திரு.வி.க. மூவரும் இலக்கண சுத்தமான தமிழில்தான் எழுதுவார்கள், இருந்தாலும் சுலபமாகப் படிக்க முடியும்.

பள்ளியில் திரு.வி.க.வின் ஏதோ ஒரு கட்டுரை பாடமாக இருந்தது. “நம் தென்னாட்டவர்க்கு புளி காரப்பித்து என்றுதான் போகுமோ என்று அறிகிலேன்!” என்ற பாணியில் இருந்தது. ஆனால் செயற்கைத்தனம் அற்ற எழுத்து. அந்தக் கட்டுரையைப் படித்தபோது என்றாவது இவர் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது இன்னும் நினைவிருக்கிறது.

திரு.வி.க.வின் நடை எங்கே ஆரம்பித்தது, எப்படி பரிணமித்தது என்பதைக் காண அவர் 1908-இல் எழுதிய கதிரைவேற்பிள்ளை சரித்திரத்தை புரட்டிப் பார்க்கலாம். சரியான பண்டித நடை. பத்து பனிரண்டு வருஷத்தில் அதை மாற்றிக் கொண்டார். சாமிநாத சர்மா திரு.வி.க.வின் கீழ் துணை ஆசிரியராக பணியாற்றிய 1920 வாக்கிலேயே இதெல்லாம் மாறிவிட்டது என்று தகவல் தருகிறார்.

திரு.வி.க.வை சுப்ரமணிய சிவா விளக்கெண்ணய் முதலியார் என்றே அழைப்பாராம். அவரால் கடிந்து பேசவே முடியாதாம். ஆனால் நோயால் அவதிப்பட்ட சிவாவுக்கும் ஐந்து பத்து கொடுத்து உதவுவாராம்.

திரு.வி.க. பல தளங்களில் முன்னோடி. முன்னோடி பத்திரிகையாளர். தொழிலாளர் இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டவர். காங்கிரஸில் செயலாக இருந்தவர். நாயுடு-நாயக்கர்-முதலியார் (வரதராஜுலு நாயுடு, ஈ.வெ. ராமசாமி நாயக்கர், கல்யாணசுந்தர முதலியார்) மூவரும்தான் தமிழ்நாட்டில் காங்கிரசை பரப்பினார்கள் என்று சொல்வார்கள். அவர்கள் கட்டிய அஸ்திவாரத்தின் மீதுதான் ராஜாஜி கட்டிடத்தை எழுப்பினாராம். மூவருமே காங்கிரஸிலிருந்து முழுதாகவோ, அரை மனதாகவோ விலகியது துரதிருஷ்டம்தான். காந்தி மீது அவருக்கு இருந்த மரியாதை மாறவே இல்லை என்றாலும் காங்கிரஸ் படேல் “கோஷ்டியால்” கட்டுப்படுத்தப்படுகிறது, 1937-இன் காங்கிரஸ் மந்திரி சபைகள் வாய்ப்பை வீணடித்தன, குறிப்பாக படேல் தொழிலாளர் நலத்துக்கு எதிரானவர் என்று எண்ணி இருக்கிறார். (இந்தியாவும் விடுதலையும் புத்தகம்).

காலம் முழுதும் மனதளவில் காங்கிரஸ்காரரே. ஆனால் அவரை சிறை செய்தது ஓமந்தூரார் அரசு மட்டுமே – ஏதோ தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்காக. அன்றைய தொழில் மந்திரி டி.எஸ்.எஸ். ராஜன் கூட்டம் நடத்த விடமாட்டேன் என்று மிரட்டியே இருக்கிறார், இவர் மசியவில்லை.

ராஜாஜி திறமையாக அரசியல் செய்து திரு.வி.க.வை ஓரம் கட்டினார் என்று அவரிடம் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய சக்திதாசன் சொல்கிறார். குறிப்பாக உப்பு சத்தியாக்கிரகத்தின்போது ராஜாஜி திரு.வி.க.வை இதற்கு ஆதரவு தர வேண்டும் என்று வற்புறுத்தி கையெழுத்து வாங்கி இருக்கிறார். ராஜாஜி சிறை சென்றதும் அடுத்தபடி பிரபலமான தலைவரான இவர் தமிழகத்தில் தலைமை தாங்க, சிதம்பரம் அருகே உப்பெடுக்க, தயாராக இருந்தாராம். ஆனால் ராஜாஜி இவர் வெளிச்சம் பெறக்கூடாது என்பதற்காகவே கே. சந்தானத்தை அடுத்த தலைவராக அறிவித்தாராம்.

