“என் கதாபாத்திரங்கள் என்னை நல்ல மனுஷி ஆக்குகின்றன!” – பார்வதி

அவர் திரையுலகுக்குள் அடியெடுத்து வைத்து 10 ஆண்டுகள் ஆகி விட்டன. இருந்தும் அவர் நடித்துள்ள படங்களின் எண்ணிக்கை 20க்கும் குறைவுதான். ஆனால் அவை அத்தனையும் மிக முக்கியமான, குறிப்பிட்டுச் சொல்லத்தக்க படங்கள்.

தனக்கென தனி ஆளுமையையும், தனி பாணியையும் வளர்த்துக்கொண்டு, தனித்தன்மையுடன் தென்னிந்திய சினிமாவில் வலம் வந்துகொண்டிருக்கும் அவர் – நடிகை பார்வதி!

தமிழில் பார்வதி நடித்த ‘பூ’, ‘சென்னையில் ஒருநாள்’, ‘மரியான்’, ‘உத்தம வில்லன்’ ஆகிய படங்கள் தனி சிறப்பு வாய்ந்தவை. ‘பெங்களூர் டேஸ்’ என்ற மலையாள வெற்றிப்படத்தில் ‘ரேடியோ ஜாக்கி’ சாரா என்ற சவாலான கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை வாரிக் குவித்த பார்வதி, அந்த மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பெங்களூர் நாட்கள்’ படத்திலும் அதே ‘ரேடியோ ஜாக்கி’ சாரா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒரே கதாபாத்திரத்தை இரண்டு மொழிகளில் நடிப்பது இவருக்கு போரடிக்கவில்லையா?

“பெங்களூர் டேஸ்’ இயக்குனர் அஞ்சலிமேனன், சாரா கதாபாத்திரத்தை என்னிடம் சொன்னதிலிருந்து அந்த கதாபாத்திரமாகவே என்னை பாவிக்க ஆரம்பித்தேன். முழுமையாக அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கிக்கொண்டேன். ‘பெங்களூர் டேஸ்’ முடிந்தபிறகும் சக்கர நாற்காலியிலிருந்து என்னால் எழுந்திருக்க முடியவில்லை. தமிழ் ரீமேக்கில் அதே கேரக்டரில் நடிக்க அழைத்தபோது, நான் போட்ட ஒரே நிபந்தனை, சாரா கேரக்டரை துளியளவுகூட மாற்றக்கூடாது என்பதுதான். ஒரே கேரக்டரில் மீண்டும் நடிக்கும்போது நம்மை இன்னும் மெருகேற்றிக்கொள்ள முடியும்.”

இவரது பார்வையில் ‘பெங்களூர் டேஸ்’ இயக்குனர் அஞ்சலிமேனன், ‘பெங்களூர் நாட்கள்’ இயக்குனர் பொம்மரிலு பாஸ்கர் – யார் பெஸ்ட்?

“ஒரே கதையை இருவரும் இயக்கியிருக்கிறார்கள். இருவரிடமும் அவரவரது தனித்தன்மையைக் கண்டேன். இதில் யார் பெஸ்ட் என்றெல்லாம் மார்க் போட முடியாது. என்னுடைய கேரக்டரை பொறுத்தவரை இருவருமே மிக அற்புதமாக கையாண்டார்கள்.”

திரையுலகில் கடந்த 10 ஆண்டுகளாக இருக்கும் இவர் இதுவரை என்ன சாதித்திருப்பதாக நினைக்கிறார்?

“நான் பணமோ புகழோ சம்பாதிப்பதற்காகவோ, அல்லது எதையாவது சாதிப்பதற்காகவோ சினிமாத்துறைக்கு வரவில்லை. என்னை ஒரு நல்ல மனித ஜீவனாக வளர்த்துக் கொள்வதற்காகவே இந்த துறையில் இருக்கிறேன். நான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் என்னை ஒரு நல்ல மனுஷி ஆக்குகிறது. என் கதாபாத்திரங்கள் வழியே நான் நிஜ மனிதர்களைப் புரிந்துகொள்கிறேன். இந்த புரிதல் என்னை நல்ல மனுஷி ஆக்குகிறது. மனிதர்களிடமும், மனித வாழ்க்கையிடமும் நான் கூடுதல் சென்சிட்டிவாக இருக்க இது எனக்கு உதவுகிறது.”

என் பெயரில் சாதி அடையாளம் தேவை இல்லை என்று இவர் சொன்னது சர்ச்சையை கிளப்பியிருக்கிறதே?

“அது என்னுடைய தனிப்பட்ட உரிமை. மற்ற யாரையும் நான் உங்கள் சாதி அடையாளத்தைத் தூக்கி எறியுங்கள் என்று சொல்லவில்லையே! பிறகு ஏன் சர்ச்சை கிளம்பப் போகிறது? சாதி வேண்டுமா, வேண்டாமா என்பது அவரவர் விருப்பம். வேண்டாம் என்பது என் விருப்பம்.”

அழகும் திறமையும் இருந்தும் இவர் ஏன் இன்னும் டாப் ஹீரோயினாக வர முடியவில்லை?

“அழகுக்கு என்ன வரையறை வைத்திருக்கிறீர்கள்? மூக்கும் முழியுமாக, சிவப்பாக இருப்பதுதான் அழகு என்று நினைத்தீர்கள் என்றால்,. பல படங்களில் அயிட்டம் சாங்கிற்கு ஆடுகிறவர்கள் என்னைவிட அழகாக இருக்கிறார்கள். எனக்கு தோழியாக நடிக்கிற ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் பலர் என்னைவிட அழகாக இருக்கிறார்கள். அழகு என்பது ஒரு விஷயமே இல்லை. டாப் ஹீரோயின் ஆக வேண்டும் என்றால் என்ன தகுதி? நிறைய படங்களில் நடிக்க வேண்டுமா?, நிறைய சம்பளம் வாங்க வேண்டுமா? எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு நடிகை. என் தொழிலை நான் நேசிக்கிறேன். அதற்கு நேர்மையாக இருக்கிறேன். இதை தாண்டி நான் யோசிப்பதே இல்லை.”

மிகவும் எளிமையாக இருக்கிறாரே… எப்படி?

ரொம்ப நல்லவராக இருக்கிறீர்களே… எப்படி என்று கேட்கிற மாதிரி இது இருக்கிறது. ஒருவர் நல்லவராக இருப்பதைப் போல, எளிமையாக இருப்பதும் அடிப்படையான விஷயம். தேவையில்லாத எதையும் நான் என்னோடு வைத்துக் கொள்வதில்லை – அது பணமாக இருந்தாலும்கூட! நான்கைந்து உதவியாளர்கள் என்னால் வைத்துக்கொள்ள முடியும் தான். அப்படி வைத்துக்கொண்டால், அந்த நான்கைந்து பேரும் சரியாக சாப்பிட்டார்களா? தூங்கினார்களா? என்கிற கவலை எல்லாம் எனக்குள் வந்துவிடும். அதை ஏன் நான் சுமக்க வேண்டும்? எனக்கு நானே துணை, எனக்கு நானே உதவி.”

தெளிவாகத் தான் இருக்கிறார்! வாழ்த்துக்கள் பார்வதி!!