ஷூ – விமர்சனம்

நடிப்பு: பிரியா கல்யாண், யோகி பாபு, திலீபன்,  ரெடின் கிங்ஸ்லி, பாலா மற்றும் பலர்

இயக்கம்: கல்யாண்

இசை: சாம் சி.எஸ்

தயாரிப்பு: ஆர்.கார்த்திக் & எம்.நியாஷ்

மக்கள் தொடர்பு: நிகில்

பாலியல் தொழிலுக்காக சிறுமிகள் கடத்தப்படும் பிரச்சனையோடு, கடந்த காலத்துக்குச் செல்லக்கூடிய ‘டைம் ட்ராவல்’ சமாச்சாரத்தை கலந்து ‘ஷூ’ படத்தின் கதையை தயார் செய்திருக்கிறார்கள்.

’டைம் ட்ராவல்’ ஆற்றல் கொண்ட ஒரு ஜோடி ஷூவை உருவாக்குகிறார் திலீபன். ஒரு கால் ஷூவை தரையில் உதைத்தால் பத்து நிமிடம் பின்னால் போகலாம். இன்னொரு கால் ஷூவை தரையில் உதைத்தால் பத்து நாட்கள் பின்னால் போகலாம் என்கிற மாதிரியான ஷூ அது. அந்த ஷூவை திலீபன் சோதித்துப் பார்க்கும்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

அந்த ஷூ சிறுமி பிரியா கல்யாணுக்குக் கிடைக்கிறது. அதை அவர் யோகி பாபுவிடம் கொடுக்கிறார்.

இதற்கிடையே, பாலியல் தொழிலுக்காக சிறுமிகளைக் கடத்தி சித்ரவதை செய்யும் கும்பலால் சிறுமி பிரியா கடத்தப்படுகிறார். பிரியாவை போல் பல சிறுமிகளைக் கடத்தல் கும்பல் சித்ரவதை செய்ய, அவர்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கும் பிரியாவுக்கு டைம் ட்ராவல் ஷூ எப்படி உதவி செய்கிறது என்பது படத்தின் மீதிக்கதை.

0a1b

கதையின் நாயகியாக சிறுமி பிரியா கல்யாண் நடித்திருக்கிறார். தாயில்லாப் பிள்ளையாக, குடிநோயாளியான அப்பாவின் ஆதரவில் வளரும் பிள்ளையாக நடித்திருக்கும் பிரியா, தன் அம்மாவை நினைத்து ஏங்கும் காட்சிகளில் நம்மை கலங்க வைக்கிறார். தன் மீது அக்கறை இல்லாத தனது அப்பா மீது அக்கறை காட்டும் அவரின் பாசம் நெகிழ வைக்கிறது.

குடிகார அப்பாவாக வரும் அ ந்தோணி தாசன், டைம் ட்ராவல் ஷூவை உருவாக்கும் திலீபன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பாலா ஆகியோரது கூட்டணியில் சில காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கின்றன.

குழந்தை கடத்தல் என்பது நாட்டில் நடக்கும் முக்கியமான குற்றம், அதிலும் பெண் குழந்தைகள் கடத்தல் பற்றி சொல்லும் இயக்குநர், அதன் பின்னணி மற்றும் கடத்தல்காரர்களின் நெட் ஒர்க் போன்ற எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாகச் சொல்லாமல், சிறுமி பிரியாவை முன் நிறுத்தி படத்தை நகர்த்துவதோடு, காட்சிகளை மெதுவாக நகர்த்திச் செல்வது சலிப்படைய செய்கிறது.

‘ஷூ’ – ஒருமுறை பார்க்கலாம்!