சக்திதாசன் எழுதிய திரு.வி.க.: வாழ்வும் தொண்டும் (1982) புத்தகம் genuine ஆனது. சக்திதாசன் திரு.வி.க.வோடு நெருங்கி பழகியவர். நவசக்தி பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தவர். அவருக்கு திரு.வி.க. ஏறக்குறைய தெய்வம், அவரால் திரு.வி.க.வை குறை சொல்லிவிட முடியாது என்றாலும் கூட, இது மிகவும் உண்மையான புத்தகம். சக்திதாசன் சொல்வதில் கொஞ்சமாவது உண்மை இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். ராஜாஜி திரு.வி.க.வை மட்டுமல்ல, சத்தியமூர்த்தியையும் ஓரம் கட்டினார் என்பது வரலாறு.

சக்திதாசன் திரு.வி.க.விடம் சேர்ந்ததே சுவாரசியம். அவர் சிறு வயதில் திரு.வி.க.வின் புத்தகம் ஒன்றைப் படித்திருக்கிறார், மயங்கிப் போயிருக்கிறார். நவசக்தி பத்திரிகையில் திரு.வி.க.வின் உதவி ஆசிரியராக பணி புரியும் வாய்ப்பு கிடைத்தபோது என்ன சம்பளம் வேண்டுமானாலும் கொடுங்கள் என்று சேர்ந்து கொண்டிருக்கிறார். திரு.வி.க.வின் தத்துப்பிள்ளை என்றே அறியப்பட்டிருக்கிறார். நவசக்தியின் ஆசிரியராகவும் பின்னாளில் பணியாற்றி இருக்கிறார்.

தேசபக்தன், நவசக்தி இதழ்களின் ஆசிரியராக இருந்திருக்கிறார். சாமிநாத சர்மா, சக்திதாசன், கல்கி ஆகியோர் உதவி ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள்.

திரு.வி.க. பக்தரும் கூட. ராயப்பேட்டையில் வாழ்ந்தவர். எங்கள் சென்னை வீட்டிலிருந்து பத்தடி தூரத்தில் அவர் நிறுவிய குகானந்த நிலைய மண்டபம் இன்னும் இருக்கிறது (டிடிகே ரோடு மற்றும் அவ்வை ஷண்முகம் ரோடு சந்திப்பிற்கு அருகே). இறைவனே இயற்கை, இயற்கையோடு ஒத்து வாழ்வதே இன்பம் என்றெல்லாம் இன்ப வாழ்வு என்ற சிறு புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.

காந்தி மீது மிகுந்த அபிமானம் கொண்டவர். அவருக்கு ரோல் மாடல்கள் இருந்தார்கள் என்றால் அதில் காந்தியும் இருந்திருப்பார்.  மனித வாழ்க்கையும் காந்தி அடிகளும் புத்தகத்தில் அவருக்கு காந்தி மேல் இருந்த மரியாதை, அன்பு, பிரமிப்பு எல்லாம் நன்றாக வெளிப்படுகிறது. காந்தியோடு வேறுபட்டுமிருக்கிறார் – குறிப்பாக காந்தி பிறப்பு அடிப்படையிலான வர்ணாசிரம தர்மத்தை ஆதரிப்பதின் (பின்னால் காந்தியின் நிலை மாறியது) நுட்பம் புரியவில்லை, இது சரியல்ல என்கிறார். ஆனால் காலப்போக்கில் காங்கிரஸ் மீது கொஞ்சம் கசப்பு உருவாகி இருக்கிறது. காங்கிரஸ் ஃபாசிசம், திராவிட நாடு உருவாகும் என்றெல்லாம் நாற்பதுகளில் நினைத்திருக்கிறார், சொற்பொழிவாற்றி இருக்கிறார்.

