போங்கு – விமர்சனம்

‘சதுரங்க வேட்டை’ வெற்றிப்படத்தில் அசத்தலான ‘ஃபோர் ட்வெண்டி’ நாயகனாக நடித்து பாராட்டைப் பெற்ற நட்டி (நட்ராஜ்), கார் திருடும் நாயகனாக நடித்துள்ள படம் ‘போங்கு’.

நாயகன் நட்டி, நாயகி ரூஹி சிங், காமெடியன் அர்ஜுன் ஆகிய மூவரும் வேலை பார்க்கும் கார் கம்பெனியில், விலையுயர்ந்த ஆடம்பர கார் ஒன்றை வாங்குவதற்காக புக் பண்ணுகிறார் எம்.எல்.ஏ. ஒருவர். அந்த காரை டெலிவரி செய்ய நட்டியும், அர்ஜுனும் போகும்போது, வழியில் மர்ம ஆசாமிகள் வழி மறித்து காரை கடத்திச் சென்றுவிடுகிறார்கள்.

நட்டியும் அர்ஜூனும் சேர்ந்து தான் காரை கடத்தி இருக்கிறார்கள் என்று அவர்களை கைது செய்கிறது போலீஸ். அவர்களோடு ரூஹி சிங்கையும் சேர்த்து பணி நீக்கம் செய்துவிடுகிறது கார் கம்பெனி.

சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வரும் நட்டி, நண்பர்களோடு சேர்ந்து கார் திருடுவதையே தொழிலாகச் செய்ய ஆரம்பிக்கிறார். இதில் நல்ல வருமானம் கிடைக்கிறது அவருக்கு.

இந்நிலையில், மதுரை தாதா சரத் லோகித்ஸ்வா வசம் இருக்கும் 10 ஆடம்பர கார்களை கடத்துவதற்காக, தனது குழுவினருடன் மதுரை செல்லும் நட்டி, தன்னிடமிருந்து மர்ம ஆசாமிகள் கடத்தி சென்ற காரும் அங்கு இருப்பதை அறிகிறார். சரத் லோகித்ஸ்வா அந்த காரை ஏன் கடத்தினார்? நட்டி அதை மீட்டாரா? என்பது மீதிக்கதை.

‘சதுரங்க வேட்டை’ படத்திற்குப் பிறகு நாயகன் நட்டி மீண்டும் ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். அவருக்கு ஏற்ற கதைக்களம். அது சிறப்பாக அமைந்ததால், அதற்கேற்றவாறு அவரது நடிப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது.

நாயகி ரூஹி சிங்கிற்கு கனமான கதாபாத்திரம் அமையவில்லை என்றாலும், காட்சிக்கு பக்கபலமாக தேவையான இடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அர்ஜுன் காமெடியிலும், நடிப்பிலும் ரசிக்க வைத்திருக்கிறார். முனிஸ்காந்த் அவருக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார்.

சரத் லோகித்ஸ்வா ஒரு மிரட்டல் வில்லனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நட்டிக்கு எதிரான அவரது பேச்சும், நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. அதுல் குல்கர்னி குறைவான காட்சிகளிலே வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இயக்குநர் தாஜ் ஒரு வித்தியாசமான கதையை சிறப்பாக இயக்கியிருக்கிறார். திரைக்கதையும், வசனமும் படத்திற்கு கூடுதல் பலம்.

மகேஷ் முத்துச்சாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக இருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது.

‘போங்கு’ – பார்க்கலாம்!