கணிதமும் நானும்!

என் மொழிப்புலமை போலவேதான் என் கணிதப் புலமையும்.

maths

எட்டாவது வகுப்பில் என் கணித ஆசிரியர் திருமதி லில்லி கான்ஸ்டன்டைன் அவர்கள் என்னை ஆச்சர்யத்துடன் கேட்ட கேள்வி இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது: ;ஏண்டி! உனக்கு கணக்குப் பாடம் வராதா?’

நான் ‘வராது டீச்சர்’ உண்மையை ஒப்புக் கொண்டேன். வராததை வராது என்ற ஒப்புக் கொள்ளும் குணம் நல்லது இல்லையா?

அன்றிலிருந்து அவர் என் வழிக்கு வருவதே இல்லை. மற்ற பாடங்களில் இருந்த மேதமை(!!) கணக்குப் புத்தகத்தை எடுத்தாலே மறைந்து கொண்டு கண்ணாமூச்சி விளையாடியது.

ஒரு நாள் என் ஆசிரியர் சொன்னார்: ’இத பாருடி! யாருகிட்டயாவது கணக்கு கத்துக்க. அண்ணா, அக்கா யாரும் இல்லையா, வீட்டிலே?’

அண்ணா தான் ஆங்கிலம், கணக்கு இரண்டும் சொல்லித் தருவான். அவனும் தன திறமைகளை எல்லாம் என்னிடத்தில் பயன்படுத்திப் பார்த்து வெறுத்துப் போய் விட்டான். ‘இந்த ஜென்மத்தில உனக்கும் கணக்குக்கும் ஸ்நானப் பிராப்தி இல்லை..!’ என்று சொல்லி என்னை மஞ்சள் தண்ணீர் தெளித்து விட்டு விட்டான்.

எப்படியோ சமாளித்து எஸ் எஸ் எல் சி வந்துவிட்டேன். ஆசிரியை ராஜி பாய்! ரொம்பவும் கண்டிப்பு. எனக்கு எப்படியாவது கணக்குப் பாடத்தை சொல்லிக் கொடுத்துவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார். தினமும் போராட்டம்தான் எனக்கும் (கணக்கு பாடத்திற்கும் இல்லை!) ராஜி பாய் டீச்சருக்கும் தான்!

அந்த காலத்தில் ஒன்பதாம் வகுப்பில் காம்போசிட் மேத்ஸ் அல்லது அரித்மேடிக்ஸ் இரண்டு வகைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அண்ணா சொன்னான்:’காம்போசிட் மேத்ஸ் எடு. மதிப்பெண்கள் நிறைய வாங்கலாம். நான் சொல்லித் தருகிறேன்’.

‘ஐயையோ! வேண்டாம்’ என்று ஜகா வாங்கிவிட்டேன்.

‘1௦ ஆட்கள் சேர்ந்து 8 மணிநேரம் வேலை செய்தால் 6 நாட்களில் ஒரு வேலை முடியும். அதே வேலையை இரண்டே நாட்களில் முடிக்க எத்தனை ஆட்கள் எத்தனை மணிநேரம் வேலை செய்யவேண்டும்?’

‘ஒரு பெரிய நீர்த்தொட்டி. இரண்டு குழாய்கள் குறிப்பிட்ட வேகத்தில் நீரை நிரப்பும். ஒரு குழாய் குறிப்பிட்ட வேகத்தில் நீரை காலி செய்யும். எத்தனை மணி நேரத்தில் தொட்டி நிரம்பும்?’

தண்ணீர் நிரம்பவே நிரம்பாது என்பது என் வாதம். ஒரு குழாய் காலி செய்து கொண்டே இருக்கும் போது தொட்டி எப்படி நிரம்பும்?

இந்த சாதாரணக் கணக்குகளைப் போடவே தடுமாறும் நான் ஜியோமெட்ரி, அல்ஜீப்ரா (காப்ரா தான்!) என்று வாயில் நுழையாத பெயர்களில் கணக்குப் பாடம் என்றால் எங்கே போவேன்?