எந்த அரசியல் அமைப்பிலும் இருக்கக் கூடிய சிறு தவறுகள் அவரை பெரிதாகப் புண்படுத்தி இருக்கின்றன. ஸ்வராஜ்யக் கட்சி ஆட்சி அமைக்காது என்று சொன்னதை நம்பி நிறைய பிரச்சாரம் செய்திருக்கிறார். ஆனால் சீனிவாச ஐயங்கார் நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க சுயேச்சைகளுக்கு ஆதரவு தந்தாலும் தரலாம், அதன் மூலம் மறைமுகமாக ஆட்சியில் பங்கேற்க நேரிடலாம் என்று யோசிப்பது தெரிந்தும் ஏமாற்றம் அடைந்து பிரச்சாரப் பணியில் ஈடுபடுவதை நிறுத்தி இருக்கிறார். இத்தனைக்கும் திரு.வி.க.வுக்கு சீனிவாச ஐயங்கார் பொருளாதார ரீதியாக உதவி இருக்கிறார். (இவர் சத்தியமூர்த்திக்கும் உதவினார்). ஆனால் திரு.வி.க. பெற்றுக் கொண்டது கொஞ்சம்தான் என்று தோன்றுகிறது. வீடு வாங்கித் தருகிறேன் என்று சொன்னதை மறுத்துவிட்டாராம்.

காங்கிரசின் கோஷ்டி மோதலில் காலையில் அறிவிக்கப்பட்ட ஜில்லா மெம்பர் வேட்பாளர் (முனுசாமி முதலியாராம்) மாலையில் மாற்றப்பட்டதைக் கண்டு சினம் கொண்டிருக்கிறார். ஊழல் என்று முதலில் அறிவிக்கப்பட்டவரை ஆதரித்து அவரை ஜெயிக்க வைத்திருக்கிறார். ராஜாஜியையே இப்படி மாற்றம் நடந்தது தவறுதான் என்று பகிரங்கமாக ஒத்துக் கொள்ள வைத்திருக்கிறார். ஆனால் இப்படி நடந்த நிகழ்ச்சிகள் அவருக்கு பதவி அரசியலில் கொஞ்சம் கசப்பை உருவாக்கி இருக்கின்றன.

தீவிர சைவர். ஆலமும் அமுதமும் போன்ற புத்தகங்கள் (அவரது உரை ஒன்று புத்தகமாக வந்திருக்கிறது) அவரது இந்தப் பக்கத்தைக் காட்டுகின்றன.

ஏசு கிறிஸ்து திரு.வி.க. போன்றவர்களுக்கு ஒரு பிம்பம். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டச் சொன்ன கிறிஸ்துவைத்தான் அவர்களுக்குத் தெரியும். கிறிஸ்துவின் அருள் வேட்டல் போன்ற துதிப்புத்தகத்தைப் பார்த்தால் ஹிந்துத்துவர்களுக்கு அடிவயிற்றிலிருந்து ஆங்காரம் வரும்.

தமிழ் நூல்களில் பௌத்தம் போன்ற சிறு புத்தகங்கள் அவரது தமிழ்ப் புலமையை நன்கு வெளிக்காட்டுகின்றன. திரு.வி.க. சைவத்தில் அதிக நாட்டம் கொண்டவர். வன்முறையை வெறுப்பவர். அவர் ஞானசம்பந்தர் பௌத்தம் புத்தர் காலத்திலிருந்து மிகவும் மாறிவிட்டது, இருந்தாலும் ஞானசம்பந்தர் பௌத்தத்தை எதிரியாக கருதவில்லை, ஜைனர்கள் கழுவேற்றப்பட்டார்கள் என்று சொல்வதற்கு ஆதாரமில்லை என்று வாதிடுவது ரசிக்கும்படியாக இருந்தது.

நாயன்மார் திறம் போன்ற சிறு அறிமுக நூல்கள் எனக்கே தேவாரத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கின.

பெண்ணின் பெருமை போன்றவை எனக்கான புத்தகங்கள் அல்ல.

அவரது வாழ்க்கைக் குறிப்புக்கள் புத்தகம் சிறப்பான சுயவாழ்க்கை வரலாறு. சாரு நிவேதிதா அந்தப் புத்தகத்தைப் பற்றி நல்ல குறிப்பு ஒன்றை எழுதி இருக்கிறார். என்றாவது நானும் விரிவாக எழுத வேண்டும்.

