கண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, நோய்நாடி நோய்முதல் நாடி!, புற்றுநோய், மருத்துவம்

கண்ணில் பூச்சி பறக்குது!

நோய்நாடி நோய்முதல் நாடி – 38

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

முதலில் ஒரு புதிய செய்தியுடன் இந்த வாரக் கட்டுரையை ஆரம்பிப்போம். புற்றுநோயைக் கண்டுபிடிப்பதில் ஒரு புதிய சாதனை. வளரும் நாடுகளில் புற்றுநோய் விகிதம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஏறத்தாழ புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை 70% -ஐத் தொடுகிறது. ஆரம்ப நிலையில் இந்த நோயைக் கண்டுபிடிப்பது நோயாளியின் உயிரைக் காப்பாற்றும் என்றாலும், இந்நோய் வந்திருப்பதை கண்டறியும் முறைகளான முலை ஊடுகதிர்ப்பட சோதனை (mammogram), பெருங்குடல் அகநோக்கி (colonoscopy) ஆகியவை விலையுயர்ந்தவைகளாகவும், சிறு மருத்துவமனைகளில் இவற்றை நிறுவுவது சாத்தியமில்லாமலும் இருக்கிறது.

இதை கருத்தில் கொண்டு மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மிகவும் எளிதான, விலை மலிவான காகித பரிசோதனை ஒன்றை வடிவமைத்துள்ளது. இதனால் புற்றுநோய்க் கண்டுபிடிப்பு மேம்படுத்தப் பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப நிலையிலேயே குணமாக்குவது சாத்தியமாகவும் ஆக்கும். இந்த காகிதப் பரிசோதனை கிட்டத்தட்ட ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா என்பதைக் கண்டறியும் முறை போலவே சில நொடிகளிலேயே சிறுநீர் பரிசோதனை மூலம் புற்றுநோயைக் கண்டறியும். இந்த அணுகுமுறை  தொற்றுநோய் இருக்கிறதா என்று அறியவும் உதவுகிறது. மற்றைய நோய்களைக் கண்டறியவும் இந்தப் புதிய தொழில் நுட்பம் பயன்படும்.

நல்ல செய்திதான் இல்லையா? சரி, நாம் மேற்கொண்டு நம் கண்களைப்பற்றிப் பார்ப்போம்: கண்களில் பூச்சி பறக்கிறது என்று சிலர் சொல்லுவார்கள். ஆங்கிலத்தில் இவற்றை eye floaters என்று சொல்லுகிறார்கள். அதாவது நம் கண்ணுக்கு முன்னால் சிறுசிறு கறுப்புப் புள்ளிகள் நகர்வது போலத் தோன்றும். வெள்ளைக் காகிதத்தையோ, அல்லது நீலநிற ஆகாயத்தைப் பார்க்கும்போதோ, அதிக வெளிச்சம் உடைய ஒரு பொருளைப் பார்க்கும்போதோ இப்படித் தோன்றக்கூடும். இது சற்று தொந்திரவாக இருந்தாலும், கண் பார்வையை தடுக்காது. இவை மிக மிக நுண்ணியதாக இருக்கும்.

சில சமயங்களில் சில வெளிச்சங்களைப் பார்க்கும்போது, ஒரு பெரிய கருப்பு நிழல் வந்து உங்கள் பார்வையைத் தடுப்பது போலத் தோன்றும். இவை ஒரு மாதத்திலோ, அல்லது சில வருடங்களிலோ மறைந்துவிடக் கூடும். அல்லது குறையக்கூடும். சிலர் இவற்றைப் பற்றி ரொம்பவும் கவலைப்படாமல் வாழ கற்றுக்கொண்டு விடுகின்றனர்

ஆனால் சில சமயங்களில் இவை கவலை தரும் அளவில் மாறலாம். அடிக்கடி இவை வந்தாலோ அல்லது அதிக அளவில் கண் முன் தோன்றினாலோ, உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும். சில சமயங்களில் இந்த கரும்புள்ளிகளுடன் பளிச் பளிச் என கண்களில் ஒளி வந்தாலோ, அல்லது திடீரென கண் பார்வை மறைந்தாலோ உடன் மருத்துவ உதவி தேவை. காலம் தாழ்த்தினால் கண் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது.

இவை எதனால் ஏற்படுகின்றன?

  • விழித்திரை துண்டிப்பு
  • விழித்திரை கிழிபடுதல்
  • கண் உள்ளே இரத்த கசிவு

அறிகுறிகள் என்ன?

இந்தக் கரும்புள்ளிகள் கண்கள் அசையும்போது அசையும். அவற்றை உற்றுப் பார்க்க முயற்சித்தால் மறைந்துவிடும் வேறு வேறு வடிவத்தில் இவை தோன்றும்.

