வள்ளியம்மன் நம்பியண்ணன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்


தஞ்சையை சோழர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம். பெரிய கண்டியண்ணன், சின்ன கண்டியண்ணன், முத்து கண்டியண்ணன் எனும் மூவர் காங்கேய நாட்டில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு ஒரு தங்கை. அவள் பெயர் வள்ளியம்மாள். திருமண வயதை எட்டிய வள்ளிம்மாளுக்கு மூன்று அண்ணன்களும் கிழங்கு நாட்டைச் சார்ந்த நம்பியண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். திருமணம் பேட்டப்பாளையத்தில் இனிதே முடிந்து இல்லறம் தொடர்கிறது.

ஒருநாள் நம்பியண்ணன் மண்பாண்டச் சூளைக்கு சோகைகள் அடுக்க முற்படும் போது பாம்பு தீண்டி அதே இடத்தில் உயிர் துறந்தான். அதை அறிந்த வள்ளியம்மாள் “கணவனுடன் தீப்பூக தஞ்சை மன்னிடம் அனுமதி பெற்று வருகிறேன். அதுவரை கணவனின் உடலை பாதுகாத்து வைத்திருங்கள்” என உறவுகளிடம் சொன்னாள். அவர்களும் அதனை ஏற்றுக் கொள்ள தஞ்சை மன்னனிடம் செல்கிறாள்.

அங்கு மன்னன் மதம் பிடித்த பட்டத்து யானையை அடக்கி வந்தால் அனுமதி தருவதாக சொல்கிறான். வள்ளியம்மாளும் காவிரியில் குளித்து கொண்டுவந்த தீர்த்தத்தினை கணவனை வணங்கிவிட்டு யானையின் மீது தெளித்தாள். மதம் கொண்ட யானை அடங்கி அவளை வணங்கியது. பட்டத்து யானையின் மதத்தை அடக்கியது கண்டு மகிழ்ந்த மன்னன் அவளுக்கு தீயை தர, அதனை முந்தானையில் வாங்குகிறாள் வள்ளிம்ம்மாள். மன்னன் முதற்கொண்டு எல்லோரும் வியப்படைகின்றார்கள். மன்னன் தன்னுடைய பட்டத்து யானையை பரிசாக தருகிறான்.

அந்தயானையில் அமர்ந்து மோகனூருக்கு வருகிறாள் வள்ளியம்மாள். அந்த அதிசயத்தை கண்ட வாய்ப்பேசாத சிறுமி ஒருத்தி அம்மாவென அழைக்கிறாள். இறுதியாக கணவன் உடல் இருக்கும் இடத்திற்கு வந்தாள். அங்கு கூடியிருந்த உறவுகளிடம் “நான் கணவனோடு தீப் புகுந்த பின்பு, தீ ஏந்திவந்த முந்தானையும், சூடி இருக்கும் மலரும், கையில் இருக்கும் பழமும் எரியாமல் அப்படியே இருக்கும். அவற்றை எடுத்து வழிப்பட்டு வாருங்கள்” எனக் கூறினாள்.

பிறகு முந்தானையில் உள்ள தீயை கணவன் உடல் கிடத்தப்பட்டிருக்கும் சந்தனக் கட்டைகளின் மீது கொட்டிவிட்டு, எரிகின்ற தீயை சுற்றிவந்து வணங்கிவிட்டு தீப்புகுந்தாள். அவள் சொன்னது போலவே முந்தானை, மலர், பழம் என மூன்றும் எரியாமல் இருந்தன. பெரிய கண்டியண்ணன், சின்ன கண்டியண்ணன், முத்து கண்டியண்ணன் மூவரும் அதே இடத்தில் வள்ளிம்மனுக்கும், நம்பியண்ண்னுக்கும் கோவில் அமைத்திருக்கின்றார்கள்.

கோவில் –
வள்ளியம்மன் நம்பியண்ணன் கோவில்,
4/ 139, வேலூர் ரோடு,
மோகனூர்,
நாமக்கல் மாவட்டம்.

14 comments on “வள்ளியம்மன் நம்பியண்ணன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

  1. எஸ். கே சொல்கிறார்:

    அருமையான பதிவு! நன்றி!

  2. question சொல்கிறார்:

    “தஞ்சையை சோழர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம்”
    Which time period, Cherar, Cholar & Pandiya ruled India & which part of India?

  3. படைப்பாளி சொல்கிறார்:

    எவ்வளவு தேடல்..இவ்வளவு தகவல்கள்..அதுவும் விலாசத்தோட..கலக்குறீங்க சகோ!!

  4. kavin சொல்கிறார்:

    kathai nantrakavea ullathu

  5. sakthivel சொல்கிறார்:

    நன்றி,
    இது என் அம்மாவின் குல தெய்வம். இது நடந்த உண்மை.கொஞ்சம் மிகைபடுத்த பட்டுள்ளது அவ்வளவுதான்.இன்னும் இந்த கோவில் சுடுகாட்டில் தான் உள்ளது.இதுவே நடந்த உண்மைக்கு ஆதாரம்.

    • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

      நல்லது நண்பரே!. இக்கோவிலின் கல்வெட்டுகளிலிருந்து இச்சம்பவம் எத்தனை உண்மையானது என்பதனை அறிய முடியும். கோவில் சுடுகாட்டில் உள்ள தகவல் உங்கள் மூலம் கிடைக்கப்பெற்றது மிக்க மகிழ்ச்சி.