அவரது மனைவி கமலாம்பிகையோடு அவருக்கு இருந்த பந்தம் அழகான காதல் கதை. கமலாம்பிகை பெரிய இடத்துப் பெண். இவரிடம் எனக்கு நகையும் உயர்ந்த் துணிகளும் வேண்டியது பிறந்த வீட்டிலிருந்து வந்திருக்கிறது, எனக்கு தமிழ் கற்றுக் கொடுங்கள் என்று மணமான புதிதில் கேட்டிருக்கிறார். திரு.வி.க. போன்ற மனநிலை உடைய ஒருவரிடம் இப்படிக் கேட்டால் அவர் காதல் வசப்படுவதில் வியப்பென்ன? அந்தக் கால கூட்டுக் குடும்பத்தில் மனைவியிடம் அதிக நேரம் பேச முடியவில்லை, அதனால் இலக்கியம் கற்றுத் தர முடியவில்லை, தனிக்குடித்தனம் போய்விடலாம் என்று திரு.வி.க. எண்ணி இருக்கிறார். கமலாம்பிகை மறுத்துவிட்டார். பிறகு ஏதோ சொந்தக்காரர் வீட்டுக்குப் போகிறோம் என்று சொல்லிவிட்டு அவர் வீட்டில் வாராவாரம் போய் ஒரு நாள் தங்குவார்களாம். அங்கேதான் பாடம் சொல்வதெல்லாம்.

கமலாம்பிகை எலும்புருக்கி நோயால் மணமான ஆறு ஆண்டுகளில் இறந்துவிட்டார். குழந்தைகளும் இறந்துவிட்டன. திரு.வி.க. மறுமணம் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை…

திரு.வி.க. எந்த விதமான பதவியும் பெற்றவர் அல்லர். பணம், பதவிக்காக அவர் முயன்றதே இல்லை. அவரை சக்திதாசன் அந்தணர் என்று அழைக்கிறார். “அந்தணர் என்போர் அறவோர்” என்பதுதான் வரையறை என்றால் அவர் அந்தணரே! சாமிநாத சர்மாவின் கண்ணில் அவர் சீலர். அந்தணர் என்பதை விட சீலர் என்பது அவருக்கு மிகப் பொருத்தம்.

என் கண்ணில் அவரது பத்திரிகைப் பணி, தொழிலாளர் இயக்கங்களை கட்டி எழுப்பியதில் அவரது பங்கு, ஆரம்ப காலத்தில் தமிழகத்தில் காங்கிரசை கட்டி எழுப்புவதில் அவரது பங்கு அத்தனையும் inspiration!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், தமிழறிஞர்கள்

பயன்படுத்திய புத்தகங்கள்:

ஈழ எழுத்தாளர் வ.அ. ராசரத்தினம்

ராசரத்தினத்தின் பேரை நான் முதன்முதலாக கேள்விப்பட்டது ஜெயமோகனின் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் பட்டியல் மூலமாகத்தான். தோணி சிறுகதையை ஜெயமோகன் தன் பட்டியலில் சேர்த்திருந்தார். தோணி சர்வநிச்சயமாக என் பட்டியலில் வராது. நல்ல சித்தரிப்பு உள்ள சிறுகதைதான், ஆனால் அய்யகோ என்ன கொடுமை இது சரவணன் தொனியை அவரால் முற்றாகத் தவிர்க்க முடியவில்லை. தவிர்த்திருந்தாலும் என் பட்டியலில் வந்திருக்குமா என்பது சந்தேகமே.

ராசரத்தினம் ஈழ எழுத்தாளர். அதுவும் முன்னோடி எழுத்தாளர். அவரது இலக்கிய நினைவுகள் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் காலத்தில், அவரது ஊரான மூதூரில் நான் பிறந்து வளர்ந்திருந்தால் நானும் அப்படித்தான் இருந்திருப்பேன். வாசிப்பில் முழுகி இருப்பேன், அனேகமாக ஒரு பள்ளி ஆசிரியராகத்தான் போயிருப்பேன். எழுதி இருப்பேனா என்பதுதான் சந்தேகம். நிச்சயம் முயன்றிருப்பேன். அவரது அனுபவங்களைப் படிக்கும்போது நானும் இப்படித்தான் உணர்ந்திருப்பேன், நானும் இப்படித்தான் செய்திருப்பேன் என்று தோன்றிக் கொண்டே இருந்தது.

