வடசென்னை – விமர்சனம்

விளிம்புநிலைக்காரன் சமூகத்தின் எந்த விளிம்பிலும் இருப்பான். ஜி.நாகராஜன் போல! அவனுக்கு இருக்கும் பிரச்சினைகள் இச்சமூகமும் அமைப்பும் கொண்டுள்ள பிரச்சினைகளின் எதிர்விளைவுகள். சமூகப் புறக்கணிப்பின் பதிலாகத் தான் அவன் வாழ்க்கை இருக்கும். ‘வடசென்னை’ அன்பு கதாபாத்திரமும் அப்படித் தான்!

‘வடசென்னை’ படம் வாழ்வியல் படம் அல்ல. முழுக்க முழுக்க வணிக ரீதியாக எடுக்கப்பட்ட படமே. எனக்கு அந்த தெளிவு, பட அறிவிப்பு வரும்போதே இருந்தது. வெற்றிமாறன் ரஞ்சித் இல்லை மற்றும் ரஞ்சித் வெற்றிமாறன் இல்லை என்ற தெளிவும் இருந்தது. வேறொன்றை வெற்றிமாறன் படத்தில் எதிர்பார்த்து ஏமாற வேண்டிய அவசியமும் அதனால் எனக்கு இருக்கவில்லை.

படத்தின் முதல் பாதி திரைக்கதை முழுக்க ஒரு சினிமாவுக்கான திரைக்கதை. முதல் பாதியின் முக்கிய திருப்பத்தில் இடைவேளை விடுகிறார்கள். இரண்டாம் பாதியில் முதல் பாதியின் திருப்பங்களுக்கான பின்னணிக் கதைகளைச் சொல்லி முடித்து, அந்த திருப்பங்களைக் கொண்டு நாயகன் என்னவாக பரிமளிக்கிறார் என சொல்கிறார்கள். ஒரு சாதாரண gang feud-தான் கதை!

‘வட சென்னை’ படத்தில் என்னை ஈர்த்தது அதன் அரசியல் பின்புலம் தான். அமீர் வரும் முதல் பகுதியிலேயே ‘சிங்காரவேலர் நினைவு மன்றம்’ என்ற பெயர் பலகை என்னை ஈர்த்தது. அதிலிருந்தே படம் வேறேதோ ஒன்றை பேசப் போவதாக அவதானித்திருந்தேன். என் அவதானிப்பு வீண் போகவில்லை.

சிங்காரவேலர் மீனவ சமுதாயத்தில் பிறந்தவர். அயோத்தியா குப்பம்! இந்தியாவின் முதல் தொழிற்சங்கத்தை கட்டியவர். சென்னை மாகாணத்தில் இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய காலத்திலேயே பல தொழிலாளர் போராட்டங்களை நடத்தியவர். பிரிட்டிஷாரும் பார்ப்பனீயமும் இணைந்து போராட்டங்களுக்குள் சாதி விதை தூவி முறியடித்த பிறகு, வர்க்கப் போராட்டத்துக்கு சாதி எதிர்ப்பும் முக்கியத் தேவை என பிரச்சாரம் செய்து, பின் பெரியாருடன் இணைந்து ‘ஈரோட்டு திட்டம்’ என்ற சுயமரியாதை சமத்துவத் திட்டத்தை முன்மொழிந்தவர். இன்று வரை நாம் சந்திக்கும் எல்லா அரசியல் பிரச்சினைகளுக்கும் இத்திட்டம் தீர்வைக் கொண்டுள்ளது. அதனாலேயே அதை பேசாமல் இருப்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்கிறோம்.

