வந்தா ராஜாவா தான் வருவேன் – விமர்சனம்

பல லட்சம் கோடிகளுக்கு சொந்தக்காரர் நாசர். காதல் திருமணம் செய்து பிரிந்துபோன தன் மகள் ரம்யா கிருஷ்ணனை நினைத்து கடைசி காலத்தில் ஏங்குகிறார். தனது மகன் வழிப் பேரனான சிம்புவை அழைத்து, ‘‘அத்தையை இந்த வீட்டுக்கு திரும்ப அழைத்து வருவதே நீ எனக்குத் தரும் 80-வது பிறந்தநாள் பரிசாக இருக்கும்’’ என்கிறார். தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற ஸ்பெயினில் இருந்து இந்தியா வருகிறார் சிம்பு. ரம்யாகிருஷ்ணனின் கணவர் பிரபுவை ஓர் ஆபத்தில் இருந்து காப்பாற்றி, அவர்களது நன்மதிப்பை பெறுகிறார். அவர்கள் வீட்டிலேயே சிம்புவுக்கு டிரைவர் வேலையும் கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படியாவது அத்தையை அழைத்துச்சென்று தாத்தா முன்பு நிறுத்த திட்டமிடுகிறார்.

இதற்கு விடிவி கணேஷ் உள்ளிட்ட சகாக்கள் சிம்புவுக்கு உதவுகின்றனர். நண்பர்கள் கூறுவதுபோல, ரம்யாகிருஷ்ணனின் மகள்களான கேதரின் தெரசா, மேகா ஆகாஷ் ஆகிய இருவரில் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவும் விரும்புகிறார். இப்படி இரு பக்கமும் காய் நகர்த்தும் சிம்புவின் காதல் திட்டம் நிறைவேறியதா? ரம்யாகிருஷ்ணன் மனம் மாறினாரா என்பதற்கு விடை தருகிறது ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம்.

கலகலப்பு, காமெடி, காதல், சென்டிமென்ட் என ஒரு மசாலா படத்துக்கான குறைந்தபட்ச செயல்திட்டத்தோடு இறங்கியுள்ளது இயக்குநர் சுந்தர்.சி, சிம்பு கூட்டணி. இதற்காக, தெலுங்கில் வந்த ‘அத்தரின்டிக்கு தாரேதி’ திரைப்படத்தை கையில் எடுத்து மறு உருவாக்கம் செய்துள்ளனர். இந்த கூட்டணி மீதான எதிர்பார்ப்புக்கு ஏற்ப, காமெடி, சண்டை, சென்டிமென்ட் என்று கலந்தே நகர்கிறது திரைக்கதை. ஆனால், போகப்போக சிம்புவின் நடிப்பு துணைபுரிந்த அளவுக்கு சுந்தர்.சி.யின் பங்களிப்பு இல்லாதது ஏமாற்றமே.

சென்டிமென்ட் காட்சிகளில் பெரிய அளவில் நிற்கிறார் சிம்பு. குறிப்பாக, ரம்யாகிருஷ்ணனுடனான காட்சிகள். உடல் எடை சற்று கூடியிருந்தாலும், நடனம், ஆக்சன் உள்ளிட்ட காட்சிகளில் விறுவிறுப்பு கொஞ்சமும் குறையவில்லை. ‘ரொம்ப நாள் கழிச்சி பஞ்ச் எல்லாம் பேசி எனக்கே என்னமோ பண்ணுதுப்பா’ என்று தோளை சிலுப்பியபடி ரசிகர்களை சிலிர்க்க வைக்கிறார். ‘ஷூட்டிங்னா டைமுக்கு போகணுமே’, ‘நான் வெரைட்டி வெரைட்டியா லவ் பண்ணவன்’, ‘ஒண்ணு பிரச்சினை இருக்குற இடத்துல நீ இருக்க; இல்ல நீ இருக்குற இடத்துல பிரச்சினை இருக்கு’, ‘பொண்ணே இல்ல யாரோட என்னை சேர்த்து வைப்பீங்க’ – என்று சிம்புவை வைத்து நகரும் காமெடி, கலாய்ப்புகள் ரசிக்க வைக்கின்றன. இந்த இடங்களில் வசனகர்த்தா செல்வபாரதியும் ஸ்கோர் செய்கிறார்.

முகத்தில் தெரியும் இளமையும், கண்ணில் தெரியும் கம்பீரமும் மிஸ்ஸிங் என்றாலும், ‘வைராக்கியமான அத்தை’ கதாபாத்திரத்துக்கு சரியாக பொருந்துகிறார் ரம்யாகிருஷ்ணன். பிரபு டெம்ப்ளேட்டாய் நடித்துவிட்டு போகிறார். நாசர், சுமன், ராதாரவி, பிரபு, மொட்ட ராஜேந்திரன், ராஜ்கபூர் உள்ளிட்டோர் வருவதும், போவதுமாக இருக்கின்றனர்.

சுந்தர்.சி.க்கே உரித்தான நையாண்டிகள் அவ்வளவாக இல்லை. நாயகனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நிர்பந்தத்தில் காமெடியை கைவிட்டது தெரிகிறது. படத்தின் முக்கிய அம்சமான அத்தை – மருமகன் பாசப்பிணைப்பு வலுவாக காட்டப்படவில்லை. சிம்பு – ரோபோ சங்கர் சந்திக்கும் இடங்களில் காமெடித்தனம் ரசிக்க வைக்கின்றன. கூடவே வரும் விடிவி கணேஷும் ஆங்காங்கே கைகொடுக்கிறார். ஆனால், அடுத்தடுத்து வரும் யோகிபாபுவின் காமெடி சலிப்பை ஏற்படுத்துகிறது. வெளிநாட்டில் வாழும் பணக்கார வீட்டுப் பையன் என்கிற முறையில் சிம்பு செய்யும் செயல்கள் ஈர்ப்பதற்கு பதில் வெறுப்பை உண்டாக்குகின்றன. கேதரின் தெரசா – மகத் காதல் திருப்பமும் அநாவசியம்.

படத்தின் மசாலாவுக்கு தேவையானதை தந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா. கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் வெளிநாட்டு இடங்களும், மேகா ஆகாஷ், ரோபோ சங்கர், சிம்பு மூவரும் சுற்றும் கார் பின்னணியிலான சண்டை, பாடல் காட்சிகளும் கலகலப்பாக இருக்கின்றன. அவரது இசையில் ‘பறவைகள்’ பாடல் ரசனை. மற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

தலைப்பில் தந்த வாக்குறுதியை சிம்பு அடுத்த படத்தில் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கலாம்.