‘பிச்சைக்காரன்’ விமர்சனம்

படம் முடியும் தறுவாயில், நீங்கள் படத்துடன் ஒன்றிப்போய் மனம் நெகிழ்ந்து மெய்மறந்து அமர்ந்திருக்கும்போது, திரையில் இயக்குனர் சசியின் குரல் ஒலிக்கிறது. உள்ளத்தை உருக்கும் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் கதையை உருவாக்கியதாக அவர் சொல்லி முடித்தவுடன், பார்வையாளர்களின் கைதட்டலில் திரையரங்கம் அதிர்கிறது. அது இப்படத்தின் வெற்றியை உலகெங்கும் எடுத்துச் செல்லுகிறது.

இயக்குனர் சசி ஆண்டுக்கு ஒன்று என்ற வீதத்தில்கூட படம் எடுத்து தள்ளுபவர் அல்ல. இத்தனை ஆண்டுகளில் அவர் இயக்கிய ஆறாவது படம் இது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவரது நிதானம், தேடல், கதைக்கரு தேர்வு, திரைக்கதை அமைப்பதை ஏனோதானோ என்று செய்யாமல் மனிதநேயத்துடன் ஒரு தவம் போல் மேற்கொள்வது, பாமரனுக்கும் புரியும் வண்ணம் காட்சிகள் அமைப்பது ஆகிய பண்புகள் அவரை தனித்துவம் உள்ள இயக்குனராய் அடையாளப்படுத்துகின்றன. அதனால் தான் பிச்சைக்காரர்களின் உலகத்தை சித்தரித்த, வன்முறை ஸ்பெஷலிஸ்டான ‘நான் கடவுள்’ பாலாவைவிட, மனிதாபிமானம் கொண்ட ‘பிச்சைக்காரன்’ சசி நம் நெஞ்சுக்கு நெருக்கமானவராக இருக்கிறார்.

இனி பிழைக்க மாட்டார் என மருத்துவர்களால் கைவிடப்பட்டு, கோமா நிலையில் மரணத்தின் வாசலருகே கிடத்தப்பட்டிருக்கும் தன் அன்பான தாய்க்கு உயிர்பிச்சை வேண்டும் என்ற வேண்டுதலுடன், 900 கோடி ரூபாய் சொத்துள்ள ஓர் இளம் தொழிலதிபர், தன் செல்வம், செல்வாக்கு, அடையாளம் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, முகம் தெரியாத நகரத்துக்குப்போய், பிச்சைக்காரர்களோடு ஒரு பிச்சைக்காரனாக 48 நாட்கள் பிடிவாதமாய் வாழ்ந்து தன் வேண்டுதலை நிறைவேற்றுகிறான். இந்த 48 நாட்களில் பிச்சைக்காரர்களின் உலகம் அவனுக்கு என்ன கற்றுக்கொடுத்தது? அப்போது அவன் எதிர்கொள்ளும் சிக்கல்கள், துன்பங்கள், இடையூறுகள் என்ன? அவற்றை அவன் எப்படி கடக்கிறான்? அவனது தாய் உயிர் பிழைத்தாரா, இல்லையா? என்பது தான் ‘பிச்சைக்காரன்’ படத்தின் வித்தியாசமான, சுவாரஸ்யமான, ஆபாசமில்லாத, விறுவிறுப்பான கதை.

கதையின் நாயகனாக, இளம் தொழிலதிபர் + பிச்சைக்காரனாக விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாத, அமைதியான, இயல்பான நடிப்பு. அம்மா மீது உயிரையே வைத்திருக்கும் மகனாக, மிடுக்கான தொழிலதிபராக, முதலில் பிச்சை என்ற சொல்லையே உச்சரிக்கத் தயங்குபவராக, பின்னர் தன் காதலியிடமே தன்னை பிச்சைக்காரன் என அறிமுகம் செய்துகொள்பவராக, தீயவர்களுக்கு எதிராக வீராவேசம் காட்டுபவராக… என சகல பரிமாணங்களிலும் அசத்தலாய் வாழ்ந்திருக்கிறார். அவரது அண்டர்பிளே நடிப்பும், அவருடைய நடிப்பில் வெளிப்படும் கண்ட்ரோல்டு எமோஷனும் ஒரு நடிகராக அவருக்கு வாய்த்த மிகப் பெரிய பலம். பாராட்டுக்கள். கீப் இட் அப்.

