“தமிழகம் மிகப்பெரிய அடையாளத்தை இழந்துள்ளது”: கருணாநிதி நினைவேந்தலில் ரஜினி பேச்சு!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், தமிழ் திரையுலகம் சார்பில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று (13.08.2018) மாலை நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசியதாவது:-

கலைஞர் இல்லாத தமிழகத்தை என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. கலைஞரை இழந்து, தமிழ்நாடு மிகப் பெரிய ஒரு அடையாளத்தை இழந்திருக்கிறது. தமிழகத்தில் ஒரு பெரிய விழா என்றால் தளபதியார் இனி யாரைக்  கூப்பிடுவார் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டிற்கு யார் வந்தாலும் பெரிய மனிதர் என்று யாரை சந்திக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

தனது 45-வது வயதில் கழகத்தின் தலைமையை ஏற்று 50 ஆண்டுகளாக எத்தனை சோதனைகள், எத்தனை சூழ்ச்சிகள், எத்தனை துரோகங்கள், எல்லாவற்றையும் தாண்டி கழகத்தை கட்டிக்காத்து உலகத்திலேயே 50  ஆண்டுகள் ஒரு கட்சிக்கு தலைமை தாங்கிய பெருமை தலைவர் கலைஞருக்கு மட்டுமே உண்டு.

கடந்த 50 ஆண்டுகளில் அரசியலில் தன்னந்தனியாக மேடையில் நின்று, அரசியல் களத்துக்கு யாராவது வந்தால்,  ‘முதலில் என்னுடன் நட்பு கொள் இல்லையெனில் என்னை எதிர்கொள் அப்போதுதான் தமிழகத்தில் அரசியல் செய்ய  முடியும்’  எனக் கூறி அரசியல் சதுரங்கத்தில் காயின்களைப் போட்டு புகுந்து விளையாடியவர் அவர்.

அவரால் தமிழக அரசியலுக்கு வந்தவர்கள் பல லட்சம் பேர். அவரால் முழுநேர அரசியல்வாதிகள் ஆனவர்கள் பல ஆயிரம் பேர்.  அவரால் பதவிக்கு வந்தவர்கள் பல நூறு பேர்.

யாரும் தவறாக நினைக்கக் கூடாது, அ.தி.மு.க.வின் ஆண்டு விழாவில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகைப்படம் வைக்கப்படுகிறது, பக்கத்திலேயே கலைஞர் புகைப்படமும் வைக்க வேண்டும். அ.தி.மு.க. உருவானதே கலைஞரால் தான். கட்சியில் இருந்து எம்.ஜி.ஆர். தூக்கப்பட்டார். அதற்குப் பின்னால் யார் யார் இருந்தார்கள், யார் யாருடைய சூழ்ச்சி இருந்தது என்பதை வரலாறு தெரிந்தவர்கள் நன்கு அறிவார்கள். அத்தனை வஞ்சகங்களையும் தாண்டி தன் உடன்பிறப்புகளுக்காக வாழ்ந்தார் அவர்

அவரது அரசியல் பயணத்தைப் பற்றி பேச இன்னும் நிறைய இருக்கிறது. நிறைய சந்தர்ப்பங்கள் எனக்கு கிடைக்கும். அதேபோல், அவர் இலக்கியத்திற்காக செய்த சாதனைகள் சாதரணம் இல்லை. இருட்டில் இருந்த சரித்திர நாயகர்கள் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர்கள், சிற்றரசர்கள், போன்ற வெளிச்சம் படாத வீரர்களையெல்லாம் தன் சொல்லாலும், எழுத்தாலும், பாமரர் முதல் பண்டிதர் வரை கொண்டுபோய் சேர்த்தவர் கலைஞர்.

சினிமாத் துறையிலும் கலைஞர் செய்த சாதனைகள் எண்ணற்றவை. இரண்டு பெரிய இமயங்களை உருவாக்கியது கலைஞர். நடிகராக இருந்த எம்ஜிஆரை ‘மலைக்கள்ளன்’  படத்தில் ஸ்டார் ஆக்கியது, அதேபோல், ஒரே ஒரு படத்தில் நடிகர் சிவாஜியை சூப்பர் ஸ்டார் ஆக்கியதும் கலைஞர் தான்.

கலைஞர் மறைந்தார் என்ற செய்தியைக் கேட்டு என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவரது  பேச்சுகள், அவருடன் இருந்த அனுபவங்கள் எல்லாம் எனக்கு ஞாபகம் வந்து கொண்டிருந்தது. உடனே நான் கோபாலபுரம் சென்றேன். ஆனால் அதிகளவு கூட்டம் இருந்ததால் என்னால் வீட்டிற்குள் செல்ல முடியவில்லை. திரும்பி வந்துவிட்டேன்.

மறுநாள் அதிகாலையிலே ராஜாஜி ஹால் சென்று கலைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினேன். அப்போது சில ஆயிரம் பேர் மட்டுமே அங்கு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். எங்கே அவரது உடன் பிறப்புகள்? அவர்களுக்காக எவ்வளவோ உழைத்திருக்கிறார். தமிழக மக்கள் மீது எனக்கு கோபம் வந்தது.

வீட்டிற்கு வந்தபிறகு டிவியை பார்த்தபோது, அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த கட்டுக்கடங்காத கூட்டத்தைப் பார்த்து நானே அதிர்ந்து போனேன்.  தமிழர்கள் நன்றி மிக்கவர்கள் என்பதை நினைத்து பூரிப்படைந்தேன். அலை அலையாய் மக்கள் கூட்டம், அதைப் பார்த்து தகுந்த தலைவனுக்கு தகுந்த மரியாதை, தமிழர்கள் தமிழர்கள் தான் என எனது  கண்களில் கண்ணீர் வந்தது.

கலைஞர் அதிகாரத்தில் இல்லாதபோதும், அவருக்கு அஞ்சலி செலுத்த இந்தியா முழுவதும் இருந்து தலைவர்கள் வந்தனர். முப்படை வீரர்களும் மரியாதை செலுத்தினார்கள். தமிழக கவர்னர், பல மாநில  முதல்வர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் மெரினாவுக்கு வந்து காத்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் ஒரு குறை.. தமிழகத்தின் முதல்வர் அங்கு இருந்து இறுதி அஞ்சலி செலுத்தவில்லை. தமிழக மந்திரி சபையே அங்கே இருக்க வேண்டாமா? இதைப் பார்த்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? நீங்கள் என்ன எம்ஜிஆரா? ஜெயலலிதாவா? அப்போ ஜாம்பவான்கள் மோதினார்கள். ஆனால் நீங்கள் அப்படி இல்ல.

மெரினாவில் கலைஞர் உடலை அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து  தமிழக அரசு மேல் முறையீடு செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் நானே போராட்டத்தில் குதித்திருப்பேன்.

ஸ்டாலின் குழந்தையைப் போல் கண்ணீர் வடித்ததைப் பார்த்ததும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கவலை வேண்டாம். அந்த மாமனிதரின் ஆத்மா உங்களுக்கு வழிகாட்டும். அவருடன் நிறைய நாட்கள் செலவழித்திருக்கிறேன், நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்பதில் மகிழ்ச்சி.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.