கிரௌஞ்சப் பறவைகள் (1975) என்ற கொடுமையான வரலாற்று நாவலையும் எழுதி இருக்கிறார்.

ஒரு வெண்மணல் கிராமம் காத்துக் கொண்டிருக்கிறது நாவல் மெய்நிகர் அனுபவம் – அன்றைய ஒரு கிராம சூழலை விவரிக்கிறது. ஆனால் சுவாரசியமே இல்லை.

மொத்தத்தில் நான் பரிந்துரைப்பது அவரது இலக்கிய நினைவுகள் புத்த்கம், தோணி சிறுகதை மட்டுமே.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஈழ எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

அலிஸ் மன்ரோ: அஞ்சலி

அலிஸ் மன்ரோ நோபல் பரிசு (2013) வென்ற கனடா எழுத்தாளர். அனேகமாக சிறுகதைகள் மட்டுமே எழுதி நோபல் பரிசு வென்றவர் அவர் ஒருவராகத்தான் இருக்கும்.

நேற்றுதான் (மே 13, 2024) இறந்திருக்கிறார். அவருக்கு என் அஞ்சலி.

நான் மன்ரோவை அதிகம் படித்ததில்லை. சமீபத்தில் படித்த ஒரு சிறுகதை – In Sight of the Lake – எனக்குப் பிடித்த சிறுகதைகளில் ஒன்று. மிகவும் திறமையான எழுத்து. பிடித்த சிறுகதை என்று ஒரு பதிவு எழுதி வைத்திருந்தேன், அது இன்னும் இரண்டு நாளில் வெளியாகி இருக்கும். அதற்குள் அவரது இறப்புச் செய்தி, வருத்தமாக இருக்கிறது.

எழுத்தாளனுக்கு அஞ்சலி என்பது அவரது எழுத்துக்களைப் பற்றி எழுதுவதுதான். இப்போதைக்கு மேலே சொன்ன சிறுகதையைப் பற்றி எழுதியதை மட்டும்தான் பதிக்க வேண்டும். அவரது சிறுகதைகளைத் தேடிப் பிடித்து படிக்க வேண்டும்.


In Sight of the Lake மிகத் திறமையாக எழுதப்பட்ட சிறுகதை. எது நிஜம், எது பிரமை என்று புரியவே நேரம் ஆனது. அசோகமித்திரனின் சில சிறுகதைகளில் ஏற்படுவதைப் போல “ஓ!” என்ற உணர்ச்சி ஏற்பட்டது.

ஒரு கிழவி; டாக்டரைப் பார்க்கப் போகிறாள். ஆனால் என்று பார்க்க வேண்டும் என்று குழப்பம், அதனால் செவ்வாய் அன்று போவதற்கு பதில் திங்கள் அன்று போயிருக்கிறாள். என் மூளை, நினைவுகள் தவறுகின்றனவோ என்று பாதி விளையாட்டாகக் கேட்கிறாள்.

உண்மையில் அந்த மறதிப் பிரச்சினை இருக்கிறது. அடுத்த முறை டாக்டரைப் பார்ப்பதற்கு முன் அவாது அலுவலகம் எங்கே இருக்கிறது என்று ஒரு நாள் முன்னதாகவே பார்த்து வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கிறாள். தேடுகிறாள், ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த டாக்டர் இவளைப் போன்ற வயதான, சுயநினைவு கொஞ்சம் தடுமாறும் கிழ்விகளுக்கான ஆசிரமம் ஒன்றில் இருப்பாரோ என்று ஒரு யோசனை வருகிறது. அங்கேப் போய்ப் பார்க்கிறாள்.

பிறகு? நான் உங்கள் வாசிப்பு அனுபவத்தை கெடுக்க விரும்பவில்லை, மேலே படித்துக் கொள்ளுங்கள்!

இந்த மாதிரி திறமை எல்லாம் எனக்கு எப்போதும் கை வரும் என்று தோன்றவில்லை..

