ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை நட்டு பாதுகாக்க வேண்டும்!” – விவேக்

மறைந்த அறிவியல் மேதை டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடிகர் விவேக் சார்பில் “கலாம் பசுமை அமைதி பேரணி” இன்று (24.07.2016) சென்னை மெரினா கடற்கரையிலுள்ள கண்ணகி சிலையருகில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காவல்துறை கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் ஆரோரா கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணியில் 40க்கும் மேற்ப்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்குபெற்றனர்.

சுமார் 2000 மாணவர்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில் 7000க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டதால் விழாக் குழுவினர் திக்குமுக்காடி போயினர்.

காலை 7.30 மணியளவில் துவங்கிய இந்த பேரணி 8.30 மணியளவில் ராணி மேரி கல்லூரியை வந்தடைந்தது. அதன் பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் மாணவர்கள் மத்தியில் தோன்றிய விவேக் பேசுகையில், “மரம் வளர்ப்பதன் மூலமே புவி வெப்பமயமாக்கலை தடுக்க முடியும். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு மரக் கன்றை நட்டு அதனை பாதுகாப்பதன் மூலம் புவியையும், நீர் வளத்தினையும் காத்திட முடியும். அது பல தலைமுறைகளை காப்பாற்ற வழி வகுக்கும். கலாம் அவர்கள் எனக்களித்த இலக்கான 1 கோடி மரக்கன்றுகளில் சுமார் 27 லட்சத்து 35ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுவிட்டேன். நான் என்றைக்கு அவர் எனக்களித்த இலக்கினை அடைகிறேனோ அன்று தான் அவருக்கு நான் பூரணமாக அஞ்சலி செலுத்தியதாக கருதுவேன்” என்றார்.

0a3x

அதன்பின்னர் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இப்பேரணியில் விருந்தினர்களாக கல்வி இயக்குனர் சேகர், ராணி மேரி கல்லூரி முதல்வர் ராஜ சுலோக்ஷனா, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், வசந்தபவன் ரவி, ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர், செல்வி. தேஜஸ்வனி விவேக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த பேரணியை நந்தகுமார் ஒருங்கினைக்க, அப்போலோ குழுமத்தினைச் சேர்ந்த சுப்பிரமணியம் விளம்பரங்களை மேற்கொண்டார்.