”மே1 7 இயக்கம் இடதுசாரி தமிழ் தேசியத்தை முன்வைக்கிறது!” – யமுனா ராஜேந்திரன்

பின்வருவது ஒரு சமூக இயக்கமாக (Social Movement) மே 17 பற்றிய எனது மதிப்பீடு.

வேறு வேறு தருணங்களில் மே 17 இயக்கம் பற்றிய தமது ஒவ்வாமைகளை, வெறுப்புகளை திருமுருகன் காந்தி மீது தேர்தல் அரசியலின் பொருட்டு தொடர்ந்து திமுக சார்பாளர்களும், சமயங்களில் இடதுசாரிகளும் கூட கடந்த காலத்தில் முன்வைத்திருக்கிறார்கள்.

மே 17 இயக்கம் முழுமையாக ஒரு மக்கள்சார்பு சமூக இயக்கம். அடித்தட்டு மட்டத்தில் கருத்தியல்பூர்வமாக மக்களைத் திரட்டுவது அதன் இலக்கு. முக்கியமாக அது தேர்தல் வழியிலான அதிகாரத்தை நோக்கமாகக் கொண்ட பரப்பியல் இயக்கம் அல்ல. தூர நோக்கில் இது அரசதிகார அரசியலுக்கு மாற்றாக மக்கள் சார்பில் நின்று தொடர்ந்து பேசும். முரண்படும். செயல்படும்.

மே 17 இயக்கத்தை ஈழப் பிரச்சினையை மட்டும் பேசும் இயக்கமாகக் குறுக்க முடியாது. தமிழக மக்களின் நலன் சார்ந்த கூடங்குளம், எட்டுவழிச்சாலை, ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டு, வேங்கைவயல் என அனைத்துப் பிரச்சினைகளிலும் அவர்கள் தமிழக மக்கள் நலன் சார்ந்து செயல்படுகிறார்கள்.

திராவிடர் கழக அணிகளுடன் இணைந்த பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு கட்சி அமைப்புகளின் கூட்டமைப்பு அல்ல. அது மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய சமூக இயக்கங்களின் கூட்டமைப்பு. எனவேதான், சமயங்களில் அதன் பேரணிகளில் விசிகவினரும் கம்யூனிஸ்ட்டுகளும் பங்கு பெறுகிறார்கள்.

திமுக சார்பாளர்கள் தமது கடந்தகால கிளர்ச்சி அரசியலுக்கு மாற்றாக இப்போது முழுமையாக ஆட்சிபீட மைய அரசியலை முன்வைக்கிறார்கள்.

அனைத்து சமூக மாற்றங்களையும் அரச அதிகாரத்தினால் சாதிக்க முடியாது. கிரவுன்ட் லெவல் கருத்தியல் அடிப்படையிலான மாற்றம் என்பதே நிரந்தர மாற்றத்திற்கு வழவகுக்கும். சமூக இயக்கங்கள் இயங்கும் வெளி இது.

அறுதியாக, ஈழப்போட்டத்தை ஆயுதப்போராட்டமாக அனைத்து இயக்கங்களும் முன்வைத்தன. அதனது தோற்றத்திற்கான அரசியல் காரணங்கள் இலங்கையில் இன்னும் அப்படியே இருக்கின்றன. ஈழப்போரட்டம் வீழச்சியுற்றதற்கான அக-புற காரணங்கள் ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் உரியன. மொழி, இனம், பண்பாடு சார்ந்த ஓருணர்வின் பொருட்டு தமிழகத் தமிழர்களுக்கு ஈழத் தமிர்கள்பால் பொறுப்பு உண்டு. அதனை மே 17 இயக்கம் திரும்பத் திரும்ப எழுப்புகிறது. இதனைக் கூடாது என்று மூர்க்கமாக சில தேர்தல் அரசியல் கட்சிகள் சார்ந்தவர்கள் மறுக்கிறார்கள்.

இது தேசிய இனப்பிரச்சினையைப் பேசுவதிலுள்ள அவர்களது நழுவல்.

மே1 7 இயக்கம் இடதுசாரி தமிழ் தேசியத்தை முன்வைக்கிறது. மத்தியத்துவப்படுத்தப்படும் இந்தியச் சூழலில் இதற்கான அழுத்தமும் தேவையாகவே இருக்கிறது. பிஜேபியின 888 பாராளுமன்ற ஆசனப் பாராளுமன்றத் திறப்பு நமக்கு அதனை ஞாபகமூட்டுகிறது.

YAMUNA RAJENDRAN