கதைகளும் நானும் – மழலை ஞாபகங்கள்

அனுபவங்கள் கையில் இருக்கும் விரல்களைப் போன்றது. அது ஒன்றுபோல மற்றொன்று அமைவது கிடையாது. ஒரே கதை என்றாலும் வாசிப்பவரின் மனதிற்கு தக்கவாறு அனுபவமும் மாறும். அதுபோன்ற கதைகள் எனக்கு கிடைத்த அனுபவங்களையும், கொடுத்த அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

கதைகள் என் சிற்றன்னையின் மூலம் எனக்கு அறிமுகமானது. ஆண் வாரிசு இல்லாத குடும்பத்தில் நான் முதல் வாரிசு என்பதால் அதிக கவனம் எடுத்துக்கொண்டார்கள் எல்லோரும். தூங்க வைப்பதற்காக தாலாட்டு பாடல்களும், கதைகளும் குறைவில்லாமல் கிடைத்திருக்கின்றன. ஆனாலும் அந்த ஞாபகங்கள் நீர்த்திவலைகள் படிந்த கண்ணாடியில் தெரியும் முகம் போல கலங்கலாகவே இருக்கின்றன.

அந்தக் கதைகளில் விலங்குகள் மனித பாஷை பேசும். ஆரறிவு உள்ளவைகளாக சுயமாக சிந்திக்கும். வீட்டில் வாழும் விலங்கள் அப்படியில்லை என்றும் காட்டில் வாழும் பறவைகளும், விலங்குகளும் பேசும் என்றே நெடுநாட்கள் நினைத்திருந்தேன். ஆனால் உண்மை தெரியவந்தபோது, என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுநாள் வரை மனதிற்குள் இருந்த உலகம் வெறும் கற்பனை என்ற உண்மையை தாங்கிக்கொள்ள முடியவில்லை. கதையின் கதாநாயகர்கள் செத்து போவதைபோல கனவுகள் வந்தன. கற்பனை உலகிற்கும், நிஜ உலகிற்கும் இருக்கும் வேறுபாடுகளை உணர்ந்த பின், கதைகளின் ருசி எனக்கு பிடித்துப்போனது. ஆனால் அதுவரை கேட்கமலேயே கிடைத்த கதைகள் நின்றுபோனது.

கதைகள் வேண்டுமென நான் தேட ஆரமித்தது, என்னுடைய பள்ளிக் காலத்தில்தான். கிராமத்தில் இருக்கும் அனைவரும் ஒரு நடமாடும் சிறுகதை புத்தகங்கள். அவர்களிடம் பேய்க்கதைகள், சாமிக்கதைகள், குடும்பக் கதைகள் என எண்ணற்ற கதைகள் இருந்தன. அவற்றை கேட்க பண்டமாற்று முறை போல, நானும் ஒரு கதை கூற வேண்டியிருந்தது. அதன் காரணமாக ஒரு குழுவில் கிடைக்கும் கதையை அடுத்த குழுவில் பகிர்ந்து கொண்டு புதுக்கதைகளை தேடிவந்தேன். மற்றக் கதைகளை விட சாமி்க்கதைகள் மிகவும் சுவாரசியமானவை.

“ராத்திரி நேரம். எல்லாரும் தூங்கிங்கிட்டு இருக்காங்க, அப்ப திடீர்ன்னு சங்கிலி சத்தம் கேட்குது. ரோட்டுல ஒரே புகை. சங்கிலி கருப்பு மீசையை முருக்கிக்கிட்டு ரோட்டுல வருது” என்று ராஜலட்சுமி சொன்ன கதை இன்னும் ஞாபகம் இருக்கிறது. அந்தக்கதை கேட்க ஒன்றாய் திண்ணையில் குழுமியிருப்போம். யார் கதை சொல்வது என்ற போட்டி நடக்கும். அதிக சுவாரசியம் நிறைந்த கதைகளை யார் சொல்லுகின்றார்களோ, அவர் தான் அங்கு சூப்பர் ஸ்டார்.

அந்தக் கதைகளில் சுவாரசியத்திற்காக தாங்களே சில சம்பவங்களை சேர்த்திருப்பார்கள். ஆனால் அதெல்லாம் பொய் என்று தெரிந்தாலும், கதை கேட்பதில் இருக்கும் ஆர்வம் எதையும் பொருட்படுத்தாது. கதை கேட்ட முடித்தபின் அடித்துக் கொள்வோம். மீண்டும் அடுத்த நாள் அதே இடத்தில் கூடுவோம். இப்படி எங்களுக்குள் இருக்கும் கதைகளை மாறிமாறி எடுத்துக்கொண்டோம். ஒருவருக்கு தெரிந்த கதை மற்ற அனைவருக்கும் தெரிந்து, எல்லோருக்கும் சொந்தமானது. பின்நாட்களில் சொல்ல கதைகள் ஏதும் இல்லாமல் போக கதைகளிலிருந்து மாறி, சம்பவங்களை பற்றி பேச தொடங்கினோம்.

