என்னுள் ஆயிரம் – விமர்சனம்

காஞ்சிபுரத்தில் வசிப்பவர் நாயகன் மஹா. அவரது தாயார் இறந்ததும் வேலை தேடி சென்னைக்கு வருகிறார். சென்னையில் யாரையும் தெரியாத இவர், ஒரு டிபன் கடையில் வேலை கேட்கிறார். டிபன் கடை வைத்திருப்பவரோ, மஹாவை நட்சத்திர ஓட்டலில் வேலைக்கு சேர்த்து விடுகிறார். அதன்படி நட்சத்திர ஓட்டல் நடத்தும் பாரில் வேலை பார்த்து வருகிறார் மஹா.

ஒருநாள் தன்னுடன் வேலை பார்ப்பவரின் திருமணத்திற்காக கேரளா செல்கிறார் மஹா. அங்கு நாயகி மெரீனா மைக்கேலை சந்திக்கிறார். ஏற்கனவே ஒருமுறை இவரை சந்தித்த மஹா, மீண்டும் சந்திப்பதால் அவர் மீது காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி, இருவரும் காதலித்து வருகின்றனர்.

இந்நிலையில், மெரீனாவிற்கு தெரியாமல் அவரை அவரது வீட்டார் வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். இதனால் மஹாவும் மெரீனாவும் ஊரை வீட்டு ஓடிப்போக முடிவு செய்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் செய்யும் மஹா, பிரச்சனைகளில் சிக்க, போலீஸ் அவரை தேட ஆரம்பிக்கிறது.

இறுதியில் அந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு நாயகி மெரீனாவை மஹா கரம் பிடித்தாரா? இல்லையா? என்பது மீதிக்கதை.

நடிகர் டில்லி கணேஷின் மகனான நாயகன் மஹாவிற்கு இது முதல் படம். வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடித்திருக்கிறார். தன்னால் முடிந்தவரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகியான மெரீனா மைக்கேல் காதல் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட செய்திருக்கிறார். இரண்டாவது நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி யுகலுக்கு காட்சிகள் குறைவு; என்றாலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் வின்சென்ட் அசோகன்.

மாறுபட்ட கோணத்தில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ண குமார். ஆனால், படம் பார்ப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படுகிறது. நீண்ட காட்சிகளையும், லாஜிக் மீறல்களையும் தவிர்த்திருக்கலாம்.

கோபி சுந்தர் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். அதிசயராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

‘என்னுள் ஆயிரம்’ – பார்க்கலாம்!