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

தொடர்புடைய சுட்டிகள்:

துப்பறியும் கதைகள்: Mr. Fortune

எனக்கு துப்பறியும் கதைகள் மீது கொஞ்சம் பித்து உண்டு. பதின்ம வயதில் படித்த ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் என் உள்ளம் கவர்ந்தவை. அவற்றை விட சிறந்த துப்பறியும் கதைகள் இன்னும் வரவில்லை.

அது என்னவோ துப்பறியும் கதைகள் என்றால் இரண்டாம் உலகப் போருக்கு முன் எழுதப்பட்ட, இங்கிலாந்து எழுத்தாளர்கள் எழுதிய கதைகள்தான் எனக்குப் பிடிக்கிறது. அமெரிக்க கதைகளில் வன்முறை அதிகம் (ரேமன்ட் சாண்ட்லர், டாஷியல் ஹாம்மெட்), மர்மம் குறைவு என்று எனக்கு ஒரு எண்ணம். மேலும் துப்பறியும் கதைகளில் நான் யதார்த்தத்தை அதிகம் எதிர்பார்ப்பதில்லை. மர்மம்தான் முக்கியம். அதற்கு இங்கிலாந்தின் பிரபுத்துவ சூழல் நன்றாகப் பொருந்தி வருகிறது. Body in the Library என்ற கரு ஒரு ஆங்கில கிராமப் “பண்ணையார்” வீட்டில்தான் சரிப்படும். 🙂

அப்படி எனக்கு பிடித்த கதைகளில் மிஸ்டர் ஃபார்ச்சூன் (Mr. Fortune) கதைகளுக்கு ஒரு இடம் உண்டு. எழுதியவர் ஹெச்.சி. பெய்லி.

ஃபார்ச்சூன் மருத்துவப் படிப்பு படித்திருந்தாலும் பொது மருத்துவராக தொழில் புரிவதில்லை, ரணசிகிச்சை புரியும் மருத்துவர் (surgeon). ரணசிகிச்சை புரிபவர்கள அந்தக் காலத்தில் டாக்டர் என்று அழைக்கமாட்டார்களாம், அவர் மிஸ்டர்தான். ஸ்காட்லண்ட் யார்டில் முக்கிய ஆலோசகர். ஸ்காட்லண்ட் யார்டின் தலைவரான லோமஸ் அவருக்கு நண்பர். அவர் சொன்னால் காவல் துறை கேட்கும். எப்போதும் ஃபார்ச்சூனுக்கும் மட்டும் ஏதாவது தோன்றும். சாட்சிகள் இருக்காது, ஆனால் அவருக்கு மட்டும் ஏதாவது உறுத்தும். அதை தொடர்ந்து செல்வார், ஏதாவது குற்றத்தைக் கண்டுபிடிப்பார். லோமஸ் போன்றவர்கள் அது ஃபார்ச்சூனின் உள்ளுணர்வு என்பார்கள், ஃபார்ச்சூனோ அப்படி எதுவும் கிடையாது, எனக்கு உள்ளுணர்வே கிடையாது என்பார். லோமஸ்ஸும் ஃபார்ச்சூனும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டே இருப்பார்கள்.

இந்தச் சின்னச் சட்டகத்தை வைத்துக் கொண்டு பெய்லி 20-25 வருஷங்களாக எழுதினார். நூறு கதைகளுக்கு மேல் இருக்கலாம் என்று நினைக்கிறேன். இவை எல்லாம் துப்பறியும் கதை பிரியர்களுக்குத்தான். எனக்கு சுவாரசியமாக இருந்தன, ஆனால் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை.

ஒரே ஒரு சிறுகதை படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது Magic Stone.

Call Mr. Fortune (1920), Mr. Fortune’s Practice (1923), Trials of Mr. Fortune (1925), Mr. Fortune Please (1928), Mr. Fortune Speaking (1929), Mr. Fortune Explains (1930), Mr. Fortune Wonders (1933), Mr. Fortune Here (1940) என்று பல நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் வந்திருக்கின்றன. எதை வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம், பொழுது போகும். துப்பறியும் கதை விரும்பிகளுக்குப் பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்

தொடர்புடைய சுட்டி: Magic Stone சிறுகதை

ஐசக் பாஷவிஸ் சிங்கர்

1978-இல் நோபல் பரிசு வென்றவர் ஐசக் பாஷவிஸ் சிங்கர். சிங்கர் யூதர். போலந்தில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர். யிட்டிஷ் மொழியில் மட்டுமே எழுதினார்.

