தாய் பாசத்தை சொல்லும் பேய் படம் ‘அம்மாயி’!

இளையராஜா இசையில், கே.பி.ஆர் எண்டர்டெய்ன்மென்டஸ் சார்பில் கே.பி.ராஜேந்திரன் தயாரிக்கும் படம் ‘அம்மாயி’. தாய் பாசத்தைச் சொல்லும் பேய் படமான ‘அம்மாயி’யில் நாயகனாக வினய், நாயகியாக வரலட்சுமி சரத்குமார், நகைச்சுவை நடிகர்களாக மயில்சாமி மற்றும் சாம்ஸ் நடிக்கிறார்கள். ‘பருத்தி வீரன்’ சுஜாதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

‘சில்லுன்னு ஒரு சந்திப்பு’, ‘அய்யனார்’, ‘ரகளைபுரம்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜி.சங்கர், ‘அம்மாயி’ படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனராக அறிமுகமாகிறார்.

இத்திரைப்படத்தின் துவக்க விழா சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் கோலாகலமாக நடைபெற்றது. இளையராஜா முன்னிலை வகிக்க, படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இத்துவக்க விழாவில் கலந்துகொண்டார்கள்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் கே.பி.ராஜேந்திரன் பேசுகையில், “இந்த துவக்க விழாவுக்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி. இப்படத்தினை தயாரிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தில் இசைஞானி பணியாற்றுவது  இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

0a1f

படத்தின் நாயகன் வினய் பேசுகையில், “இங்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இப்படம் எனக்கு நல்ல படமாக அமையும் என நம்புகிறேன். என் ஒவ்வொரு படத்திற்கும் எனக்கு உற்சாகமளிக்கும் என் ரசிகர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்படத்தின் கதாநாயகியான வரலட்சுமி ஏற்கனவே அவர் ஒப்புக்கொண்ட பணியின் காரணமாக, தான் வர இயலாததை தெரிவிக்குமாறு கூறியுள்ளார்” என்றார்.

நடிகர் மயில்சாமி பேசுகையில், “ஒவ்வொரு படம் துவங்கும் போதும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு படம் என்னைப் போன்று பலருக்கு வேலை கொடுக்கிறது. இப்படத்தின் கதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் படம் முழுவதும் வருவது போல் எனது கதாபாத்திரம் இருக்கும் என இயக்குனர் கூறியிருக்கிறார். ஒரு படத்தில் ஒரு ராஜா இருந்தாலே வெற்றி தான். எங்களுக்கு இளையராஜாவே இருக்கிறார்.  இதற்கு மேல் என்ன வேண்டும்?”  என்றார்.

நடிகர் சாம்ஸ் பேசுகையில் “நான் இசைஞானியின் இசைக்கு அடிமை. அவர் இசையமைக்கும் படத்தில் நான் பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படத்தில் சரியான ஒரு பாத்திரத்தை எனக்கு அளித்திருக்கும் இயக்குனர் இப்படம் என்னை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லும் என கூறியிருக்கிறார். மயில்சாமி அண்ணனுடன் நடிப்பது சுகமான அனுபவமாக இருக்கும். அவருடன் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

இறுதியாக பேசிய இயக்குனர் ஜி.சங்கர், “இது ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட பேய் படம். தாய் பாசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்துள்ளேன். இந்த பட வாய்ப்பினை எனக்கு வழங்கிய தயாரிப்பாளர் கே.பி.ராஜேந்திரனுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். நான் தெய்வமாக நினைக்கும் இசைஞானி இளையாராஜா எனது படத்திற்க்கு இசையமைப்பதை பற்றி விவரிக்க வார்த்தையே இல்லை” என்றார்.

ஒளிப்பதிவு – சரவணன்

படத்தொகுப்பு – ஜெயசங்கர் 

கலை – ஜான் பிரிட்டோ

சண்டை பயிற்சி – பவர் பாஸ்ட்

ஊடகத்தொடர்பு – இரா.குமரேசன்