‘பென்சில்’ படத்துக்கு தடை வாங்க தனியார் பள்ளிகள் முயற்சி?

ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில், மணி நாகராஜ் இயக்கத்தில் உருவான ‘பென்சில்’ திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது.

தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், பள்ளி வளாகத்துக்குள்ளேயே மர்மமான முறையில் இறந்துபோகிறான். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று நினைக்கும் நிர்வாகம், போலீஸுக்கு பணம் கொடுத்து மூடி மறைத்துவிடுகிறது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம்தான் ‘பென்சில்’.

இது மட்டுமல்லாது, நீச்சல் குளத்துக்குள் விழுந்து மாணவன் இறந்தது, பேருந்து ஓட்டைக்குள் தவறி விழுந்து மாணவி இறந்தது, பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பது போன்ற மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் பல்வேறு விஷயங்கள் இந்தப் படத்தில் வெளிப்படையாகவே காட்டப்பட்டிருக்கின்றனவாம்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் விஷயமும் இந்தப் படத்தில் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளதாம். மேலும், இந்தச் சம்பவங்கள் எல்லாமே தனியார் பள்ளிகளில் தான் நடைபெறுகின்றன, அரசுப் பள்ளிகளில் நடைபெறுவதில்லை என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் குட்டை உடைக்கிறதாம் இந்த படம்

‘பென்சில்’ படம் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளதால், இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட சில தனியார் பள்ளியினர், இப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.