’டைட்டில்’ திரைப்படத்தின்  டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

விஜித் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘ டைட்டில் ‘ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளயீட்டு விழா, பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

0a1b

விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு தனது நன்றியை பதிவு செய்தார்.

பின்பு பேசிய ’ஸ்டுடியோ 9’ ஆர்.கே.சுரேஷ், ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு சிரமம் என்பதனையும், குறிப்பாக ஒரு சிறிய படத்தினை விளம்பரம் செய்து திரையரங்கில் வெளியிடுவது என்பது சுலபமான விஷயம் அல்ல என்பதனையும் பதிவு செய்தார். மேலும்,  படத்தில் நடிக்கும் நடிகர்கள் அந்த படத்தின் விளம்பரம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

மைம் கோபி, ”படத்தின் பெயரே டைட்டில் என்பதனால் பெயருக்கான அர்த்தம் என்ன என்று யாரும் கேட்க முடியாது” என்று கூறினார்.

இயக்குனர் விக்னேஷ், நாயகன் விஜித்துடன் தனது நட்பு சிறுவயதில் எவ்வாறு தொடங்கியது என்பதனை அழகாக வருணித்தார்.

நடிகர் ஜீவா மற்றும் ராஜ்கபூர் படத்தின் நாயகன் விஜித்தை வாழ்த்தியதுடன், ஒரு சிறிய படத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இயக்குனர் ரகோத்து விஜய், பத்திரிகையாளர்கள் இந்த படத்தினை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

இசையமைப்பாளர் அனல் ஆகாஷ், தனது தாய் மற்றும்  சீதா பாட்டிக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டார். “என்னால் முடியாது என்று நான் நினைத்தபொழுது என்னை நம்பி என்னால் முடியும் என்று என்னை நம்பியவர் என் தாய். ஆறு படம் நின்னு போச்சு..இது ஏழாவது படம். நிச்சயம் வெற்றி பெறும்” என்று கூறியதோடு, தன் படத்தில் இருந்து ஒரு பாடலை பாடி அனைவரையும் சிலிர்க்க வைத்தார்.

நடிகர் ராதா ரவி தனது பேச்சால் அரங்கத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தினார். தான் பேசிய அனைத்தும் எவ்வாறு ட்ரெண்ட் ஆகிறது என்பதனை நக்கலாக பதிவு செய்தார். மேலும், ஒரு படத்தில் பணியாற்றிய அனைவரும் அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதனை ஆதங்கத்துடன் தெரிவித்தார். நடிகர்கள் தங்களது சம்பளத்தை தாங்களாக ஏற்றிக்கொள்ளவில்லை எனவும், ஏற்றிக்கொடுத்தால் வாங்கிக் கொள்ளாமல் இருக்கவா முடியும் எனவும் வினவினார். ஒரு படத்தை காப்பாத்தணும்னா அது தமிழ்நாட்டு மக்களால் மட்டுமே முடியும் என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “எல்லாரும் படத்த திரையரங்கில் பாக்கணும். OTT யில் பாத்தா வேலைக்கு ஆகாது. திரையரங்கம் சென்றால் படம் பார்த்து விட்டு வர வேண்டுமே தவிர, பாப்கார்ன், ஸ்நாக்ஸ் போன்றவற்றை சாப்பிட வேண்டாம்” என்றார்.

ஒரு பெரிய பெயர்போன தயாரிப்பு நிறுவனம் நினைத்தால் வெற்றிப்படம் எடுக்க முடியும் என்பதனை தாண்டி, தமிழன் படம் எடுத்தால் வெற்றி பெற வேண்டும் என்பதே நம் லட்சியமாக இருக்க வேண்டும் என்பதனை பதிவு செய்ததோடு, நடிகர் கமல் பற்றி பெருமையாக பேசினார். மேலும் நடிகர்கள் தாடி வைத்திருப்பது தேவையற்றது  என சர்ச்சையாக பேசினாலும், இறுதியில் தாய் தந்தையரை பேணி காக்க வேண்டும் என ஒரு செய்தியுடன் தன் உரையை நிறைவு செய்தார்.

அடுத்து பேசிய மிரட்டல் செல்வா, இந்த திரைப்படத்தில் விஜய், அஜித்திற்கு நிகராக சண்டை காட்சிகள் இருக்கிறது என்பதனை தெரிவித்தார்.