சில சிறுகதைகளே படித்திருக்கிறேன், என்றாலும் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்று முடிவுக்கு வந்துவிட்டேன். Gimpel the Fool சிறுகதையைப் பற்றி கொஞ்சம் விவரமாக இங்கே.

Spinoza of the Market Street சிறுகதையை ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களில் படிக்கலாம்.சிம்பிளான காதல் கதையாக, ஆராய்ச்சியிலும் படிப்பிலும் வாழ்க்கையை கழித்துவிட்ட கிழத்துக்கு வாழ்க்கை புரியும் கதையாக, தான் வாழ்நாள் முழுவதும் வாழ்க்கையைப் பார்த்த கோணம் திடீரென்று விரிவடையும் கதையாக, எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம். படியுங்கள்! நல்ல சிறுகதை.

A Wedding in Brownsville சிறுகதையை நான் முழுமையாகப் புரிந்து கொண்டேனா என்பது சந்தேகமே. ஆனாலும் சுவாரசியமான, நல்ல சிறுகதை என்று தெளிவாகத் தெரிகிறது. நாஜிக்களிடமிருந்து தப்பித்த சில பல ஒரு கிராமத்து யூதர்கள். தப்பித்தவர்களில் அனேகர் இன்று நியூ யார்க்கில். ஒருவர் வெற்றி பெற்ற, வயதாகிக் கொண்டிருக்கும் மருத்துவர். அவர் மனைவியும் ஒரு முன்னாள் ஜெர்மானியர், ஆனால் பிறப்பால் யூதர் அல்லர். மனைவியின் ஒரு சகோதரர் நாஜி; இன்னொருவர் கம்யூனிஸ்ட். இருவருமே கொல்லப்பட்டார்கள். மருத்துவர் நியூ யார்க் நகரின் தூரப்பகுதி ஒன்றில் தன் கிராமத்து மனிதர் ஒருவர் குடும்பத் திருமணத்துக்குப் போகிறார். போகும் வழியில் ஒரு விபத்தைப் பார்க்கிறார். திருமணக் கொண்டாட்டத்திலும் பேச்சு எப்போதும் யார் தப்பித்தார், யார் இன்னும் உயிரோடிருக்கிறார், யார் இறந்தார் என்றுதான் சுழன்று சுழன்று வருகிறது. திடீரென்று மருத்துவர் தன் இறந்தபோய்விட்டதாய் சொல்லப்படும் தன் முன்னாள் காதலியைப் பார்க்கிறார். காதல் அப்படியேதான் இருக்கிறது, மணந்து கொள்ளலாம் என்று பேசிக் கொள்கிறார்கள். ஆனால் காதலிக்கு வயதே ஆகவில்லை. விபத்தில் பார்த்தது தன்னைத்தானா என்று மருத்துவருக்கு ஒரு நொடி தோன்றுகிறது. தான் பார்க்க வந்த திருமணம் நடக்கிறது…

கதையின் மிகச் சிறந்த பகுதி யார் பிழைத்தார்கள், யார் இறந்தார்கள் என்று மீண்டும் மீண்டும் பேசிக் கொள்ளும் இடம்தான். அதற்காகவே படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

Yentl

Yentl இன்னொரு நல்ல சிறுகதை. சராசரி மனைவியாக வாழ விரும்பாத, கல்வி கற்க விரும்பும் பெண் ஆண் வேடம் பூண்டு மதக் கல்வி கற்கிறாள். அவளை ஆண் என்று நினைத்து பழகும் நண்பன் அவிக்டார். நண்பனின் முன்னாள் காதலி ஹடஸ் என்று ஒரு முக்கோணக் காதல். யெண்ட்ல்/அன்ஷெலின் பாத்திரப் படைப்பு சிறப்பாக இருக்கிறது. பார்பாரா ஸ்ட்ரெய்சாண்ட் நடித்து திரைப்படமாகவும் வந்தது.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிங்கர் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

டாம் க்ளான்சி: Patriot Games

க்ளான்சியின் த்ரில்லர்களில் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான்.