என் தலைமை ஆசிரியை திருமதி ஷாந்தா உட்பட எல்லா ஆசிரியர்களும் நான் எஸ் எஸ் எல் சி –யில் ‘கப்’ (அதாங்க, எங்க காலத்தில் பெயில் என்பதற்கு செல்லப் பெயர்) வாங்கிவிடுவேன் என்று உறுதியாக நம்பினார்கள்.

ஒரே ஒருத்தியைத் தவிர. நான் இல்லை அது!

எனது தோழி டி.ஏ. இந்திராதான் அந்த ஒரே ஒருத்தி.

அவள் ரொம்பவும் தீர்மானமாகச் சொன்னாள்: ‘இதோ பாருடி, இவர்கள் எல்லோரையும் தலை குனிய வைக்கிறாப் போல நீ எஸ் எஸ் எல் சி – பரீட்சையில கணக்குல அறுபது மார்க்ஸ் எடுத்து பாஸ் பண்ற, சரியா?’

‘வேண்டாம் இந்திரா, நான் மங்கம்மா இல்லை இது போல சபதம் போட…’

‘ஒண்ணும் பேசாதே…!’ என்று சொன்னவள் தினமும் பள்ளிக் கூடம் முடிந்ததும் எனக்கு கணக்கு சொல்லித் தர ஆரம்பித்தாள். என்னுடன் முட்டி மோதி என் தலையில் கணக்குப் பாடத்தை ஏற்றி…!

அவளுடைய அயராத முயற்சியினால் கணக்குப் பாடத்தில் நான் 61 மதிப்பெண்கள் பெற்று தேறினேன்! அந்தக் காலகட்டத்தில் 6௦ மதிப் பெண்கள் என்பது மிகவும் உயர்ந்த ஒன்று அதுவும் நான் வாங்கியது!

இப்போது நினைத்தாலும் எனக்கு மிகவும் ஆச்சரியம் தான்!

அவளுக்கென்ன என் மேல் இப்படி ஒரு அக்கறை? இன்று வரை விடையைத் தேடிக் கொண்டே இருக்கிறேன்.

என் கணவர் எத்தனை பெரிய எண்கள் கொடுத்தாலும் வாயினாலேயே கூட்டிச் சொல்லிவிடுவார்.

எனது மகளும், மகனும் என்னுடைய நேர் வாரிசு கணக்குப் பாட விஷயத்தில்.

என் பிள்ளைக்கு கல்யாணத்திற்கு பெண் தேடியபோது நான் போட்ட இரண்டே இரண்டு கண்டிஷன்கள் என்னென்ன தெரியுமா?

முதலாவது கணக்குப் பாடத்தில் வல்லவளாக இருக்க வேண்டும்.

இரண்டாவது அளக பாரம் (கூந்தல்) நிறைய இருக்க வேண்டும்.

நம் தலையெழுத்தை மாற்ற வேண்டுமே!

*********************************************************************************************************************

இன்று கணித மேதை ஸ்ரீனிவாச இராமானுஜன் அவர்களின் 125 வது பிறந்த நாள். அந்த மாமேதையின் பெயரைச் சொல்லவோ     அவரைப் பற்றிய பதிவு எழுதும்  தகுதியோ இல்லை எனக்கு.

என்னைபோல பலரும் கணக்குப் பாடம் என்றால் ஓடுகிறார்களே. கணக்குப் பாடத்தை எப்படி சுவாரஸ்யமாக சொல்லித் தரலாம் என்று யோசனைகள் சொல்லுங்களேன்.

என் தோழி திருமதி அனுஸ்ரீனியின் பதிவையும் படியுங்களேன்: கணிதத்தைப் பற்றிய அவரது எண்ணங்களும் என் எண்ணங்களும் எத்தனை ஒத்துப் போகின்றன பாருங்கள்!

இதோ இன்னுமொரு தோழி திருமதி மஹாலக்ஷ்மி விஜயன் அவர்களின் அனுபவம்

எனது இன்னொரு தோழி திருமதி விஜயா கணக்கு ஆசிரியை. அவரும் கணித மேதை ராமானுஜம் பற்றி எழுதி இருக்கிறார். அதையும் படியுங்கள், ப்ளீஸ்!

இரண்டாவது எண்ணத்தில் இப்போது: ஒரு கோப்பையிலே நம் வாழ்க்கை!

41 thoughts on “கணிதமும் நானும்!