இத்தகைய நபரின் பெயர் தாங்கிய பலகை படத்தில் வருகிறதெனில் அது யதேச்சையானதாக இருக்க முடியுமா? நிச்சயம் கிடையாது. நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

ராஜீவ்காந்தி படுகொலை தொடங்கி வெவ்வேறு கால கட்டத்தைய அரசியல் சூழலைச் சொன்னபடி அழைத்துச் சொல்கிறார் இயக்குநர். வெறுமனே அரசியல் பேசுவதை மணிரத்னம் தொட்டு பலர் பேசி இருக்கிறார்களே, வெற்றிமாறன் எப்படி வித்தியாசமானவர் என கேட்கலாம். கதை முழுக்க அக்காலகட்டத்து அரசியல் பேசியபடி வரும் இயக்குநர், இறுதியில் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் நடந்த அரசியல் நிகழ்வோடு முடிச்சுப் போட்டு நிற்கிறார். கார்ப்பரெட் நலனுக்கான எண்ணூர் சாலை போட குப்பங்களை அப்புறப்படுத்தும் அரசின் முயற்சிகள் எதிர்க்கப்படுகின்றன. அந்த காலகட்டத்தில் நேர்ந்த அரசு அடக்குமுறையும், துப்பாக்கிச்சூடும் அப்பாவி மக்கள் பலியானதும் வரலாறில் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்!

எம்ஜிஆர் மரணம் பேசப்படும் காட்சி ஒன்றில், அடுத்து ஜெயலலிதா தான் ஆட்சிக்கு வருவார் என்கிறார் அமீர்.
மீனவ சமுதாயத்தை ஓட்டு வங்கியாக பயன்படுத்தியதில் முக்கியமானோர் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும். ‘சிங்காரவேலர் நினைவு மன்றம்’ நடத்தும் அமீர் எம்ஜிஆரின் ரசிகராகவும் இருக்கிறார்.

ஒரு காலகட்டம் வரை எம்ஜிஆரை கம்யூனிஸ்ட் என நினைத்த கம்யூனிஸ்ட்டுகள் அதிகம். கட்சியெல்லாம் தொடங்கிய பின்னும் அவர் மீது பாசம் குறைந்திடாத கம்யூனிஸ்ட்டுகளும் இருந்திருக்கிறார்கள். அவர் போலவே கருணாநிதி உள்ளிட்ட பிற தலைவர்கள் மீது மதிப்பு கொண்ட கம்யூனிஸ்ட்டுகளும் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். அமீர் கதாபாத்திரத்தின் அதிமுக பாசத்தை அப்படித் தான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

சிங்காரவேலரை அடையாளமாக்க விரும்பிய அமீர்களுக்கு எம்ஜிஆர் போன்றோர் போட்ட ‘பாச’ முட்டுக்கட்டைகள் யதேச்சையானவை அல்ல. அந்த முட்டுக்கட்டைகளே பின்னாளில் அவர்களை அப்புறப்படுத்தும் சக்திகளாகவும் மாறின.

இவ்வகை அரசியல் பின்புலத்துக்கு ஊடாக வளர்ந்துவரும் தனுஷ் கதாபாத்திரம், இறுதியில் ‘கண்ணகி நகர்’ அரசியலையும் உலக வியாபார அரசியலையும் பேசுகையில், இந்தியாவிலும் தமிழகத்திலும் விளிம்புநிலைக்காரனாக இருக்கும் மீனவன் எல்லா காலத்திலும் சிங்காரவேலரை போன்றே புறக்கணிக்கப்பட்டு வருகிறான் என்பதே புலன்.

பிறகுதான் தனுஷ் அதிகாரத்தை கேள்வி கேட்கிறார். எந்த கட்சியையும் உள்ளே விடக் கூடாது என்கிறார். நம் பிரச்சினைகளை நாமே பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார். இதை ரவுடித்தனம் என்றால் ரவுடியாகவே இருப்போம் என்கிறார். Rowdyism என்பதே ஓர் அரசியல் நிலைதான். அதிகாரத்துக்கு எதிரான நிலை. Rebel நிலை!

‘வட சென்னை’ படத்தில் நான் கண்டது இதைத்தான். என்னை ஈர்த்ததும் இதுதான்.

