புலி முருகன் – விமர்சனம்

`புலி முருகன்` – கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான படம்; இதுவரை வெளியான மலையாளப் படங்களிலேயே மிகப் பெரிய வசூலை வாரிக் குவித்த வெற்றிப் படம்; தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள படம்.

காட்டோர கிராமமான புலியூரில் வசிப்பவன் முருகன். அவன் சிறுவனாக இருக்கும்போது, அவனது தாய் பிரசவத்தின்போது இறந்துவிடுகிறாள். அவனது தந்தையை புலி கொன்றுவிடுகிறது. அதனால், தந்தையைக் கொன்ற புலியை வேட்டையாடி ‘புலி முருகன்’ ஆகிறான்.

வளர்ந்து இளைஞனான பிறகு லாரி டிரைவராக வாழ்க்கை நடத்துகிறான். அதன்பிறகும் அவ்வப்போது புலி வேட்டையாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறான்.

படித்துவிட்டு வீடு திரும்பும் புலிமுருகனின் தம்பி மணிக்குட்டன், தன் நண்பனின் மருந்து கம்பெனி மருந்து தயாரிப்பதற்காக காட்டிலிருந்து கஞ்சாவை ரகசியமாக கடத்திக் கொண்டுபோய் அந்த கம்பெனியில் சேர்க்க வேண்டும் என்றும், அப்படிச் செய்தால் தனக்கு நல்ல வேலை கிடைக்கும் என்றும் கூறுகிறான்.

இந்நிலையில், புலி முருகன் வேட்டையாடிய ஒரு புலி குறித்து விசாரிக்க புலியூருக்கு வருகிறான் ஆர்.கே. என்ற வனப் பாதுகாவலன். அவனிடம் சிக்காமல் தப்ப நினைக்கும் புலி முருகன், கஞ்சாவை லாரியில் ஏற்றிச்செல்ல சம்மதிக்கிறான்

இதன்பின்னர் மருந்துக் கம்பனியை நடத்தும் டாடி கிரிஜாவின் அறிமுகம் ஏற்பட்டு, அவனுடனேயே தங்குகிறான் புலி முருகன். அப்போதுதான் டாடி கிரிஜா சட்டவிரோதமாக போதை மருந்து தயாரிப்பது தெரியவருகிறது. அந்த சிக்கலில் இருந்து தம்பியை காப்பாற்றுவதோடு, புலியூரை வேட்டையாடிவரும் புலியிடமிருந்தும் காப்பாற்றுகிறான் புலிமுருகன். சுபம்.

புலி முருகனாக வரும் மோகன்லால் தான் படத்தின் மிகப் பெரிய பலம். 50 வயதிலும் துடிப்புடன் நடித்து அசத்தியிருக்கிறார். புலி வேட்டையின்போது ஆக்ரோஷம், மனைவி கமாலினி முகர்ஜியுடன் ரொமான்ஸ், தம்பிக்கு வேலை கிடைத்த சந்தோஷத்தில் கண்கலங்கும்போது செண்டிமெண்ட் என அனைத்திலும் தனக்கே உரித்தான நடிப்பில் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

சிறுவயது மோகன்லாலாக வரும் சிறுவன் பார்வையிலேயே மிரட்டுகிறான். மோகன்லாலின் மாமாவாக வரும் லால் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மோகன்லாலின் தம்பியாக வரும் பாலா, அண்ணன்-தம்பி செண்டிமெண்டில் ரசிக்க வைத்திருக்கிறார்.

மோகன்லாலின் மனைவியாக வரும் கமாலினி முகர்ஜி, கணவனுடன் போடும் செல்லச் சண்டைகள், கொஞ்சல்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. ஜெகபதிபாபு அமைதியான வில்லனாக வந்து மிரட்டியிருக்கிறார். சிறிய கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு போயிருக்கும் நமீதா, மோகன்லாலை பார்க்கும் பார்வையிலேயே கிறங்க வைக்கிறார்.

எல்லா கதாபாத்திரங்களுக்கும் மிகச் சரியான சிறந்த நடிகர்களை தேர்வு செய்ததிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார் இயக்குனர் வைஷாக். இது ஒரு கமர்ஷியல் படம் என்று அவர் முன்கூட்டியே தீர்க்கமாக முடிவு செய்துவிட்டதால், லாஜிக் எல்லாம் பார்க்காமல், தன் விருப்பம் போல் ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்.

ஷாஜிகுமாரின் கேமரா, வியட்னாம் காடுகளை மிகச் சிறப்பாக படமாக்கி இருக்கிறது. அதுபோல், புலி வரும் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் க்ராஃபிக்ஸும் உறுத்தாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. தவிர, சண்டைக் காட்சிகளை ரொம்ப தத்ரூபமாக அமைத்திருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் கெய்ன்.

‘புலி முருகன்’ – ஜாலி முருகன்!