மோடி, அமித்ஷாவை விட தினகரன், கனிமொழி மோசமான அரசியல்வாதிகளா?

அமித் ஷாவைப் போல தினகரன் ஆள்கடத்தல், கொலை வழக்குகளில் சூத்திரதாரி அல்ல. மோடியை போல லாலு பிரசாத் இனப்படுகொலை செய்தவர் அல்ல. அத்வானி போல ஆ.ராசா நாடு முழுவதும் மதக்கலவரம் தூண்டியவர் கிடையாது,  உமாபாரதி அல்ல கனிமொழி.

ஆனாலும் இவர்கள் தான் இந்தியா முழுவதும் மோசமான அரசியல்வாதிகளாக சித்தரிக்கப்படுபவர்கள். அது எப்படி வயிற்றை கீறி உள்ளே இருக்கும் சிசுவை உருவும் கொடூர கலவரங்களுக்கு காரணகர்த்தாவான அரசியல்வாதிகளை விட நிர்வாகத்தில் தவறிழைக்கும் அரசியல்வாதிகளை குற்றவாளிகளாக பார்க்க பழக்கப்படுகிறோம்?

இந்தியாவில் பாசிசம் குறித்தும் அது வளர்வதற்கு பார்ப்பனியத்தில்  இருக்கும் சாத்தியக்கூறுகள் குறித்தும் முதன் முதலாக கோட்பாட்டு ரீதியாக எழுதியவர் எம்.என்.ராய்.

முதலாளித்துவ அரசுகளில் நிகழும் நிர்வாக தவறுகள் இல்லையென்றால் இத்தாலியில் பாசிசம் தானாக அழிந்து போயிருக்கும் என்கிறார்கள். ஊழல் நிர்வாக தவறுகளுக்கு எதிராக அதிமனித பிம்பங்களை கட்டமைத்தே பாசிசம் வளர்வதாக சொல்கிறார்கள்..

இத்தாலியில் முசோலினியால் அப்படி கட்டமைக்கப்பட்ட பாசிசம் சில ஆண்டுகளிலேயே நிர்வாகத்தில் தோல்வியடைந்ததை ஒப்புக் கொண்டது தான் வரலாறு. அதுதான் மோடியின் DEMONETIZATIONக்கும் இப்போது நடக்கிறது..

பின் எந்த வகையில் இந்த கொலைகாரர்கள் நிர்வாக திறமை மிக்கவர்கள்?..

சமூகத்தில் உயர்வு தாழ்வு இருக்க வேண்டும், “மேன்மை” யானவர்களுக்காக மந்தமானவர்கள் கஷ்டப்படுவது  நியாயமானது என்றார் ஜெர்மனியில் நீட்ச்சே. சாதி வர்ண பாகுபாடுகள் நியாயமானது,  பிராமணர்களுக்கு பணிவிடை செய்வதுதான் சூத்திரர்களின் விதிப்பயன் என்கிறது பார்ப்பனீயம்..

நீட்சேவை நாஜிக்களின் தத்துவ குருவாக  பார்ப்பித்தார் ஹிட்லர்.  மனு ஸ்மிருதியிடம் இருந்து தத்துவ வலிமை பெறும் ஆர்.எஸ்.எஸ் தான் மோடியின் குரு..

அதனால்தான் உலகில் மனு ஸ்மிருதியை போல ஒரு சிறந்த நூலை பார்த்ததில்லை என்றார் ஹிட்லரின் குரு நீட்சே.

பார்ப்பனீயம் பாசிச வடிவமெடுப்பதும் இந்த அடிப்படையில்தான், இந்தியா முழுவதும் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை ஊதிப் பெருக்குவதின் பின்னால் தான் பார்ப்பனிய பாசிசம் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறது..

சரி, இந்த கொலைகாரர்கள் அப்படியென்ன நிர்வாகத்தில் சிறந்தவர்களா என்றால், கடந்த 30 ஆண்டுகளாக பாஜக அரசியல் செல்வாக்கு செலுத்தும் பிஹார், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் தான் இந்தியாவின் நோய்வாய்ப்பட்ட மாநிலங்களாக (BIMARU ) அறியப்படுகிறது,  எனில் இவர்கள் எப்படி நிர்வாகத்தில் சிறந்தவர்கள்?..

இந்தியாவின் மிக மோசமான அரசியல்வாதியாக  சித்தரிக்கப்படும் லாலு பிரசாத் தான்  இந்தியாவில் ரயில்வேயை முதன்முதலாக லாபத்தில் நடத்தியவர் எனில் அவர் மோசமான அரசியல்வாதியானதற்கு ரதயாத்திரை சென்ற அத்வானியை சிறையிலடைத்ததைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?

