“எங்களுக்கு கடவுளை காட்டியதே பெரியார் தான்!”

காலை ஒரு பொதுநிகழ்ச்சியில் பிஜேபி மாநில நிர்வாகிகளில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தி அண்ணனுடன் பேசிக்கொண்டு இருக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. “ஏன்டா! எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்?” என்றார்.

“சொல்லுங்கண்ணே” என்றேன்.

“இன்னைக்கு நிலமைக்கு திமுகவுல இருக்குறவங்கள்ல 99% பேர் தீவிரமா கடவுள் நம்பிக்கை உள்ளவங்க. உங்க தலைவர் கலைஞரை நாங்க எதுனா திட்டுனாக்கூட கண்டுக்காம போற உங்க ஆளுங்க, பெரியார் பத்தி நாங்க எதுனா சொன்னா விழுந்து பிராண்டுறானுங்களே… இது என்னடா லாஜிக்?” என்று சீரியஸாகக் கேட்டார்.

”அண்ணே! தமிழ்நாட்டில் பக்தியை பெரிய அளவில் வளர்த்தது ஆழ்வார்களும், நாயன்மார்களும் அல்ல.. தந்தை பெரியார்தான்! காரணம், பெரும்பான்மையான மக்கள் கோவிலுக்கு வெளியில் நின்றுகொண்டு, உள்ளே என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருந்த காலத்தில், இவர்தான் போராடி உள்ளே நுழையும் உரிமையை வாங்கிக் குடுத்து அனைவரையும் உள்ளே அனுப்பி வைத்தார். என்ன தான் பெரியார் சுத்த நாத்திகரா இருந்தாலும், தனக்கு ‘கடவுளை காட்டுன ஒரு மனுசனை’ கமெண்ட் அடிச்சா யாருக்கும் கோவம் வரத் தானே செய்யும்?” என்றேன்.

”டேய்.. இந்த திமுக.காரனுங்களுக்கு மட்டும் வாய்னு ஒண்ணு இல்லாட்டி…” என்று சிரித்தபடி சொல்லி என் தோளில் ஓங்ங்ங்ங்கி ஒரு தட்டு தட்டிவிட்டு கிளம்பினார்.

(படித்ததில் பிடித்தது)

(மீள் பதிவு)