மன்னிப்பு கேட்டார் நடிகர் மாதவன்!

இஸ்ரோவின் செவ்வாய் விண்கலத்தை பஞ்சாங்கத்தை பரிசீலித்துதான் வெற்றிகரமாக அனுப்பினார்கள் என்ற தன் கருத்துக்கு மாதவன் வருத்தம் தெரிவித்து இருக்கிறார். ஆங்கிலத்தில் Almanac என்ற சொல்லை பஞ்சாங்கம் என்று தான் புரிந்து கொண்டு சொன்னதாக தெரிவிக்கிறார். Almanac என்பது கோளங்களின் சுழற்சி, பாதை, நிலை போன்றவை குறித்து ஆண்டாண்டு சர்வதேச அளவில் பதிப்பிக்கப்படும் கையேடு. இது அறிவியல் பூர்வமாக ஆய்ந்து கணக்கீடு செய்யப்பட்டு வெளியாகும் ஒன்று. உலகெங்கும் வானவியல் அறிஞர்கள் பயன்படுத்துவது. அதைத்தான் இஸ்ரோவும் பயன்படுத்துகிறது.

Almanac என்பது பண்டைய அரபி மொழியில் இருந்து வந்த சொல். அல்-மனக் என்பதன் ஐரோப்பிய மருவுதான் இது. (மத்திய காலத்தில் அறிவியலில் இஸ்லாமிய உலகம் மாபெரும் சாதனைகளை செய்திருக்கிறார்கள். அல்ஜீப்ரா, அல்காரிதம் போன்றவை கூட பண்டைய இஸ்லாமிய உலகில் உருவாகி அங்கிருந்து ஐரோப்பாவுக்குப் போனவைதான்.)

ஆனால் பஞ்சாங்கம் என்ற வட மொழிச் சொல்லுக்கு almanac என்று ஆங்கிலத்தில் தோராயமாக மொழிபெயர்த்து சிலர் பயன்படுத்துவார்கள். மாதவனும் அப்படி தோராயமாகவே புரிந்து கொண்டு சில்லறையை சிதற விட்டிருக்கிறார். இப்போது அதனை சரியாக அர்த்தம் செய்து கொண்டு அதற்காக வருந்தி இருப்பது பாராட்டத்தக்கது. இணையத்தில் பலர் அவரைக் கலாய்த்ததையும் குறிப்பிட்டு ‘எனக்கு இது தேவைதான்,’ என்றும் எழுதி இருக்கிறார். அதுவும் அவர் மீதான மதிப்பை ஓரளவு மீட்கிறது.

இதைத்தான் தொடர்ந்து எழுதிக் கொண்டு வருகிறேன். இந்துத்துவ உளறல்களை எல்லாம் அப்போதைக்கப்போதே திருப்பி அடித்து காலி செய்து விட வேண்டும். ஏதோ உளறுகிறார்கள் என்று விட்டு விடலாமே, என்று சகித்துக் கொண்டோம் என்றால் அப்புறம் கொஞ்சமேனும் படிப்பும் அறிவும் கொண்டவர்கள் கூட அவற்றுக்கு மயங்கி விடும் அபாயம் இருக்கிறது.

மாதவன் போன்றவர்கள் அதற்கு மயங்கிய சம்பவம் இந்த நிலைப்பாட்டுக்கு நமக்குக் கிடைத்த ஆகப்பெரிய உதாரணம். இதர மென் இந்துத்துவ ஆதரவாளர்களுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்.

SRIDHAR SUBRAMANIAM