  • கருப்பு அல்லது பழுப்பு புள்ளிகள்
  • நூல் போன்ற தெளிவான இழைகள்
  • சிலந்தி வலை போன்றவை
  • வட்ட வடிவங்கள்
Akshitha
இந்த கண்களுக்கு சொந்தக்காரர் நடிகை அக்‌ஷிதா.

இவை தோன்றக் காரணங்கள்:
கொலோஜென் எனப்படும் புரதத்தின் சிறு துகள்களால் இவை ஏற்படுகின்றன.
நமது கண்களின் பின்புற அறை விட்ரியஸ் ஹ்யூமர் (vitreous humor) எனப்படும் ஜெல் போன்ற பொருளால் நிரப்பட்டு இருக்கும். வயதாக ஆக இந்த ஜெல்லும் அதில் இருக்கும் லட்சக்கணக்கான கொலோஜென் என்ற நார்பொருளும் சுருங்க ஆரம்பித்து சிறு சிறு இழைகளாக ஆகின்றன. இவை இந்த விட்ரியஸ் – இல் சேர்ந்து விழித்திரையின் – கண்ணின் பின்புறத்தில் – ஒளி விழும் பகுதியில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இந்த மாற்றம் கண்களின் முன் கறுப்புப் புள்ளிகள் தோன்றக் காரணமாகின்றன.

இந்த மாற்றங்கள் எந்த வயதிலும் வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆயினும் 50-75 வயதில் கிட்டப்பார்வை குறைபாடு உடையவர்களுக்கும், கண்புரை சிகிச்சை பெற்றவர்களுக்கும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

  • கண் அறுவை சிகிச்சை
  • கண்ணில் அடிபடுதல்
  • சர்க்கரை நோயினால் வரும் ரெடினோபதி
  • லிம்ஃபோமா எனப்படும் கண் கட்டி, மற்றும்
  • விட்ரியஸ் – இல் உருவாகும் படிகம் போன்ற அமைப்புகள்

இவற்றினால் இந்தக் கருப்புப் புள்ளிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

எப்போது மருத்துவ உதவி தேவை?

  • கறுப்புப் புள்ளிகள் திடீரென அதிகமாகும்போது
  • பளிச் பளிச் என்ற வெளிச்சம் + கறுப்புப் புள்ளிகள்
  • கண் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இவை தோன்றினால்
  • கறுப்புப் புள்ளிகளுடன் கண் வலி

பொதுவாக இந்தக் குறைபாட்டிற்கு மருத்துவ சிகிச்சை இல்லை. இந்தக் கறுப்புப் புள்ளிகளை நாம் கண்டுகொள்ளாமல்விட்டுவிட்டால் தாமாகவே மறைந்து விடும். நமது மூளையே இவற்றை மறைத்துவிடும்.

இதற்கு ஒரு லாஜிக் சொல்லுகிறார்கள்: கண்ணுக்குள் பல இரத்தக் குழாய்கள் இருக்கின்றன. ஆனால் நம்மால் அவற்றைப் பார்க்க முடிவதில்லை. நமது மூளை, நமது கண்கள் அவற்றைப் பார்க்க முடியாமல் செய்துவிடுகிறது, இல்லையா? அதுபோலத்தான் இதுவும்!

அடுத்த வாரம்…

புதன்கிழமை தோறும் வெளியாகும் இந்த கட்டுரைத் தொடர் விழிப்புணர்வுக்காக எழுதப்படுகிறது. தனிபரின் உடல் தன்மைக்கேற்ப நோயின் தன்மையும் மாறுபடும் என்பதால் தகுந்த மருத்துவரின் ஆலோசனை எப்போதும் தேவை.

“கண்ணில் பூச்சி பறக்குது!” இல் 7 கருத்துகள் உள்ளன

  1. 2000 ம் ஆண்டில் என் கண்ணில் பிரச்னை வந்தபோது எனக்கு ஆரம்பமானது இந்தக் கரும்புள்ளிகள்தான். இதற்கு நான் 2006 வரை மருந்துகள் சாப்பிட்டேன் பிறகு தற்பொது இரண்டு கண்களும் ஆபரேஷன் ஆன பிறகும் இந்த பிரச்னை தலைதூக்கியது மருந்துகள் சாப்பிட்டு தற்சமயம் குணமாகிவருகிறது. நல்ல பயனுள்ள பகிர்வு பாராட்டுக்கள் ரஞ்சனி

      1. வாங்க ராஜராஜன்.
        இங்கு எழுதப்படுவது விழிப்புணர்வுக் கட்டுரைகள். சிகிச்சை முறைகள் மருத்துவர்களாலேயே பரிந்துரை செய்யப் படவேண்டும்.
        வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.