தேர்தல் சின்னங்கள்: சசிகலா அணிக்கு தொப்பி, ஓ.பி.எஸ் அணிக்கு மின்கம்பம்!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னம் யாருக்கும் இல்லை என முடக்கப்பட்டதை அடுத்து, சசிகலா அணிக்கு தொப்பி சின்னத்தையும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

சசிகலா அணி ஆட்டோ ரிக்‌ஷா, பேட், தொப்பி ஆகிய மூன்று சின்னங்களைத் தேர்வு செய்து, அவற்றில் ஒன்றை வழங்குமாறு கோரியது. அதனால் ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் சசிகலா அணிக்கு முதலில் ஒதுக்கப்பட்டது, ஆனால் சசிகலா தரப்பினர் ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்துக்கு பதிலாக தொப்பி சின்னம் வேண்டும் என்று கோரியதையடுத்து அவர்களது அணிக்கு தேர்தல் ஆணையம் தொப்பி சின்னத்தை ஒதுக்கியது. மேலும், ‘அதிமுக அம்மா’ என்ற கட்சிப்பெயர் தங்களுக்கு வேண்டும் என  சசிகலா தரப்பினர் கோரியதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். இதனை ஏற்றுக்கொண்ட ஓ.பி.எஸ். அணி, தங்களுக்கு அம்மா அ.தி.மு.க. என்ற கட்சிப் பெயர் வேண்டும் என கோரியது. ஆனால் இதனை ஏற்காத தேர்தல் ஆணையம், வேறு பெயரை கேட்டது. இறுதியில், ‘அதிமுக புரட்சித் தலைவி அம்மா’ என்ற கட்சிப் பெயர் ஓ.பி.எஸ் அணிக்கு சூட்டப்பட்டிருக்கிறது.

 ஆகவே, ஆர்.கே.நகர் தேர்தலில் சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன் தொப்பி சின்னத்திலும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள்.