ரஜினி முருகன்’ விமர்சனம்

சிவகார்த்திகேயன் – சூரி – இயக்குனர் பொன்ராம் கூட்டணியில் ஏற்கெனவே வெளிவந்து வணிகரீதியில் வெற்றி பெற்ற ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை நினைவூட்டக்கூடிய பாத்திர படைப்புகள் மற்றும் காட்சியமைப்புகளுடன் கல்லா கட்ட வந்திருக்கிறது ‘ரஜினி முருகன்’.

மதுரையில் நிறைய சொத்து-பத்துக்களுடன் வாழ்ந்துவ்ருகிறார் ராஜ்கிரண். இவருடைய பிள்ளைகளில் ஞானசம்பந்தம் தவிர மற்றவர்களெல்லாம் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்கள். ஞானசம்பந்தம் மட்டும் மதுரையிலேயே தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

ஞானசம்பந்தத்தின் மகன்தான் நாயகன் சிவகார்த்திகேயன். இவர் படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர் சூரியுடன் சேர்ந்து மதுரையில் வெட்டியாய் ஊர் சுற்றி வருகிறார். அவர் நாயகி கீர்த்தி சுரேஷை பார்த்ததும் காதல் வயப்படுகிறார்  ஆனால் கீர்த்தி சுரேஷ் இவரை கண்டுகொள்வதில்லை.

கீர்த்தி சுரேஷின் இதயத்தில் இடம் பிடிப்பதற்காக நிறைய கோமாளித்தனங்கள் செய்கிறார் சிவகார்த்திகேயன். ஒரு கட்டத்தில் இவரது கோமாளித்தனங்கள் பிடித்துப்போகவே, கீர்த்தி சுரேஷூம் இவரை காதலிக்கத் தொடங்குகிறார்.

சிவகார்த்திகேயனின் அப்பாவும், கீர்த்தி சுரேஷின் அப்பாவும் பல ஆண்டுகளுக்குமுன் நண்பர்களாக இருந்து பின்னர் பகைவர்களாக மாறிப்போனவர்கள். இதனால் சிவகார்த்திகேயனை கீர்த்தி சுரேஷின் அப்பா வெறுக்கிறார்.

இந்நிலையில், ராஜ்கிரண் தனது பேரன் சிவகார்த்திகேயன் பெயருக்கு தன் சொத்துக்களை எழுதி வைக்க நினைக்கிறார். ஆனால் இதற்கு இடையூறாக குறுக்கே வருகிறார் ரவுடி சமுத்திரக்கனி. “ ராஜ்கிரணின் இன்னொரு பேரன் தான் நான். சொத்தில் எனக்கும் பங்கு வேண்டும்” என்று சொல்லி மோசடி ஆதாரங்களை காட்டுகிறார். பஞ்சாயத்து நடக்கிறது.

ராஜ்கிரண் – சிவகார்த்திகேயன் குடும்பத்துக்கு நீதி கிடைத்ததா? சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் காதல் கைகூடியதா? என்பது மீதிக்கதை.

வேலையில்லாத ஓர் இளைஞன், அவருக்கு ஒரு காதல், கூடவே காமெடி பண்ணும் நண்பர், பாசம் மிகுந்த தாத்தா, அவருடைய சொத்தில் பங்கு கேட்கும் அடாவடி ரவுடி என கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் பொன்ராம்.

காமெடி நாயகனாக வந்து வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன். சூரியுடன் சேர்ந்து அவர் நடத்தும் காமெடி கச்சேரி, படத்துக்கு பலம்.

படம் முழுக்க தாவணியில் கிராமத்துப் பெண்ணாக வலம் வந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பிலும் தேர்ச்சி தெரிகிறது.

ராஜ்கிரண் மதுரை மண்ணின் மணம் மாறாமல் தனது நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். வில்லனாக வரும் சமுத்திரக்கனி மிரட்டும் பார்வையாலும், ஆக்ரோஷமாக பேசும் வ்சனங்களாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட். குறிப்பாக, “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா”, “ஆவி பறக்கிற டீக்கடை”, “உன் மேல ஒரு கண்ணு” ஆகிய பாடல்கள் அருமை. பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு மதுரையை வண்ணமயமாக காட்டியுள்ளது.

‘ரஜினி முருகன்’ – லாஜிக்கே இல்லாத காமெடி முருகன்!