0b4

நாயகியாக வரும் புதுமுகம் சாத்னா டைட்டஸ், போணியாகாமல் ஈ ஓட்டும் பீட்சா கடை உரிமையாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அழகாக இருக்கிறார். புதுமுகம் என சொல்ல முடியாதபடி நேர்த்தியாக நடித்திருக்கிறார். போதையில் நடுரோட்டில் மட்டையாகிக் கிடப்பவனைப் பார்த்து ஒதுங்கிப்போகாமல், அவனது செல்போனை எடுத்து அவனுடைய வீட்டுக்கு தகவல் கொடுத்து அனுப்பி வைப்பது, நாயகன் பிச்சைக்காரன் என்று தெரியாமல், அவனொரு பீட்சா சமையல் கலைஞனாகவோ, பத்திரிகை ரிப்போட்டராகவோ இருப்பான என்ற நினைப்பில் அவனை காதலிப்பது, அவன் பிச்சைக்காரன் என தெரிந்து அதிர்ந்து அவனிடமிருந்து விலக நினைப்பது, எனினும் விலக முடியாமல், மழையில் நனைந்துகொண்டிருக்கும் அவனுக்கு ரெய்ன்கோட் கொண்டுவந்து கொடுப்பது என காட்சிக்கு காட்சி அருமையாக நடித்து ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்துவிடுகிறார்.

முத்துராமன், தீபா ராமானுஜம், பக்ஸ் என்ற பகவதிபாபு உள்ளிட்டோர் பொருத்தமான தேர்வு. தங்கள் பாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனியின் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. பிச்சைக்காரன் தீம் இசையும், “நூறு சாமிகள் இருந்தாலும்…” என தொடங்கும் பாடலும் ரசிக்க வைக்கின்றன. பிரசன்ன குமாரின் கேமரா பிச்சைக்காரர்களின் எளிய உலகை அழகாய் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. இப்படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு சிறப்பு அம்சம் – வசனம்.

“பேப்பர் போடுறவன் பேப்பர்காரன். பால் போடுறவன் பால்காரன். அப்போ பிச்சை போடுறவன் தானே பிச்சைக்காரன்?”

”எல்லோருக்கும் நிரந்தர எதிரி பசி. அதை கொஞ்சம் நேரம் நண்பன் ஆக்கிக்கலாம்னு பார்த்தேன்.”

”அவங்க போடுற ஒரு ரூபாய்க்காக நமக்கு ரெண்டு கண்ணும் இருக்கக் கூடாதுன்னு நினைப்பாங்க.”

”பிச்சைக்காக ஏந்துற கை, அடிக்க ஓங்காது.”

”பிச்சைக்காரனா இருந்ததுக்காக வருத்தப்படலை. ஆனா, பணக்காரனா இருக்குறது அருவருப்பா இருக்கு”

”அவங்க கோயிலுக்குள்ள பிச்சை எடுக்கிறாங்க. நாம கோயிலுக்கு வெளியே பிச்சை எடுக்கிறோம்.”

“பிச்சை போடுறதா இருந்தா போடு. இல்லேனா இல்லைன்னு சொல்லிடு. அவங்களை வீணா காக்க வைக்காதே” போன்ற வசனங்கள் அப்ளாஸை அள்ளுகின்றன.

நல்ல கதைக்களம்; பெற்ற தாயை இரக்கமில்லாமல் முதியோர் இல்லத்தில் கொண்டுபோய்விடும் இந்த காலகட்டத்தில் குடும்பத்தோடு அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம். அத்துடன், சுவாரஸ்யமான நல்ல பொழுதுபோக்குப் படம்.

‘பிச்சைக்காரன்’ – வெற்றிக்கு சொந்தக்காரன்!