பிரபல சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்: தலைவர்கள் இரங்கல்

பிரபல சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 88.

சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி சுயநினைவின்றிக் கிடந்த டிராஃபிக் ராமசாமியைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உதவியாளர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவரைச் சேர்த்தார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகக் கோளாறு, நுரையீரல் தொற்று, கல்லீரல் பிரச்னை, சர்க்கரை அளவு அதிகரித்தது என பலவித உடல் உபாதைகள் அவருக்கு இருந்தன. அவரது சிறுநீரில் உள்ள யூரியா கிரியாட்டினும் 3,000 என்ற அளவைக் காட்டியது. இதன்பின்னர், மருத்துவர்கள் அளித்த தொடர் சிகிச்சையின் காரணமாக மெல்ல மெல்ல உடல்நலம் தேறி வந்தார்.

கடந்த இரண்டு வாரங்களாக வழக்கறிஞர் கணேசன் உள்ளிட்ட சிலர்தான் டிராஃபிக் ராமசாமியை கவனித்து வந்துள்ளனர். இடையில் சற்று உடல்நலம் தேறியது போலக் காணப்பட்டது. எனினும், அவரால் எழுந்து நடமாடக் கூட முடியவில்லை. நேற்று (மே 4ஆம் தேதி) காலை 9 மணியளவில் பால் அருந்தினார். அதன்பிறகு 11 மணியளவில் அவரது உடல்நிலையில் ஏற்ற இறக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது. மிகவும் கவலைக்கிடமான சூழலில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் டிராஃபிக் ராமசாமி மரணம் அடைந்தார்.

சமூகத்தின் நன்மைக்காக டிராஃபிக் ராமசாமி பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்தார். சென்னையில் விதிமீறிய கட்டடங்கள், கட்டுப்பாடில்லாமல் சுற்றிய மீன்பாடி வாகனங்கள், சாலையோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, ஹெல்மெட் விவகாரம், அரசியல் கட்சிகளின் பேனர் கலாசாரம் என டிராஃபிக் ராமசாமி கையில் எடுத்த வழக்குகளில் எண்ணிக்கை மட்டும் ஐநூறை தாண்டும். அவரது வழக்குகளில் அவரே வாதாடி வந்தார். அவற்றில் பெரும்பாலானவற்றில் வெற்றி பெற்று நீதித்துறையினர் மற்றும் பொதுமக்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

அவரது வாழ்க்கைக் கதை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிப்பில் திரைப்படமாகவும் வெளிவந்தது.

டிராஃபிக் ராமசாமி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சமூகநல அக்கறையுடனும் சட்டத்தின் துணை கொண்டும், தனது கடைசி மூச்சுவரை சளைக்காத சமூகப் போராளியாக வாழ்ந்த பெரியவர் டிராபிக் ராமசாமி அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கெல்லாம் சட்டத்திற்குப் புறம்பாகச் சாலைகள் ஆக்கிரமிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் சற்றும் சமரசமின்றி அவற்றை அகற்றுவதற்காக சட்டத்தையே ஆயுதமாகப் பயன்படுத்திய சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவர்கள். சாலைவிதிகளைப் பற்றி சாமானிய மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படக் காரணமாக இருந்தவர். பொதுநலத்துக்காக வழக்குகள் தொடுப்பதையே தனது பொதுவாழ்க்கையாக்கிக் கொண்ட பெரிய மனிதர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

இதுபோல் சீமான், டிடிவி.தினகரன், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.