சந்திரயான்-2: நிலவில் தரையிறங்கும் முயற்சியில் பின்னடைவு

‘சந்திரயான் – 2’ விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, ‘விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம்’ என கூறிய பிரதமர் மோடி, இஸ்ரோ மையத்திலிருந்து புறப்பட்டு சென்றார்.

நிலவை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது.

சந்திரயான்-2 விண்கலத்தில், நிலவை தொடர்ந்து சுற்றிவரக்கூடிய ‘ஆர்பிட்டர்’, நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் ‘விக்ரம்’ என்ற லேண்டர் கலம், நிலவில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யக்கூடிய ‘பிரக்யான்’ என்ற ரோவர் வாகனம் என 3 அதிநவீன சாதனங்கள் இருந்தன..

சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் பகுதியில் இருந்து ‘விக்ரம்’ என்ற லேண்டர் பாகம் கடந்த 2-ம் தேதி வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.

48 நாட்கள் பயணத்துக்குப் பிறகு, சந்திரயானின் லேண்டர் பகுதி இன்று அதிகாலை நிலவில் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால்  ‘லேண்டர்’ சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.