”தொடர் குற்றங்களுக்கு காரணமான சக்தி இன்டர் நேஷனல் மெட்ரிக்குலேசன் பள்ளியை உடனடியாக மூடவேண்டும்!”

”பாலியல் வன்முறை உள்ளிட்ட தொடர் குற்றங்களுக்கு காரணமான சக்தி இன்டர் நேஷனல் மெட்ரிக்குலேசன் பள்ளியை உடனடியாக மூடவேண்டும். மாணவி, மாணவர்களுக்கு பாதுகாப்பில்லாத மெட்ரிக், சிபிஎஸ்ஈ தனியார் பள்ளிகளை மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். பத்மசேஷாத்ரி, சுஷில் ஹரி, பரணி பார்க் பள்ளிகள், வேல்ஸ் பல்கலைக்கழக கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக பேசிய காவல்துறை தலைவர் பதவி விலக வேண்டும்” என்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), அகில இந்திய மாணவர் கழகம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் ஆகியவை வலியுறுத்தியுள்ளன.

இது தொடர்பாக இந்த அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கை:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகிலுள்ள சக்தி மெட்ரிக் பள்ளியின் +2 மாணவியின் மரணம் மாநிலம் முழுவதும் மீண்டுமொரு அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருக்கிறது. பள்ளி நிர்வாகம் கூறுவது போல் இது தற்கொலை என்று நம்புவதற்கு துளி ஆதாரமும் இல்லை.

ஏற்கனவே பாலியல் வன்முறை உள்ளிட்ட பல குற்றக் கறைகள் படிந்துள்ள நிர்வாகம் கூறுவதை ஏற்கமுடியாது. மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு உறவினர்களும் பொதுமக்களும் கள்ளக்குறிச்சியில் போராடிக் கொண்டிருக்கும்போது “போராட்டக்காரர்கள்” பள்ளிக்குள் புகுந்து கடும் சேதம் ஏற்படுத்தி விட்டதாக நீதிகோருவோர் மீது பழிசுமத்தும் செயல் பள்ளி நிர்வாகத்தின் மீது வலுமிக்க சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. இவ்வளவு பெரிய சம்பவம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் போலீஸ் எவரும் இல்லாத காட்சிகள், காவல்துறை தனது பணியிலிருந்து ஒதுங்கி நின்று பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மற்றொருபுறத்தில், ஏராளமான இளைஞர்களின் கோபமும் இந்த பள்ளியின் மீது திரும்பியுள்ளது. இதிலிருந்து இந்த நிறுவனம் எந்த அளவு கெட்டபெயர் சம்பாதித்துள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு முழுவதும் தனியார் கல்வி நிறுவனங்களில் நடக்கும் இது போன்ற கொடுமைகளால் ஏற்பட்டுள்ள கோபமும் இந்த தாக்குதல் சம்பவத்தில் வெளிப்பட்டுள்ளது என்பதை உறுதியாகக் கூறமுடியும்.

இந்த பள்ளியின் நிர்வாகி பாஜக தலைவர் என்பதோடு அந்த பள்ளியில் ”பண்பு பயிற்சி” என்ற பேரால் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி பயிற்சிகள் நடத்தியுள்ள இந்த பள்ளியின் ”பண்பு” வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மதம், சாதி, அரசியல் செல்வாக்குடன் விளங்கும் இத்தகைய பள்ளிகள் பெரும்பாலும் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவு வலதுசாரி சக்திகளின் செல்வாக்கிலிருக்கும் ”பண்பு” தெரிய வந்துள்ளது. ஏற்கனவே கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இது போன்ற ஆர்எஸ்எஸ் பயிற்சி நடந்துள்ளதும் இதையே காட்டுகிறது.

பள்ளி மீது தாக்குதலை கண்டிப்பது என்ற பெயரால் மெட்ரிக்குலேசன், சிபிஎஸ்ஈ தனியார் பள்ளிகளை மூடப்போவதாக அறிவித்துள்ளதன் மூலம், மாணவிகளின் உயிர்களைவிட தங்களின் தடைபடாத கொள்ளைகள், வன்முறைகளே மிக முக்கியம் என்று காட்டவே இந்த பள்ளிகள் விரும்புகின்றன.

1.எனவே, தமிழ்நாடு முதல்வர் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்ற வாக்குறுதியோடு நின்றுவிடக் கூடாது. வாக்குறுதியை விரைந்து நிறைவேற்ற வேண்டும். வழக்கம் போல் சில கைதுகள், வழக்குகள் பிறகு குற்றவாளிகளை தப்பிக்க விட்டுவிடுவது என்ற வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

2.தொடர் குற்றம் இழைத்துள்ள சக்தி இன்டர்நேஷனல் பள்ளியை உடனடியாக மூடிவிட்டு மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்த்து அவர்களது கல்வி உரிமையை உறுதிப்படுத்திட வேண்டும். இந்த பள்ளியில் நடந்துள்ள கடந்தகால தொடர்குற்றங்கள் பற்றியும் விசாரித்து தக்க தண்டனை வழங்கிட வேண்டும்.

3.மர்ம மரணத்துக்குள்ளான மாணவியின் குடும்பத்துக்கு பள்ளி நிர்வாகம் ரூ.ஒரு கோடி இழப்பீடு வழங்கிட அரசு உத்தரவிட வேண்டும்.

4.போராட்டக்காரர்கள் என்ற பேரால் பொதுமக்கள் மீது வழக்குப் போட்டு வேட்டையாடுவதைக் கைவிடவேண்டும்.

5.பத்மசேஷாத்திரி, சுஷில் அரி, பரணிபார்க் பள்ளிகள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கிட வேண்டும்.

6.மெட்ரிக்குலேஷன், சிபிஎஸ்ஈ தனியார் கல்விக் கூடங்கள் ‘காவிக் கூடங்களாக’ மாறிவருவது ஆபத்தானது. இந்த ஆபத்தை துடைத்தெறிகிற உறுதியான நடவடிக்கைகளை (“பண்பு பயிற்சி” போன்ற ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி பயிற்சிகளை தடை செய்வது) உறுதியாக மேற்கொள்வதோடு, மெட்ரிக், சிபிஎஸ்ஈ பள்ளிகள் அனைத்தையும் மாநில அரசு தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7.சட்டத்தின்படி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டிய காவல்துறை தலைவர், பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக பேசியிருப்பது சிபிசிஅய்டி விசாரணையின் நம்பகத் தன்மையையே கேள்விக்குள்ளாக்கி விடும். எனவே காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபுவை பதவி விலகுமாறு முதலமைச்சர் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(Via – Mathi Vanan, State Committee Member, CPI ML (Lib)Tamilnadu)