மு.க.ஸ்டாலினுடன் கெஜ்ரிவால், பகவந்த் மான் சந்திப்பு: ”ஒன்றிய அரசின் அவசர சட்டத்தை தி.மு.க. எதிர்க்கும்!”

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஜுன் 1) சந்தித்துப் பேசினார். அப்போது “ஒன்றிய அரசின் அவசர சட்டத்தை தி.மு.க. எதிர்க்கும்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஒன்றிய பா.ஜ.க அரசுக்கும், கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளதாக ஒன்றிய அரசு சமீபத்தில் அவசர சட்டம் பிறப்பித்தது. மாநில அரசின் அதிகாரத்தை இந்த சட்டம் பறிப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வருகிறார். மேலும், அவசர சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களை கெஜ்ரிவால் நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.

அந்த வகையில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க கெஜ்ரிவால் திட்டமிட்டு இருந்தார். இதற்காக சண்டிகாரில் இருந்து விமானம் மூலமாக கெஜ்ரிவால் சென்னை வந்தார். பின்னர் கார் மூலமாக சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வீட்டுக்கு வந்தார். அவருடன் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், டெல்லி கல்வி அமைச்சர் அடிஷி, ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் சஞ்சய் சிங், ராகவ் செட்டா, ஆகியோரும் வந்தனர்.

கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அழைத்து வந்தனர். மாலை 5 மணிக்கு வந்த அவர்களை வீட்டு வாசலில் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கெஜ்ரிவாலுக்கும், பகவந்த் மானுக்கும் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார். இதன்பின்னர் தலைவர்கள் சுமார் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:-

முதலமைச்சர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் என்னை சந்தித்திருக்கிறார்கள். நான் டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் அடிக்கடி கெஜ்ரிவாலை சந்திக்கிற வாய்ப்பைப் பெறுவது உண்டு. அங்கு ‘மாடல் ஸ்கூல், மாடல் கிளாஸ் ரூம்ஸ்’ என்ற ஒரு அற்புதமான திட்டத்தை நடத்தி கொண்டிருப்பதை அறிந்து, அதுபோல் தமிழ்நாட்டிலும் ஏற்படுத்த வேண்டும் என்று கருதி அந்த மாடல் பள்ளிகளை, ‘மாடல் கிளாஸ் ரூம்’களை எல்லாம் நானும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினோம். அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது.

பெண்களுக்காக பல திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. அந்த திட்டங்களில் ஒன்றாக மாணவிகள், பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குள் நுழைகிறபோது, அவர்களது கல்விக்கு உதவி செய்ய வேண்டும், நிதி உதவி வழங்க வேண்டும் என்று முடிவெடுத்து, புதுமைப்பெண் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி அதன் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம். அந்த திட்டத்தை கெஜ்ரிவால் நேரடியாக வந்து சிறப்பிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரும் ஒப்புதல் தந்து, வருகை தந்து அதை சிறப்பித்தார். அப்படி வந்த நேரத்தில், கோட்டூர்புரத்தில் அமைந்திருக்கக்கூடிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும் பார்வையிட்டு பாராட்டி மகிழ்ந்தார்.

கெஜ்ரிவாலை பொறுத்தவரை ஒரு நல்ல நண்பராக என்னோடு பழகிக் கொண்டிருக்கக்கூடியவர். நானும் அவரிடத்திலே நல்ல நண்பராக பழகி கொண்டிருக்கிறேன். அவருக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து, நரேந்திர மோடி தலைமையில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கக்கூடிய ஆட்சியை சுதந்திரமாக செயல்பட விடாமல் பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்து வழங்கி கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் டெல்லி துணைநிலை ஆளுநர் மூலமாக பல்வேறு தொல்லைகளை தொடர்ந்து கொடுக்கிறது.

5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, டெல்லி அரசுக்கு சாதகமான ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. ஆனால் அது நிறைவேறக்கூடாது என்ற எண்ணத்தோடு பா.ஜ.க. ஆட்சி அவசர சட்டத்தை பிறப்பித்து இருக்கிறது. இந்த சட்டத்தை நிச்சயமாக தி.மு.க. கடுமையாக எதிர்க்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

இதுகுறித்து இரு முதலமைச்சர்களும் எங்களோடு கலந்து பேசினர். மற்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர்களும், பல்வேறு கட்சி தலைவர்களும் என்னென்ன நிலையில் இருக்கிறார்கள் என்ற அந்த சூழ்நிலை குறித்து நாங்கள் கலந்து பேசினோம். நிச்சயமாக, எல்லா மாநிலத்தினுடைய முதலமைச்சர்களும் அகில இந்திய அளவில் உள்ள கட்சி தலைவர்களும் இதற்கு ஆதரவு தர வேண்டும் என்று நான் அவர்களை எல்லாம் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.