Godfather படத்தில் வரும் Michael Corleone, Tattaglia போன்ற கதாபாத்திரங்களிலும், கதையிலும் உருகுவது என் விருப்பமாக இருக்கவில்லை. அந்த கதாபாத்திரங்களுக்கான மனநிலையை உருவாக்கும் பின்னணியாக என்ன இருந்தது என்பதை நேரடியாக காண்பிக்காமல் உணர்த்திய வகையில்தான் Godfather படம் இன்றளவும் எனக்கு நெருக்கமான படம் இருக்கிறது.

வந்தேறியாக அமெரிக்கா என்னும் அதிகார உச்சத்துக்குள் வாழப்போகும் ஒருவனின் insecurity என்னவெல்லாம் செய்யும்? மேலும் மேலும் அதிகாரத்தை குவிக்க வைக்கும். அதுவே Godfather படமாக நான் அறிந்தது.

‘Is this a class room or a fish market?’ என கேள்வி கேட்கும் டீச்சர்கள் இருக்கும் சமூகத்தில் எனக்கு விளிம்புநிலை மனிதன் பேசும் கெட்ட வார்த்தை சரியெனத் தான் படுகிறது. பெண்களை குறிக்கும் சொற்கள் என்பதுதான் நெருடல். அது தவிர்த்து பார்த்தால், இச்சமூகம் என்னும் அதிகாரத்தின் புறக்கணிப்பில் இருக்கும் ஒருவன் தன் கோபத்தை எப்படித்தான் காட்டிவிட முடியும்?

Godfather படத்தில் அமெரிக்காவுக்கு குடி புகும் எல்லா சிசிலியர்கள் வாழ்க்கையும் காட்டப்படவில்லை. Vito Corleone என்னும் ஒரு சிசிலியனின் வாழ்க்கையையும் அவன் குடும்பத்தையும் மட்டுமே காட்டி இருக்கிறார் Coppola. அதை பார்த்துவிட்டு ‘சிசிலியர்களே இப்படித்தான்’ என்ற முடிவுக்கு வந்தால் குற்றம் படம் எடுத்தவர் மீது அல்ல; fish market கீழானது என முடிவெடுத்தவர்கள் மீது!

அதிகாரத்தால் தொடந்து வஞ்சிக்கப்படும் மீனவனால் ஏன் ஓர் ஒருங்கிணைந்த சங்கம் கட்ட முடியவில்லை? ஊருக்கெல்லாம் சங்கம் வைக்க விரும்பிய சிங்காரவேலர் பிறந்த இடம்தானே. வர்க்கமாக திரள வேண்டியவன் சாதியாகவும் மதமாகவும் ஊராகவும் பிரிந்து கிடப்பது யாரால்?

வெற்றிமாறன் எப்போதும் அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தை படைப்பவராகத்தான் பார்த்திருக்கிறேன். உள்ளூர் ரவுடி, மதுரைக்கார பெரிய மனுஷன் என்றெல்லாம் கேள்வி கேட்டவர், வெளிப்படையாக ‘விசாரணை’ படத்தில் அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்டார். அக்கேள்வியின் தொடர்ச்சியாக மட்டுமே என்னால் ‘வட சென்னை’ படத்தை பார்க்க முடிகிறது. அதனால் ரசிக்க முடிகிறது.

சமூகம் புறக்கணிக்கும் விளிம்புநிலைக்காரன் எழுந்து நிற்கையில் எல்லா political correctness-களும் இருக்காது. சமயங்களில் அநாகரிகமாகக் கூட தெரியலாம். Political Correctness-ஐயும் நாகரிகத்தையும் அரசிடமே எதிர்பார்க்காத நாம், விளிம்புநிலை மனிதனிடம் மட்டும் அவற்றை எதிர்பார்ப்பது பச்சை அயோக்கியத்தனம்தானே!

RAJASANGEETHAN