  1. கணித மேதை ராமானுஜம் அவர்களின் பிறந்த நாள் அன்று உங்கள் கணித அனுபவங்களைச் சொன்ன பதிவு நன்று.

    பலருக்கும் கணிதம் என்றாலே எட்டிக் கசப்பு!

    1. எப்படி கணிதத்தை சுவாரஸ்யமானதாக ஆக்குவது என்று ஆசிரியர்களும் சற்று சிந்திக்கலாம், இல்லையா?
      நன்றி வெங்கட்!

  2. 🙂 🙂 அருமையான பதிவு அம்மா, உங்கள் பதிவை வாசித்து சிரிக்காமல் இருக்க முடிவதே இல்லை 🙂 உங்கள் மருமகள் கணக்கு புலியா? 🙂

  3. ஆமாம் கண்மணி, அவளுக்குப் பிடித்த பாடம் அது. அடுத்த தலைமுறையைப் பற்றிக் கவலை இல்லை எனக்கு! ( பாட்டியைக் கொள்ளாமல் இருக்க வேண்டும்!)

  4. //நான் ‘வராது டீச்சர்’ உண்மையை ஒப்புக் கொண்டேன். வராததை வராது என்ற ஒப்புக் கொள்ளும் குணம் நல்லது இல்லையா?//

    என்ன ஒரு ஒற்றுமை பாருங்க, எனக்கும் கணக்கு வராது. நீங்களாவது அரித்மேடிக்ஸ் எடுத்துண்டீங்க. நான் எடுத்துண்டது வெறும் ஜெனரல் மாத்ஸ் தான். பி என் ஆர்+ கூட்டிப் போட்டாலோ, பெருக்கிப் போட்டாலோ கழித்தாலோ , வகுத்தாலோ போதுமானது. அதே சமய்ம் புக் கீப்பிங்க், அக்கவுன்டன்சி, டைப்பிங், எகனாமிக்ஸ் என இப்போது அழைக்கப் படும் சமாசாரத்தை அப்போ கமர்ஷியல் ஜியாக்ரபி, கமர்ஷியல் ப்ராக்டிஸ்னு படிச்சோம். இதிலே எல்லாம் புலி, சிங்கம், யானை எல்லாமுமா இருந்திருக்கேன். கணக்கு எனக்கு ஆமணக்கு என எப்போதும் பாரதியார் சிஷ்யை தான். :)))))

    //என் கணவர் எத்தனை பெரிய எண்கள் கொடுத்தாலும் வாயினாலேயே கூட்டிச் சொல்லிவிடுவார்.//

    இதுவும் இங்கே இதே கதை தான். நாலு ஸ்தானம், ஐந்து ஸ்தானம் எல்லாம் அப்படியே கூட்டிண்டு போவார். நான் வாயைப் பிளந்துண்டு பார்ப்பேன். :)))))

  5. அதெப்படிங்க..துணைவர்கள் கணக்குப் புலிகளாகவும், நாமெல்லாம் கணக்குக்கு அஞ்சும் எலிகளாகவும் இருந்திருக்கிறோம்?

    நானும் புக்கீபிங், அக்கவுண்டன்சி, டைப்பிங் எல்லாம் படித்திருக்கிறேன்.

    வருகைக்கும், உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி கீதா!

  6. அன்புள்ள ரஞ்சனி

    உங்களின் கணித புலமை அபாரம் புளியங்காய்க்கு புளிப்பு அதிலேயே இருக்க வேண்டும் அதனை புகுத்த முடியாது அது போல கணிதம் புரிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் நமக்குள்ளேயே இருந்தால் தான் முடியும்
    ஆரம்பத்திலேயே அதை பார்த்து பயந்து நடுங்கினால் ஒன்றும் செய்ய முடியாது

  7. அச்சச்சோ! கணக்கு டீச்சர் வந்துட்டாங்களே!

    கோவிச்சுக்காதீங்க டீச்சர். நீங்க சொல்வது ரொம்ப ரொம்ப சரி. என்ன அழகா உதாரணம் கொடுத்திருக்கிறீர்கள்! கணக்கு டீச்சரா? தமிழ் டீச்சரா?