க்ளான்சியின் அத்தனை பலங்களும் நன்றாக வெளிப்படும் நாவல். விறுவிறுப்பு, நாயகன் ஒரே நேரத்தில் நாயகத்தன்மையையும் சாதாரணன்-தன்மையையும், – என்ன, கொஞ்சம் திறமையான சாதாரணன் – வெளிப்படுத்துதல், நுண்விவரங்கள் என்று அத்தனையும் உண்டு. அங்கங்கே இழுக்கவும் செய்யும், ஆனால் கிடுகிடுவென்று படிக்கவும் தூண்டும்.

Version 1.0.0

சிஐஏவுடம் சில மெல்லிய தொடர்புகள் உள்ள ஜாக் ரயன். இங்கிலாந்திற்கு சென்றிருக்கும்போது தீவிரவாதிகள் இளவரசர் குடும்பம் இருக்கும் காரைத் தாக்குவதைப் பார்க்கிறார்; யோசிக்காமல் களத்தில் இறங்கி ஒருவனைக் கொல்கிறார், ஒருவனைப் பிடித்துக் கொடுக்கிறான், தோளில் குண்டு பாய்கிறது. ராஜ குடும்பத்தினர் நண்பர்கள் ஆகிவிடுகிறார்கள்.

தாக்கிய தீவிரவாத கும்பல் ஐரிஷ் தீவிரவாத இயக்கம். அன்றைய (இன்றும்) முக்கிய தீவிரவாத இயக்கம் IRA (Irish Republican Army). இது அதிலிருந்து பிரிந்த ஒரு சிறு குழு. ULA என்று பெயர். ULA-IRA நடுவே நிறைய பிரச்சினைகள் உண்டு. அன்றைய கடாஃபியின் லிபியா இந்தக் குழுவிற்கு பயிற்சியும் பணமும் கொடுக்கிறது. மாட்டிக் கொண்ட தீவிரவாதி ஷான் மில்லரை ULA சிறையிலிருந்து மீட்கிறது.

ஐரிஷ் தீவிரவாத இயக்கங்களுக்கு அமெரிக்காவில் கொஞ்சம் ஆதரவு உண்டு. பணம் நிறைய வருவது அங்கிருந்துதான். அதனால் அமெரிக்காவில் தாக்குதல் நடத்தமாட்டார்கள். ஆனால் ULA அமெரிக்காவில் ரயன் குடும்பத்தைத் தாக்குகிறது. IRA-வுக்கு கெட்ட பெயர். ரயனின் மனைவி காதியும் மகள் சாலியும் செத்துப் பிழைக்கிறார்கள்.

ரயன் சிஐஏவில் சேர்கிறார். ULA பற்றி ஆராய்கிறார். அமெரிக்காவிற்கு இங்கிலாந்து இளவரசர் வரப் போகிறார், ரயனின் வீட்டுக்கு வருகிறார் என்று ULA-வுக்கு தெரிகிறது. மீண்டும் அவர்களைக் கடத்த, ரயனைத் தாக்கத் திட்டம். அதிர்ஷ்டவசமாக எல்லாரும் பிழைக்கிறார்கள், தீவிரவாதிகள் பிடிபடுகிறார்கள், சுபம்!

இளம் வயதில் படித்தபோது ஒரே மூச்சில் படித்தது நன்றாக நினைவிருக்கிறது. முக்கியமான காரணம் மனதில் நானே ஜாக் ரயனாக இருந்தது போன்ற பகல் கனவுதான் என்று நினைக்கிறேன். இளவரசர் சார்லஸைக் காப்பாற்றுவது, சர் பட்டம் கொடுக்கப்படுவது…

1987-இல் எழுதப்பட்ட நாவல். பெருவெற்றி பெற்ற நாவல். 1990-இல் ஹாரிசன் ஃபோர்ட் நடித்து திரைப்படமாகவும் வந்தது.

த்ரில்லர் விரும்பிகளுக்கு பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

தொடர்புடைய சுட்டி: Hunt for Red October