கற்பனைக் கதைகளிலிருந்து கொஞ்சம் மீண்டு புராணங்கள் அறிமுகமாகத் தொடங்கின. தாத்தா எனக்காக புராணங்கள் கதையை படக்கதையாக வெளியிட்டிருந்த புத்தகங்களை வாங்கிதந்தார். ஐயப்பன் கதையில் புலிபாலை கொண்டுவருவது பற்றி சொன்ன போது, சங்கிலி கருப்பனுக்கு பதிலாக ஐயப்பன் ஹிரோவானார். அதன் பின் இந்து மதத்தின் எல்லைகளற்ற வெளி எனக்காக திறந்தது. மகாபாரதமும், இராமயணமும் மிகப்பெரிய கதைக்களஞ்சியம். அதை புனிதமாக மாற்றி பூஜை அறையில் வைப்பதைவிட குழந்தைகளிடம் கொண்டு செல்வதே முக்கியமானது. அது மக்களுக்கு நல்லதை சொல்ல படைக்கப்பட்டது. பெரிய புராணம் மக்களுக்கானது. அதன் சாரம்சத்தில் அது புரியும்.

அடுத்து கதை புத்தகங்களின் மீது கவனம் வந்தது ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த சமயம். சிறுவர் மலர் புத்தகங்கள் கிடைக்கத்தொடங்கின. வெள்ளிக்கிழமை மாலை என் வீட்டிற்கு அருகே வசித்துவந்த தமிழ் ஆசிரியரின் வீட்டிற்கு சென்று சிறுவர் மலர் வேண்டுமென கேட்பேன். அவருடைய மனைவி எடுத்துதருவார். தமிழில் எழுத்துகூட்டி கூட்டி படித்து புரிந்துகொள்ளும் முன்பே அடுத்த வெள்ளி வந்துவிடும். மீண்டும் புதுபுத்தகம். அதை படிக்கும் முன்பு அடுத்த புத்தகம் என்று போய்க்கொண்டே இருந்தது. அந்தப் பழக்கம் இன்றுவரை தொடர்கிறது. அதே சிறுவர் மலர் புத்தகம் படிக்க இப்போது 10 நிமிடங்கள் கூட ஆவதில்லை. ஆனாலும் புதிய கதைகள் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இப்படி சைவமாக சென்று கொண்டிருந்த கதைகளில் அசைவமும் சேரத்தொடங்கின. அசைவம் என்றால் அதாங்க செக்ஸ் கதைகள். அந்த அனுபவத்தை அடுத்த இடுகையில் சொல்கிறேன். காத்திருங்கள்.

10 comments on “கதைகளும் நானும் – மழலை ஞாபகங்கள்

  1. vasudevan சொல்கிறார்:

    அடுத்த பதிவிற்காக உங்களுக்கு உதவிட இந்த இடுக்கையை தருகிறேன்

    http://www.exbii.com/showthread.php?t=362430

    எதோ என்னால் முடிந்ததை தந்தேன் !

  2. கல்பனா சொல்கிறார்:

    சிறுவயதிலிருந்தே கதைகளை தேடுகின்றீர்கள் என்பது மகிழ்ச்சி. மகாபாரதம் போன்ற இதிகாசங்களைப் பற்றி நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. அவைகளை மாணவர்களிடம் கொண்டு செல்லுதல் முக்கியமான ஒன்று.

    நல்ல பகிர்வு. அந்தரங்க கதைகளை பற்றி என்ன சொல்லப் போகின்றீர்கள் என காத்திருக்கிறேன். ஆபாசம் இல்லாமல் இருக்கும் என்ற நம்பிக்கையுடன்.

  3. படைப்பாளி சொல்கிறார்:

    அருமை..சிறுவர் பருவத்து கதை கேட்கும் நினைவுகள் அப்படியே நெஞ்சில் நிழலாடுகின்றன..

  4. தஞ்சை சரவணன் சொல்கிறார்:

    நல்ல பகிர்வு தொடருங்கள்

  5. மருதநாயகம் சொல்கிறார்:

    அடுத்தது செக்ஸ் கதைகள் பற்றியா. சீக்கிரம் எழுதுங்கள்.

பின்னூட்டமொன்றை இடுக