தமிழ் ‘அருவி’, அரேபிய ‘ஆஸ்மா’ – இரண்டு படங்களும் ஒன்றல்ல!

“பாஸ், ‘அருவி’ ‘Asmaa’ என்ற அரேபிய படத்துலேருந்து உருவுனதாமே?”

“நீ ஆஸ்மா பாத்தே?”

“நான் ‘அருவி’யே பாக்கலே பாஸ்!”

#spoiler alert for Asmaa movie!

‘ஆஸ்மா’ என்ற எகிப்திய படம் தாய்மையின் உச்சம்! “நாப்பது குழந்தை பெத்துக்கனும்டி உன்கூட” என்கிறான் புதிதாய் கல்யாணம் ஆன ஆசைக் கணவன். “சொல்லிட்டே இருந்தா எப்புடி? நான் மட்டுமே முடியுமா? நீயும் கொஞ்சம் ட்ரை பண்ணாத் தானே?” என சீண்டுகிறாள் அழகிய ஆஸ்மா! அந்தக் கணவன் ஜெயிலுக்கு போய் வந்ததிலிருந்து ஆஸ்மாவை தொட மறுக்கிறான். விவாகரத்து கேட்கிறான். அவனுக்கு எய்ட்ஸ் வந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்கிறாள் ஆஸ்மா. “நீ என்னை தொடவே வேண்டாம்,  தங்கையாய் கூட நினைத்து என் கூடவே இருந்துவிடு. உன்னை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்கிறாள் ஆஸ்மா. ஆனால் எதுவும் சரியாகவிலலை. தன் கணவனின் ஆசைப்படி அவனுக்கு ஒரு குழந்தையை பெற்றுக்கொடுக்க விரும்புகிறாள். கணவனின் எய்ட்ஸ், குழந்தைக்கும் வருமா என கேட்டதற்கு,”’நீ கவனமாய் இருந்தால் வராமல் இருப்பதற்கு வாய்ப்பிருக்கு” என்கிறார் ஒரு மருத்துவர். அழுதபடியே வீட்டுக்கு வருகிறாள். பதறிக்கேட்ட கணவனிடம் தனக்கும் எய்ட்ஸ் இருக்கு என பொய் சொல்கிறாள். “ஆனா, நாம் குழந்தை பெத்துக்கிட்டா, கவனமா இருந்தா குழந்தைக்கு எய்ட்ஸ் வராம இருக்க வாய்ப்பிருக்கிறதாம்” என அவனை நம்பவைத்து குழந்தை பெற்றெடுக்கிறாள். குழந்தைக்கு எயிட்ஸ் இலலை. ஆனால் ஆஸ்மாவுக்கு எய்ட்ஸ் வருகிறது. இது முன்கதை.

நடப்பில், குழந்தை வளர்ந்து பதின்பருவத்தில் பள்ளியில் படித்துக்கொன்டிருக்கிறாள். எய்ட்ஸுடனான போராட்டத்தை மருந்து – மாத்திரைகளுடன் தொடர்ந்துகொன்டே வாழ்ந்து வருகிறாள் ஆஸ்மா. ஆனால் அவளுக்கு வயிறறில் வேறு ஒரு பிரச்சனை வந்து ஆபரேசன் செய்ய வேண்டிய சூழ்நிலை. ஆபரேசன் செய்யாவிட்டால் தான் செத்துவிடுவோம் என்பது ஆஸ்மாவுக்கு தெரிகிறது. தன் மகளின் வாழ்க்கை செட்டில் ஆகும் வரை தான் உயிரோடு இருப்பது அவசியம் என எல்லா வேலைகளையும் செய்து காசு சேர்க்கிறாள் ஆஸ்மா. எளிதாய் செய்துவிடக்கூடிய ஆபரேசன்தான். ஆனால் எயிட்ஸ் பேசன்டுக்கு நான் எப்படி ஆபரேசன் செய்வேன் என மறுத்துவிடுகிறார் மருத்துவர். இவ்வளவுக்கும் அப்படி மறுக்கக்கூடாது என சட்டமே இருக்கிறது. ஆனால் நம்மூரைப்போலத்தான் எகிப்தும். சட்டம் வேறு, நடைமுறை வேறு.

அதையெதிர்த்து அவளை ஒரு டிவி நிகழ்ச்சி மூலமாய் போராட கூப்பிடுகிறார்கள். அப்படி டிவி நிகழ்சியில் தோன்றி தன் முகத்தை காட்டி தனக்கு எயிட்ஸ் இருக்கிறது என கூறினால் தன் மகள், தன் குடும்பம், சமூகம் அத்தனையும் தன்னை கேவலமாய் பார்த்து அழித்துவிடும் என்ற பெரும் சிக்கல். அதை ஆஸ்மா எப்படி எதிர்கொள்கிறாள் என்பதை மிக உணர்வுப்பூர்வமாய் காட்டியிருப்பார்கள்!

அருவி என்பது, தான் எந்தத் தப்பும் செய்யாது, ஒரு சிறு விபத்தில் தன் வாழ்க்கையையே இழந்த ஒரு மகளின் பாசமும், ஏக்கமும், கோபமும்! அதை கட்டற்ற அருவியாய் கலகலப்பாய் கொட்ட வைத்திருக்கிறார் இயக்குநர் அருண் பிரபு!

ஆஸ்மா தாய். அருவி மகள். ரெண்டுமே ஒண்ணுதான் என்பவர்கள் அம்மாவுக்கும் மகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்!

MOHAMED JAILANI

Film Director