    ஒரு நல்ல சப்ஜெக்ட்டை படிக்காமல் – நீங்கள் சொல்வதுபோல – ஆர்வம் இல்லாமையால் – பயந்து நடுங்கி – விட்டு விட்டேனே என்ற வருத்தம் இன்றும் எனக்குள் உண்டு.

  8. ஓ! என்ன ரசனையாக எழுதுகிறீர்கள் அருமை. அனுவின் பதிவில் எழுதியுள்ளேன்.. ப்ளீஸ்! பாருங்களேன்!, அதை இங்கு எழுத பஞ்சியாக உள்ளது. (பஞ்சி என்றால் அலுப்பு – சோம்பல் எனக் கருதுக – பேச்சுத் தமிழாக இருக்கலாம்). இனியவாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

  9. ரசித்துப் படித்து கருத்துரையும் கொடுத்ததற்கு நன்றி சகோதரி!
    அனுவின் பதிவில் உங்கள் பின்னூட்டம் காணப் படவில்லையே! அவர்களின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறதோ என்னவோ. சற்று நேரம் பொறுத்துப் பார்க்கிறேன்.

    புதிதாக ஒரு சொல் கற்றுக் கொண்டேன். ‘பஞ்சி’

    1. உங்கள் மறுமொழி அனுவின் பதிவில் கண்டேன். நீங்களும் எங்க கட்சி தானா?
      அதில் ஒரு சந்தோஷம்!
      நன்றி சகோதரி!

  10. //இந்த ஜென்மத்தில உனக்கும் கணக்குக்கும் ஸ்நானப் பிராப்தி இல்லை..!’ என்று சொல்லி என்னை மஞ்சள் தண்ணீர் தெளித்து விட்டு விட்டான்.//

    இங்கு தான் எனக்கு படிக்க சூடு பிடித்துள்ளது. மீண்டும் வருவேன்,

    >>>>>>

  11. //அவளுடைய அயராத முயற்சியினால் கணக்குப் பாடத்தில் நான் 61 மதிப்பெண்கள் பெற்று தேறினேன்! அந்தக் காலகட்டத்தில் 6௦ மதிப் பெண்கள் என்பது மிகவும் உயர்ந்த ஒன்று அதுவும் நான் வாங்கியது!//

    வாங்கிய மதிப்பெண் 61 அல்லது வெறும் ஆறா? தெளிவு படுத்தவும். 😉
    கணக்கில் வீக் என்பதை இங்கேயும் நிரூபித்து விட்டீர்களே!! ;)))))

    >>>>>

    1. அச்சச்சோ! உண்மையாகவே 61 தான். 6 என்றால் ‘கப்’ வாங்கியிருப்பேனே!

      ஸார்….நல்லாவே காலை வாருகிறீர்கள்!

  12. //என்னைபோல பலரும் கணக்குப் பாடம் என்றால் ஓடுகிறார்களே. கணக்குப் பாடத்தை எப்படி சுவாரஸ்யமாக சொல்லித் தரலாம் என்று யோசனைகள் சொல்லுங்களேன்.//

    கணக்குப்பாடத்தில் தான் அல்வா மாதிரி 100 க்கு 100 வாங்க முடியும்.
    கணக்கு வரவே வராது என்ற பயத்தினை முதலில் போக்க வேண்டும்.
    குழந்தைகளுக்கு பொறுமையாக அழகாக, அவர்களின் அறிவின் ஆழத்தைக் கணக்கிட்டு, அதன் பிறகே கணக்குபாடம் சொல்லித்தர வேண்டும். 1+1=2 என்று 10 முறை பொறுமையாகச் சொல்லிவிட்டு, பிறகு கேட்க வேண்டும். 2 என்று சரியான விடை சொன்னதும், பலக்கக் கைதட்டி பாராட்ட வேண்டும். அத்தோடு அன்றைய பாடத்தை முடித்து விட்டு மீண்டும் மறுநாள் 1+1 எவ்வளவு எனக் கேட்க வேண்டும். அநேகமாக அந்தக்குழந்தை அழகாக 2 என சரியாக பதில் சொல்லும். மீண்டும் பலமாக கை தட்டி மகிழ்விக்க வேண்டும்.

