பாஜகவில் சேர மோடியுடன் பேச்சுவார்த்தையா?: நடிகை கௌதமி விளக்கம்!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் பிரபல நடிகை கௌதமி வெள்ளிக்கிழமை காலையில் சந்தித்துப் பேசினார். இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கௌதமி வெளியிட்டார். அதில், “பிரதமரை சந்தித்தது ‘த்ரில்’ ஆக இருந்தது. நட்சத்திரங்களைத் தொடும் உயரத்துக்கு இந்தியா செல்லும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவை பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி படுபாதாளத்துக்கு  இழுத்துச் சென்றுகொண்டிருக்கும் இந்துத்துவ கொடுங்கோன்மை அரசியல்வாதியான மோடியை சந்தித்த பிறகு, மோடி ஏதோ இந்தியாவை ராக்கெட்டில் ஏற்றி அண்டை நட்சத்திர மண்டலத்துக்கு கொண்டுபோய் விடுவார் என்பது போல் கௌதமி கருத்து தெரிவித்தது அனைவரையும் புருவம் உயர்த்தச் செய்தது.

இந்நிலையில், பாஜகவில் சேருவது தொடர்பாக மோடியுடன் கௌதமி பேசியதாக சில சமூக ஊடக இணையதளங்களில் செய்திகள் வெளியாயின.

இதனை மறுத்து விளக்கம் அளித்துள்ள கௌதமி, “லைஃப் அகெய்ன்’ எனும் புற்றுநோய் மறுவாழ்வு அமைப்பை தொடங்க உள்ளேன். இது குறித்து பேசவும், வாழ்த்து பெறவும் பிரதமரை சந்தித்தேன். அரசியல் ரீதியில் எதுவும் பேசவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பாஜகவில் உறுப்பினராக இருந்தேன். அதன்பிறகு நான் என்னை அக்கட்சியில் இருந்து விடுவித்துக் கொண்டேன். வேறு எந்த கட்சியிலும் நான் சேரவில்லை. எனக்கு எந்த எல்லைகளும் இல்லை. எனது மகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்க எனது வாழ்வை அர்ப்பணித்துள்ளேன். 24 மணி நேரமும் அதுதான் எனது கவனம்.

சமூக ஊடகங்களில் எனது சந்திப்பு பற்றி வதந்தி வெளிவருவது இயல்புதான். ஆனால் எனக்கு அது போன்ற எந்தத் திட்டமும் இல்லை” என்று கூறியுள்ளார் கௌதமி.