BSNL 2ஜி ஏலத்தில் பங்கெடுத்தும் அரசிற்கு ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி இழப்பு என்று இந்தியா முழுதும் எப்படி குதித்தார்கள். 4ஜி ஏலத்தில் மத்தியஅரசு பங்கெடுக்கவே இல்லையே, யாராவது குதித்தார்களா?..

பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் நடந்த வியாபம் ஊழலைப் போல இந்திய வரலாற்றில் தொடர் கொலைகளை உடைய ஒரு கிரைம் ஊழல் நடந்திருக்கிறதா?..

சஹாராவின் சுப்ரதா ராய் உள்ளே கிடப்பதற்கும் மோடிக்கு லஞ்சம் கொடுத்ததாக உளறிக் கொட்டியதற்கும் சம்பந்தம் இல்லையா என்ன? சரி மோடி நிர்வாகத்தில் குராஜாத்தின் கதி என்ன?, 30 சதவீத கிராமங்கள் இன்னும் இருளில் மூழ்கித்தானே கிடக்கின்றன,

மோடியின் DEMONETIZATION நடவடிககைக்கு  முதல் நாள் அமித்சா தலைவராக இருக்கும் குஜராத்தின் கூட்டுறவு வங்கிகளுக்கு 500 கோடிகளுக்கு மேல் கைமாறிய குற்றச்சாட்டு எத்தனை பேருக்கு தெரியப்படுத்தினார்கள்.

இவர்கள் எந்த காலத்திலும் நேர்மையிலும் நிர்வாகத்திலும் சிறந்தவர்கள் அல்ல, அவர்கள் ஆண்ட மாநிலங்களும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடைய இன்னும் பல வருடங்கள் பிடிக்கும்..

பிறகெப்படி இவர்கள் நேர்மையான நிர்வாகத்திற்கு உரிமை கோருகிறார்கள்? 30 ஆண்டுகளாக திட்டமிட்டு நடந்த போலியான வலிமையான பொய்யான பிரச்சாரத்தின் மூலமே  இந்த கருத்தை வளர்த்தெடுத்து இருக்கிறார்கள்..

இந்தியா முழுவதும் நிர்வாகத்திலும், நீதிமன்றங்களிலும், ஊடகங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பனிய கூட்டமைப்பு இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது..

ஓயாமல் கதியிருக்கிறார்கள், தொய்வில்லாமல் தொடர்ச்சியாக பார்ப்பனரல்லாத அரசியல்வாதிகள் மீது. அவர்களால் ஆசிர்வதிக்கப்படாத எல்லோர் மீதும் தொடர்ந்து இந்த கருத்துக்களை கட்டமைத்து வந்திருக்கிறார்கள்.

நாமும் கூட சங்கர் படங்களை ஹிட்டாக்கி ஒருவகையில் இதற்கு உதவி இருக்கிறோம்..

பாதி எரிந்த ஆயிரக்கணக்கான பிணங்கள் கங்கையில் மிதக்க உதவிட்டு கங்கையை சுத்தப்படுத்த பல கோடி ஒதுக்கும் அரசை நோக்கி கேள்வி எழுப்பாமல் தெர்மோகோலை நோக்கித்தான் கத்திக் கொண்டிருக்கிறோம்.

நம் இந்த மடத்தனம்தான் இப்போது எந்த கூச்சமே இல்லாமல் அவர்களை பாசிசத்தை நோக்கி தைரியமாக நகர வைக்கிறது.

ஊழல் என்பது இந்தியாவின் சிஸ்டமேடிக்கான பிரச்சினை, அதிலிருந்து எந்த அரசியல்வாதியும் தப்ப முடியாது, அனால் பாசிசம் அப்படியல்ல..

ஊழலை எதிர்க்க வேண்டுமென்றால் குறைந்த பட்சம் ஜனநாயகம் உயிரோடு இருக்க வேண்டும், பாசிசத்தில் அதற்கும் வாய்ப்பில்லை, பாஜகவும் மோடியும் அதைத் தான் செய்து வருகிறார்கள்.. பார்ப்பனியத்தின் இறுதி இலக்கும் அதுதான்..

கமல்ஹாசன் காட்டும் தெர்மோகோலிடம் ஏமாறாமல் காவிகளின் கமலக்குண்டலத்தை நொறுக்காவிட்டால் உயிர்பிழைக்க முடியாது.

ANBE SELVA