அக்.15 முதல் திரையரங்குகள் இயங்க ஒன்றிய அரசு அனுமதி!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 15ஆம் தேதி முதல் திரையரங்குகள் இயங்க இந்திய ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.. அத்தியாவசிய பயணத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையங்குகள் மூடப்பட்டன. இதன் விளைவாக புதிய படங்களை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சிக்கலுக்கு தீர்வு காணும் நோக்கில் சில படங்கள் ஓடிடி தொழில்நுட்பத்தில் ஆன்-லைனில் ரிலீஸ் செய்யப்பட்டன.

பின்னர் ஊரடங்கு அமலான போதிலும் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளும், குறைவான பகுதிகளில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பொழுதுபோக்கு துறையை தவிர மற்ற அனைத்திற்கும் கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த தளர்வுகளுடன் கூடிய 4-ம் கட்ட பொது முடக்கம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தளர்வுகளுடன் பொது முடக்கத்தை வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் அமலில் உள்ள அனைத்து தளர்வுகளும் தொடர்கிறன. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர இதர பகுதிகளில் மேலும் சில நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, திரையரங்குகள் 50 சதவீதம் இருக்கைகளுடன் அக்டோபர் 15ஆம் தேதி முதல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகிறது.

அதுதவிர, பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றை அக்டோபர் 15ஆம் தேதி முதல் திறக்கவும் ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுதவிர பள்ளி, கல்வி நிறுவனங்கள், விளையாட்டு பயிற்சி நிறுவனங்களை பகுதி வாரியாக திறப்பது குறித்து அக்டோபர் 15ஆம் தேதிக்கு மேல் மாநிலங்கள் முடிவெடுக்கலாம். இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி அந்தந்த மாநிலங்கள் வெளியிடலாம் எனவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.