படத்தின் நாயகி அஸ்வினி,  நாயகன் விஜித் தனக்கு உதவியாக இருந்து பலம் அளித்ததாக பதிவு செய்ததுடன் வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

நடிகர் பெசன்ட் ரவி, “ஒரு மனிதன் தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம்” என்பதனை அழுத்தமாக கூறினார்.

தொடர்ந்து பேசிய ரோபோ ஷங்கர், தனக்கே உரித்தான நக்கல் பாணியில் அனைவரையும் சிரிக்க வைத்தார்.

பிறகு பேசிய இயக்குநர் பேரரசு, ராதா ரவியின் பேச்சை கண்டித்துப் பேசினார். இயக்குனர் பாக்யராஜின் சிறப்பம்சங்கள் பற்றியும், எதிர்மறை தலைப்புகளை வைத்தாலும் வெற்றி கொடுக்க முடியும் என்பதை எவ்வாறு நிரூபித்தார் என்பதனையும் கூறினார். திருப்பாச்சி படம் எவ்வாறு பெயர் பெற்றது என்ற கதையினைகூட தன் பாணியில் கூறினார்.

பிறகு பேசிய ஆர்.வி.உதயகுமார், மத்திய அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கையினை வைத்தார். அதாவது திரையரங்கில் டிக்கெட் எடுப்பதற்கு ஆன்லைன் வழித்தளத்தையே பயன்படுத்த வேண்டும். அதுவே ஒரு சிறந்த வழி என அவர் கூறினார். மேலும் யூடியூப் வலைதளங்களுக்கு ஒரு கோரிக்கையினை அவர் எடுத்து வைத்தார். “நாகரீகமாக டைட்டீல் வெயிங்க. தவறாக வழி நடத்தாதீங்க மக்கள”.

கே பாக்யராஜ் தனக்கே உரித்தான பாணியில் தன் ரசனை மிக்க பேச்சினால் அனைவரையும் ஈர்த்தார். “ஒரு படத்தின் தலைப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதுவே மக்களிடம் ஒரு திரைப்படத்தை கொண்டு சேர்க்கும். குறிப்பாக பெண்களை ஈர்க்கும் வண்ணமே ஒரு தலைப்பு இருக்க வேண்டும் என்று அந்த காலத்தில் ஒரு கருத்து நிலவி வந்தது. எனது படத்தில் கூட நிறைய எதிர்மறை தலைப்பு வைக்கின்றேன் என பல்வேறு விதமான விமர்சனங்கள் எனக்கு எதிராக வரும். ‘ சுவரில்லா சித்திரங்கள்’ என்ற படம் இது போன்ற எதிர்மறை அலைகளை மீறி வெற்றி பெற்றது. எனது அனைத்து படங்களிலும் தலைப்பு என்பது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும், அதே சமயத்தில் மக்களை யோசிக்க வைக்கும் வண்ணம் இருக வேண்டும்” என்றார்.

 தனது படத்தில் ஒரு தலைப்பு எவ்வாறு உருவாகும் என்பதனை தன் நகைச்சுவை பேச்சினால் அழகாக வருணித்தார். தனது ‘அந்த 7 நாட்கள் ‘ படத்தினை பற்றியும் அவர் ஒரு சில சுவாரசியமான செய்திகளை பதிவு செய்தார். மேலும் முந்தானை முடிச்சு என்ற தனது படம் எவ்வாறு பிரபலமடைந்த்து எனவும் பேசினார்.

இறுதியாக பேசிய இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், ஒரு திரைப்படத்தை எவ்வாறு பிரபலமடையச் செய்யலாம் என்பதனை விவரித்ததுடன், திரைஉலகில் காலடி எடுத்து வைப்பதற்கு எவ்வளவு பொறுமை மற்றும் நம்பிக்கை தேவையோ  அது உங்களிடம்  இருக்கின்றது. நாம்  கன்வின்ஸ் ஆகணும்; இல்லை என்றால் கன்வின்ஸ் பண்ணனும். விட்டு குடுத்தால் தான் ஒரு படம் பண்ண முடியும்” என்று கூறினார். இறுதியாக, திரைப்படம் எடுப்பது என்பது பல்வேறு தியாகம் மற்றும் இழப்புகளை உள்ளடக்கியது என்றார்.