மீம் பாய்ஸ் – விமர்சனம்

நடிப்பு: குரு சோமசுந்தரம், படவா கோபி, ஆதித்யா பாஸ்கர், சித்தார்த், ஜெயந்த், நம்ரிதா மற்றும் பலர்

இயக்கம்: அருண் கௌசிக்

தயாரிப்பு: ‘ரெயின்ஷைன் ஸ்டூடியோஸ்’ அனுராக் ஸ்ரீவத்சவா, ருச்சிகர் ஜோஷி

உருவாக்கம்: ராஜீவ் ராஜாராம், த்ரிஷ்யா கௌதம்

இசை: கோபால் ராவ்

ஒளிப்பதிவு: ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி

ஓ.டி.டி. தளம்: சோனி லிவ்

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா – ரேகா

மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு தன்னைப் பற்றிய கேலிச்சித்திரங்களை ரசித்ததோடு, அவற்றை வரைந்த சித்திரக்காரர்களைப் பாராட்டி ஊக்குவித்தார் என்பது வரலாறு. ஆனால், தற்கால ”கேலிச்சித்திர”ங்களான – ’கார்ட்டூன்’களான – ’மீம்’களைப் பார்த்து ஆத்திரமடையும் இக்கால ஆட்சியாளர்கள், மீம் கிரியேட்டர்களை கைது செய்து சிறையிலடைக்கிறார்கள் என்பதும் வரலாறு. ’மீம்’களைப் புரிந்துகொள்ளவும், சகித்துக்கொள்ளவும் இயலாத அத்தகைய அரைவேக்காட்டு அரசியல்வாதிகளுக்கும், நிர்வாகிகளுக்கும் காமெடி கலந்த ஜாலியான சவுக்கடி தான் 8 எபிசோடுகளைக் கொண்ட இந்த ‘மீம் பாய்ஸ்’ தமிழ் வெப் தொடர்.

அபூர்வா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மோஜோ (ஆதித்யா பாஸ்கர்), ஜூலி (நம்ரிதா), பவர் (ஜெயந்த்), ஜம்போ (சித்தார்த்) ஆகியோர் தங்களுக்குப் பிடித்த துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார்கள். இந்நிலையில், ‘பத்து லட்ச ரூபாய் பரிசு’ என்ற அறிவிப்புடன் மிகப்பெரிய அளவில் ’மீம் மேக்கிங்’ போட்டி ஒன்று நடத்தப்படுகிறது, இந்த போட்டியில் தங்கள் அடையாளங்களை மறைத்து ’மீம் பாய்ஸ்’ என்ற மாற்றுப் பெயரில் ஒரு குழுவாகப் பங்கேற்கும் இந்த நான்கு பேரும் ’மீம் பேஜ்’ ஒன்றை உருவாக்கி, வித்தியாசமான மீம்களை உருவாக்குகிறார்கள்.

தாங்கள் பயிலும் அபூர்வா பல்கலைக்கழகத்தில் இருக்கும் குறைபாடுகளை மீம்கள் மூலம் கேலியாக – நகைச்சுவையாக சுட்டிக்காட்டுகிறார்கள். அந்த மீம்கள் வைரலாகப் பரவுகிறது. இதை தடுக்க பல்கலைக்கழக டீனான நாராயணன் (குரு சோமசுந்தரம்) முயற்சி செய்வதோடு, மீம் பாய்ஸ் யார் என்பதை கண்டுபிடிக்கும் புலனாய்விலும் ஈடுபடுகிறார். ஆனால் டீனிடம் சிக்கிக்கொள்ளாத மீம் பாய்ஸ், தொடர்ந்து தங்களது அதிரடி மீம்கள் மூலம் அவருக்கு பல அதிர்ச்சிகளைக் கொடுக்கிறார்கள்.

இறுதியில் மீம் பாய்ஸ் யார்என்று டீன் கண்டுபிடித்தாரா, இல்லையா?, ’மீம் மேக்கிங் ’போட்டியில் மீம் பாய்ஸ் வெற்றி பெற்றார்களா, இல்லையா? என்பதை நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும், சட்டையராகவும் சொல்கிறது ‘மீம் பாய்ஸ்’ வெப் தொடரின் மீதிக்கதை.

கல்லூரி மாணவர்களாக முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஆதித்யா பாஸ்கர், நம்ரிதா, ஜெயந்த், சித்தார்த் ஆகிய நான்கு பேரும் இயல்பாக நடித்திருப்பதோடு, உண்மையாகவே ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்களைப் போல வலம் வருகிறார்கள். இந்த நால்வருக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரியால், அவர்கள் வரும் அனைத்து காட்சிகளும் சிரிக்க வைக்கிறது, ரசிக்கவும் வைக்கிறது.

பல்கலைக்கழக டீன் நாராயணனாக வரும் அற்புதக் கலைஞரான குரு சோமசுந்தரம், அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸ் பெறுகிறார். உதவி டீனாக நடித்திருக்கும் படவா கோபி, தொடர் முழுவதும் வந்து நம்மை சிரிக்க வைக்கிறார். க்ளைமாக்ஸில் வெளிப்படும் அவரது மற்றொரு முகம் அதிர்ச்சியளிக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி, ஒரே லொக்கேஷனில் முழு தொடரையும் படமாக்கினாலும் எந்த ஒரு இடத்திலும் சலிப்பு ஏற்படாத வகையில் வித்தியாசமான கோணங்கள் மூலம் காட்சிக்கு காட்சி வேறுபாட்டை காட்டியிருக்கிறார்.

கோபால் ராவின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்து, பலம் சேர்த்திருக்கிறது.

சாதாரண கதைக்கரு தான்; என்றாலும், அதை சஸ்பென்ஸாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்திச் செல்வதில் இயக்குனர் சித்தார்த் கெளசிக் வெற்றி பெற்றுள்ளார். வலிமையான திரைக்கதையோடு, முக்கியமான ஒரு அரசியல் கருத்தை மறைமுகமாக இணைத்து விறுவிறுப்பாக விளையாடியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுகள்.

 ‘மீம் பாய்ஸ்’ – 100க்கு 200 சதவிகித நகைச்சுவையும், திருப்தியும் உத்திரவாதம்!