  6. sakthivel சொல்கிறார்:

    நன்றி நண்பரே.இதேபோல் எங்கள் வழிபாட்டு தெய்வத்திற்கும் யாரும் கேள்விபட்டிடாத ஒரு பூஜை வழிபாடு உண்டு. இந்த தெய்வத்திற்கு குடிப்பாடுடைய ஓவ்வொருவரும் ” தெவம் செய்து பெயர் சூட்டும் விழா” நடத்த வேண்டும். இது கட்டாயம்.
    குழந்தைகளுக்கு சாமிகள் பெயர் சூட்டப்படும்.இது இரண்டு நாள் வழிபாடு.இது வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடக்கும்.வியாழன் இரவு முழுவதும்.பல்வேறு பூஜைகளும்,வெள்ளிக்கிழமை காலை குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதும் நடக்கும்.
    ராசாக்கள் சுவாமி என்பது தான் எங்கள் வழிபாட்டு தெய்வம்.அதென்ன வழிபாட்டு தெய்வம் என்று நீங்கள் கேட்கலாம்.
    எங்கள் குலதெய்வம் கரூர் அருகில் உள்ள ஸ்ரீ முச்சிலியம்மன். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னால் ( இது எப்போது என்பது யாருக்கும் தெரியாது) ஆற்றங்கரையில் மண் பானை செய்ய மண் எடுக்க சென்ற போது ஆற்றில் பேழை மூடியில் ஒரு அரை அடி மட்டுமே உள்ள சுவாமி சிலை, மணி மற்றும் தட்டுகள் மிதந்து வந்தது.
    அவற்றை எடுத்த அவர்கள் அந்த சுவாமி பற்றி விசாரிக்க, அது கொங்கு கவுண்டர்கள் வணங்கி வந்த தாகவும் அதன் வழிபாடு பற்றி கேள்வி பட்ட அவர்கள், அவற்றை பின்பற்ற தொடங்கி விட்டார்கள்.
    ஆனால் மூலவர் சிலை மட்டும் கிடைக்கவில்லை.பின் அந்த சிலை மணலூர் என்னும் இடத்தில் பத்து வருடங்களுக்கு முன் கிடைத்தது. ஆனால் அந்த இடத்தில் தான் இருப்பதாகவும் சரியான நேரத்தில் சுயம்புவாக வெளியே வருவேன் என்றும் பக்தர்கள் கனவில் தோன்றி கூறியதாகவும் கூறக்கேட்டு உள்ளேன்.
    அந்த இடம் சங்கம்பொதை என்று அழைக்கபட்டது. சங்கம்பொதை என்பது ஆற்று ஓரத்தில் வளரக்கூடிய ஒரு செடி.அந்த பகுதி மேடாக இருக்கும், அங்கு தான் ரொம்ப நாட்களாக பூஜை செய்து வந்தார்கள்.
    “ஆதி மணலூரில் ஆக்கிறமிச்சோம் சங்கம்பொதை”
    என்று பாடலும் உண்டு.
    இவ்வாறு பல ஆச்சரியபடும் வகையில் இருந்தாலும் இந்த ஸ்வாமிகள் பற்றிய முழுமையான தகவல்கள் எதுவும் இல்லை. எந்த நூற்றாண்டு, யார் வழி பட்டு வந்தார்கள் என்ற விவரங்கள் இல்லை.
    இப்பொது நிறைய சுவாமி சிலைகள் சேர்ந்து விட்டன.
    அனைத்து சிலைகளுக்கும் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் பதிவு பெற்று உள்ளோம்.
    ஏனென்றால் சுவாமி சிலைகள் அனைத்தும் கோவில்களில் வைப்பது கிடையாது. எப்போதும் அவை யார் வீட்டில் பூஜை நடக்கிறதோ அங்கு தான் இருக்கும்.
    அடுத்தவர் பூஜை செய்யும் வரை அங்கு இருக்கும்.அடுத்தவர்கள் கேட்டால் பங்காளிகள் அனைவரும் வந்து கணக்கு பார்த்து பிறகு கொடுப்பார்கள்.
    இவ்வாறு பல நடைமுறைகள் உள்ளன.
    இடையே வழிபாடு நடத்த ஆரம்பித்தால் அது வழிபாட்டு தெய்வம் ஆகியது.
    தட்டைய நாடு என்ற பிரிவைச் சார்ந்த குடிமக்கள் தான் வணங்கி வருகின்றனர.இதில் ௩௬ பூசாரிகள் என்று பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பூசாரி வகையில் சுமார் 20 முதல் 60 குடிப்பாடுகள் உள்ளனர்.
    கொங்கு நாடு மொத்தம் 24 நாடுகளாகவும் 8 ஊர்களாகவும் பிரிக்கப்பட்டு இருந்தது( மதுக்கரை பட்டையதில் உள்ள தகவல் இது). இதே போன்ற வழிபாடுகள் அனைத்துப் பிரிவுகளிலும் உண்டு.

    • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

      அனைத்து தகவல்களும் எனக்கு புதியது நண்பரே. மதுக்கரையைத் தவிற. மதுக்கரை எனது ஊரின் மறுகரையில் உள்ள ஊர். இரு ஊர் நடுவே காவிரி ஓடிக்கொண்டிருக்கிறாள். மிக்க நன்றி நண்பரே!..

  7. கௌரி சரவணன் சொல்கிறார்:

    பெரியண்ணன், (முத்து கண்டியண்ணன்) நடு அண்ணன், சின்னண்ணன் மூவரும் நம்பியண்ணன் உடன் பிறந்தவர்களே. ஆகையாளே கிழங்கு நாடு மூன்று அண்ணன் மார்களால் உள் பிரிவு வழங்கபடுகிறது.

பின்னூட்டமொன்றை இடுக