“சினிமாவில் தைரியமாக அரசியல் பேசணும்!” – ‘ஜோக்கர்’ இயக்குனர்

சோமசுந்தரம், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில், ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஜோக்கர்’. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார்.

முழுக்க அரசியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படம் தமிழக சட்டமன்ற தேர்தல் சமயத்திலேயே வெளியாகும் என மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அச்சமயத்தில் வெளியீட்டு தேதி கிடைக்காமல் பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியீட்டுக்கு தற்போது படக்குழு தயாராகி இருக்கிறது.

இப்படம் தொடர்பாக இதன் இயக்குனர் ராஜூமுருகன் கூறுகையில், “சமூக வலைத்தளங்களில் அரசியல் தைரியமாக பேசும் அளவிற்கு மக்கள் முன்னேறி உள்ளனர். ஆனால் சினிமாவில் அது இன்னும் வரவில்லை. ஏன் இங்கு மட்டும் நுழையவில்லை? படத்தை மிக தைரியமாக எடுக்க வேண்டும் என இப்படி ஒரு கதையை தயார் செய்தேன். கலைஞர்களை சாதி, அரசியல் ரீதியாக அணுகக் கூடாது. அவர்களை கலைஞர்களாக தான் பார்க்க வேண்டும்.

இப்படத்துக்கு நாங்க நினைச்ச மாதிரி எந்த பிரச்சனையும் இல்லை. சென்சார் சர்டிபிகேட் கிடைக்காதுன்னு தான் நினைச்சோம். ஆனால் ‘யு’ சர்டிபிகேட் கிடைச்சது. அரசியல் கட்சிகள் எதுவும் எங்களை மிரட்டவில்லை. சென்சார் அதிகாரிகள் கெட்ட வார்த்தைகள் மற்றும் வன்முறை காட்சிக்கு மட்டும் கட் கொடுத்தனர். எல்லோருமே அரசியல் பேசணும் என்கிற கருத்தை சென்சார் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது தேர்தல் சமயத்தில் வருவதைவிட சுதந்திர தினத்தில் வருவது இன்னும் நல்லது” என்றார்.