ரூ.5கோடி பறிமுதல் செய்த பெண் எஸ்.பி.யை கொல்ல சதி?

கரூர் மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு சொந்தமான குடோன் மற்றும் வீட்டில் ரெய்டு நடத்தி ரூ.5 கோடி பணம் பறிமுதல் செய்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவை கொலை செய்ய சதி நடப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுப்பதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம், அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு சொந்தமான குடோன் மற்றும் வீட்டில், கடந்த, 22-ம் தேதி, 4.87 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆம்புலன்ஸ், வாகனங்கள் மற்றும் பணம் எண்ணும் இயந்திரங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ரெய்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே முன்னின்று நடத்தினார்.

தற்போது, அன்புநாதன் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் அன்புநாதன் வீட்டில் பதுக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவின் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் காலை ஒருவர் பையுடன் வந்துள்ளார். அங்கிருந்த போலீஸார் அவரது பையை சோதனையிட்டதில், அதில் துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. அதை சோதித்துப் பார்த்ததில், அது விளையாட்டுத் துப்பாக்கி என்பது தெரியவந்தது.

அவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்த பத்திர எழுத்தர் வெங்கடேசன்(54) என்பது விசாரணையில் தெரியவந்தது. கரூர் நீதிமன்றம் செல்வதற்காக வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் வெங்கடேசனை மிரட்டி, வாகனத்தில் எஸ்.பி. அலுவலகத்துக்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர், எஸ்.பி. அலுவலக வாயிலில் அவரை இறக்கிவிட்டதுடன், ஒரு பையைக் கொடுத்து, “இந்தப் பையில் வெடிகுண்டு வைத்துள்ளேன். இதை எஸ்.பி. அலுவலகத்தில் வைக்காவிட்டால், உன்னையும், எஸ்.பி.யையும் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டியதாகவும் வெங்கடேசன் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

பத்திர எழுத்தரிடம் விளையாட்டுத் துப்பாக்கி கொண்ட பையைக் கொடுத்தனுப்பியது யார் என்று பசுபதிபாளையம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு தற்கொலைக்கு முயன்றதாகவும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் வாட்ஸ்அப் மூலம் தகவல் பரவியது.

இதையடுத்து, செய்தியாளர்கள் தனியார் மருத்துவமனையில் குவிந்தனர். ஆனால், வந்திதா பாண்டே அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. அவர் அலுவலகத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டு இருந்தது உறுதியானது.

இது குறித்து, எஸ்.பி. வந்திதா பாண்டே செய்தியாளர்களை தொடர்பு கொண்டு பேசியதோடு, ”நான் நலமுடன் உள்ளேன்; எந்த பிரச்சனையும் இல்லை. வதந்தியை பரப்பியவர்கள் யார் என்பது தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

தற்கொலை வதந்தி பரப்பிய நபர்களே கொலை செய்யவும் முயற்சி செய்கிறார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.