    ”ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு …. ஜப்பான் காரன் குண்டு” என பாடலாக சொல்லித்தரலாம். அது நன்கு மனதில் பதியும்.

    அந்தப்பாட்டு இதோ இந்த இணைப்பில் முழுவதுமாக உள்ளது:
    http://gopu1949.blogspot.in/2012/03/2.html

    கணக்கு உங்களுக்கு அன்று வராவிட்டாலும் எழுத்து இன்று நன்றாகவே வந்துள்ளது. அதுபோதும் ….. பிழைத்துக்கொள்வீர்கள்.

    நல்ல நகைச்சுவையான பகிர்வு அளித்துள்ளீர்கள்.

    என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    மெயில் தகவலுக்கும் நன்றிகள்.

    அன்புடன்
    VGK

  13. நீங்கள் கூறியிருக்கும் யோசனைகள் நன்றாக இருக்கின்றன. நீங்கள் சொல்லியிருக்கும் பாட்டை நான் ஏற்கனவே காப்பி பேஸ்ட் பண்ணிக் கொண்டு விட்டேன்!

    விடுமுறையில் வர இருக்கும் பேரன்களுக்கு இந்த முறை இதைத்தான் சொல்லித் தரப் போகிறேன்.

    மனமார்ந்த பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  14. கணக்கு பற்றிய பதிவு என்றதுமே வந்து படிக்கவும் பின்னூட்டம் போடவும் ஒரு தயக்கம்தான். படித்து விட்டேன். கேள்வி கேட்காமல் இருந்தால் சரி! :))

  15. ஹா….ஹா….. எனக்கே வராதே! உங்களை கேள்வி கேட்பது எங்கே!
    மெதுவாகப் பேசுங்கள். ஏற்கனவே விஜயா டீச்சர் கோவமாக இருக்கிறார்!

    வருகைக்கும் வேடிக்கையான கருத்துரைக்கும் நன்றி ஸ்ரீராம்!

  16. இன்று கணித மேதை ஸ்ரீனிவாச இராமானுஜன் அவர்களின் 125 வது பிறந்த நாள்.

    கணக்கில் பிணக்கு கொண்டு கஷ்ட்டப்பட்ட கதையை ரசனையுடன் கதைத்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  17. அதிகமானோர் அதிக மதிப்பெண்கள் எடுக்கக்கூடிய பாடத்திட்டத்தில் கணக்குப்பாடமும் ஒன்று இவற்றை நன்கு புரிஞ்சிகிட்டா ரொம்ப ஈசியா இருக்கும்.

    பதிவுக்கும், நினைவூட்டலுக்கும் வாழ்த்துகள்…

    1. அதிக மதிப்பெண்கள் வரும் – புரிந்து கொண்டால்…! அதுதானே என் பிரச்னையே!
      வாழ்த்துக்களுக்கு நன்றி நிஜாம்!

  18. ராமானுஜம் பிறந்த நாளன்று, கணிதத்துடன் நீங்கள் போட்ட சண்டை,சமாதானம் பற்றிய பதிவு மிக ஜோர்.
    வாழ்த்துக்கள்.

    ராஜி

    1. கணக்கு நன்றாகப் போடும் யாரைப் பார்த்தாலும் நான் கொஞ்சம் விலகியே நிற்பேன். அதனாலோ என்னவோ கணக்கும் என்னுடன் பிணக்குக் கொண்டு விட்டது.

      வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜி!

  19. “அண்ணா தான் ஆங்கிலம், கணக்கு இரண்டும் சொல்லித் தருவான். அவனும் தன திறமைகளை எல்லாம் என்னிடத்தில் பயன்படுத்திப் பார்த்து வெறுத்துப் போய் விட்டான்.”

    அனைவரின் வீட்டிலும் நடக்கும் அழகான விசயம்.
    உங்களுக்கு கணிதம் எப்படியோ அப்படி எனக்கு ஆங்கிலம்.
    என் அக்காவும் தன் திறமைகளை எல்லாம் என்னிடத்தில் பயன்படுத்திப் பார்த்தார்.
    முடியவில்லை…

    அழகான பதிவு…

  20. உங்கள் மறுமொழி எனக்கு ‘வான்குருவியின் கூடு, வல்லரக்குத் தொல்கறையான்..’ பாடலை நினைவு படித்தியது.
    ‘எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது’ – இல்லையா?

