காயத்ரியின் “சேரி பிகேவியர்” பேச்சையும், அதை ஒளிபரப்பிய விஜய் டிவி.யையும் விளாசிய கமல்!

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம், சில தினங்களுக்கு முன், ‘பிக்பாஸ்’ வீட்டில் தன்னுடன் தங்கியிருந்த நடிகை ஓவியாவைப் பார்த்து “சேரி பிகேவியர்” என தரம் தாழ்ந்து வசை பாடினார்.

அந்த வசைச் சொல்லின் வீரியம் தெரியாமலோ, அல்லது தெரிந்தும் “சர்ச்சை வரட்டும்” என்ற எண்ணத்திலோ, அதை நீக்காமல் அப்படியே ஒளிபரப்பியது விஜய் டிவி.

அப்போதே விடுதலை சிறுத்தைகள் கடசித் தலைவர் திருமாவளவன் உட்பட பல அரசியல் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன், காயத்ரியின் “சேரி பிகேவியர்” பேச்சையும், அதை ஒளிபரப்பிய விஜய் டிவியையும் கண்டிக்கவில்லை என்ற சர்ச்சையும் சமூக வலைத்தளங்களில் எழுந்தது.

இதை மனதில் வைத்திருந்த கமல், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது, காயத்ரியையும், விஜய் டிவியையும் செமத்தையாக ஒரு பிடி பிடித்தார். காயத்ரியை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து உரையாடுகையில் கமல் கூறியதாவது:

நீங்க (காயத்ரி) பேசுகிற வார்த்தைகளை அளந்து பேசணும். உங்களுக்கு மட்டும் அல்ல, விஜய் டிவிக்கே இதைச் சொல்வேன். பிக்பாஸ் என்கிற ஷோ, பம்பாயில் பெரிய வெற்றியாக 10-வது சீசனோ, 11-வது சீசனோ போய்க்கிட்டிருக்கு. அந்த வெற்றியுடைய அனுபவத்தில், தைரியத்தில், விந்தியமலையைத் தாண்டி இங்கே வரும்பொழுது, அவங்க அணுக வேண்டிய முறை வேறு முறை.

அதாவது, அது வேற இந்தியா, இது வேற இந்தியான்னு சொல்லல. இந்த இந்தியாவுக்கு சுயமரியாதை ஜாஸ்தி. அப்படிப்பட்ட இந்த இந்தியாவுல என்ன ஒளிபரப்புகிறோம் என்பதைக்கூட அவங்க ஜாக்கிரதையாக செய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள். அது மக்களின் கட்டளையாக மாறுவதற்குமுன் அதை திருத்திக் கொள்ளுங்கள் என்பதைச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

அதற்காக, தேவை இல்லாததுக்கெல்லாம் கோவிச்சுக்கக் கூடாது. ஹியூமரே இல்லாமல் இருக்கக் கூடாது. நகைச்சுவை அதிகம் உள்ள நாடு தமிழ்நாடு. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நகைச்சுவை உணர்வு, வெகுசில இந்திய மொழிகளிலே தான் இருக்கிறது. அதேநேரத்துல, நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவன் என்பதற்காக இளிச்சவாயன் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ளக் கூடாது.

இதை நான் சொல்லிக்கொள்வது உங்களுக்கு (காயத்ரிக்கு) அல்ல, பயப்படாதீங்க. ஏன்னா, நான் சொன்ன மாதிரி, இது என்ன நாடுன்னு தெரிஞ்சுக்கணும். வேறு எங்கும் வேறு விதமாக பேசி விடலாம். ஆனால் இங்கே அது முடியாது. ஏன்னா, பல விஷயங்களுக்கு எதிராக குரல் கொடுத்த முதல் இடம் இந்த முனை – இந்தியாவின் இந்த முனை என்பதைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

யாரோ கேஸ் போட்ருவாங்களோ என்ற பயத்துல சொல்றேன்னு நினைக்க வேண்டாம். அதை நான் பாத்துக்குவேன். என் வக்கீல்கள் பாத்துக்குவாங்க. இது வேற விஷயம். இது சுயமரியாதை சம்பந்தப்பட்ட விஷ்யம். தமிழனின் பெருமை சம்பந்தப்பட்ட விஷயம். அதுக்கு இடையூறாக எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காக – நான் அறிவுரை கூட சொல்லவில்லை – மக்களிடமிருந்து பெறும் கருத்தை இங்கே இந்த தொலைக்காட்சியினருக்கு வைக்கிறேன். உங்களுக்கும் (காயத்ரிக்கும்)!

இவ்வாறு கமல் கூறினார்.

ஆனால், “சீராக”, “உரையாடல்” போன்ற சாதாரண தமிழ்ச் சொற்களுக்குக் கூட அர்த்தம் தெரியாத காயத்ரிக்கு, கமலின் இந்த ஆவேசப் பேச்சு எவ்வளவு புரிந்திருக்கும் என்பது காயத்ரி பயின்ற சமஸ்கிருத மொழிக்கே வெளிச்சம்…!

அமரகீதன்