    நன்றி பழனிவேல்!

  21. அம்மா எனக்கு நேர் எதிர் நீங்கள்!! எனக்கு மிகவும் பிடித்தது கணக்கு தான்!! நீங்கள் குறிப்பிட்டது போல கணக்குகள் நான் விரும்பி போடுவேன்..

    1. கணக்குப் புலிகளைப் பார்த்தால் நான் கொஞ்சம் தள்ளியே நிற்பேன் சமீரா!
      இன்றைக்கும் எனக்கு கணக்கு பாடத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் போய் விட்டோமே என்று வருத்தம்தான்.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சமீரா!

  22. உங்கள் TEMPLATE ரொம்ப அழகு!!! மீன் தொட்டி சூப்பர்….

    1. ப்ளாக்ஸ்பாட் போல இங்கு கலர் கலராக போட முடியாது சமீரா. எனக்கு கணணி மொழிகளும் தெரியாது. எல்லாவற்றையும் முயற்சி செய்வேன். எது வருகிறதோ அதைப் போட்டு விடுவேன். அவ்வளவுதான்!

  23. ரஞ்ஜனி,

    கணிதமேதை இராமானுஜரை நினைவு கூர்வதில் மகிழ்ச்சி.

    இளம் வயதில் நாம் பார்த்து,அனுபவித்து,புரிந்துகொள்ள முடியாத ஒன்று என்பதால் வெறுப்பு வரலாம்.அறிமுகப்படுத்துவதில் பிரச்சினை இருந்தாலும் கடைசிவரை பிரச்சினைதான்.

    கணக்கு எனக்குப் பிடித்த பாடம்.விடையை விடுவிக்கும்போது ஒரு சந்தோஷம் வருமே, அதை அனுபவிப்பதில் ஒரு மகிழ்ச்சி.

    “எனக்கு எப்படியாவது கணக்குப் பாடத்தை சொல்லிக் கொடுத்துவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்”___பழிவாங்க நினைத்திருப்பாரோ!

    பதிவை நகைச்சுவையாகக் கொடுத்து சிரிக்க வைத்ததற்கு நன்றிங்க.

    1. ஒன்பதாம் வகுப்பு வரை சமாளித்து விட்டேன். அதற்கு மேல் ரொம்பவும் திண்டாடி இருக்கிறேன்.

      எது நமக்கு வரவில்லையோ, அதைப் பார்த்து சிரித்து விடுவேன்! நம்மால் முடிந்தது அதுதான்!

      //கணக்கு எனக்குப் பிடித்த பாடம்.விடையை விடுவிக்கும்போது ஒரு சந்தோஷம் வருமே, அதை அனுபவிப்பதில் ஒரு மகிழ்ச்சி.//
      உங்கள் மகிழ்ச்சியை உணர முடிகிறது.
      நன்றி சித்ரா!

  24. நல்ல வேளை அம்மா உங்களுக்கு இந்திரா என்ற நல்ல தோழி இருந்ததால் கணக்கு பாடத்தை நீந்தி கறை ஏறி விட்டீர்கள் !

  25. ஆமாம் மஹா! என்றைக்கும் அவளை மறக்கவே மாட்டேன். என்னைக் கரை சேர்த்தவள் அவள்தான்!
    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  26. வழக்கம் போல உங்களுக்கே உரிய நடையில் கணக்குப் பாடம் வருமா வராதா என்ற அனுபவத்தை நன்றாக ரசிக்கும்படி எழுதி இருக்கிறீர்கள்.

    அது என்னவோ? கணக்கு பாடம் என்றால் எனக்கு பயம்தான். தேர்வில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் சம்பந்தப்பட்ட கணக்குகளை மட்டுமே தேர்ந்தெடுத்து விடையளித்து பாஸ் செய்து விடுவேன். அல்ஜிப்ரா பக்கம் போவதே கிடையாது.

  27. hello ranjani madam you are aware that mathematics cannot be friendly with all. imean only ertain people could master mahematics…. i hae seen prominent doctors…vips who were very weak in maths subject during their school days. somehow ifyou master maths you can master your obstacles in life. … best wishes.

Leave a comment