பொ. கருணாகரமூர்த்தி சிறுகதை “சாதல் என்பது”


po51.karunakaramoorthy

பொ. கருணாகரமூர்த்தி சிறுகதை “சாதல் என்பது”

பழைய கூத்திக்கு அப்பப்ப மணியோடர் அனுப்பினதும் போதாதெண்டு சொத்தில ஒரு பகுதியை தானம் கொடுத்த தர்மப்பிரபு, இன்னொரு பகுதியை அசுக்கிடாமல் உறவுகொண்டாடினவைக்கு வார்த்துவிட்டவர், மிச்சமிருக்கிறதை உருவிப்போக நோட்டும் கையுமாய் நிக்கிறா ஒரு உடன்பிறப்பு.” மாதினி அதை யாருக்குச் சொல்கிறாள் என்று தெரியவில்லை.

காலச்சுவடு ஜூலை 2015 இதழில் வெளி வந்த​ பொ. கருணாகரமூர்த்தியின் சிறுகதையின் சாராம்சமாக​ நாம் கதையின் மேற்கண்ட​ பத்தியைக் காண்கிறோம்.

தனக்கும் மனையாளுக்கும் பொதுவான​ பள்ளித் தோழியை அவள் கூசாமல் கூத்தி என்று குறிப்பிட்டுக் குத்தலாகப் பேசியதுதான் மரணப் படுக்கையில் இருக்கும் அவருக்கு தான் சாகத் துவங்கி விட்டதான​ வலியைத் தருகிறது.

ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர் ஒருவர் தம் இறுதி நாட்களில் குழந்தைப் பருவத்தில் சந்தித்த​ சிறுமிகள், அவர்களும் தனது மனைவியை வாழ்க்கைத் துணையாய்த் தேர்ந்தெடுத் தது, இலங்கையில் ஆயுதப் போர் குறித்த விமர்சனங்கள், தனது புலம் பெயர்வு, ஜெர்மனியில் புதிய​ வீடு, குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானது என​ நிறையவே அசை போடுகிறார்.

கதையின் இறுதிப் பகுதியில் வரும் இந்தப் பதிவைக் காண்போம்:

நான் ஆகிய தயாநிதி இயல்பில் பொருள், பண்டம், ஆஸ்திகளுடன் தூங்கவல்ல உலோகாயதவாதி அல்ல என்பது மாதினிக்கு நன்கு தெரியும்.

ஒரு விருந்திலோ, தொடருந்திலோ ‘அங்கே பார் ஒரு அழகியை’ என்று இன்னொருத்தியைக் காட்டினால் மற்றப் பெண்களைப் போலவே அது மாதினிக்கும் பிடிக்காது, ஆனால் அவளைக் குளிர்விக்க ‘நீயே பிரபஞ்ச அழகு ரூபிணி’ என்று அவளைப் புகழ வேண்டியதுமில்லை. என் ஒழுக்கத்தைப் பரீட்சிக்க அவள் என்றைக்கும் முயன்றதில்லை.

என்னிடம் அவளுக்குப் பிடிக்காத விடயங்கள். சற்றே முனைப்பான என் அழகியல் இரசனைகள் மற்றும் ஆய்வுகள், நான் படிக்கும் நூல்களும் (அனைத்தும் வேண்டாத கிரந்தங்கள்) மாத்திரந்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அடடா… இன்னும் நமக்குள் ஸ்ருதி சேராத விஷயங்கள் ஏதும் மீதி இருந்திருக்கின்றனவா, சொல்லு மாதினி, மனதில் எதை வைத்து இந்த வார்த்தைகளைக் கொட்டினாய்.

பிரக்ஞையோடிருந்த காலை ஒரு முணுமுணுப்போ, உதட்டுச் சுழிப்போ இல்லாதிருந்த நீயா அவ் வார்த்தைகளைச் சிந்தியது. சாதா ஸ்திரீகளைப்போலும் உலோகாயத வாஞ்சை உன்னையும் தியக்கத்தில் ஆழ்த்திவிட்டதா.

இந்திரியங்களின் ஸ்மரணை உறைய உறைய மாதினியின் குரலின் அலைகள் ஆழக் கிணற்றிருந்து வருவதுபோல் ஒன்றிலொன்று மோதி எதிரொலித்து பின்னி நொய்து தேய்ந்து தீய்கின்றன.

அப்போதுதான் நான் சாகத்தொடங்கினேன்.”

கதையை முடிக்கும் இந்தப் பதிவு அனேகமாக​ எந்த​ தம்பதியும் தவிர்க்கும் ஒரு கேள்வியை உள்ளடக்கியது. “முழுதும் புரிதலுடன் கூடிய​ ஒரு வாழ்க்கைத் துணை சாத்தியமா?”

குழந்தையின் ஒவ்வொரு கணம் தாய்க்கும், இளவயதில் நண்பனின் இதயத் துடிப்பு மற்றொரு நண்பனுக்கும் ஒரு குறிப்பிட்ட​ காலம் வரை அப்படியே பிடிபடும். ஆனால் குழந்தை வளர்ந்தபின் தாய்க்கும் குழந்தைக்கும், நண்பர்களுக்குள் திருமணத் துக்குப் பின்னும் ஒரு இடைவெளி வந்து விடுகிறது.

ஆனால் கணவன் மனைவிக்கிடையே தற்காலிகமாகக் கூட​ ஆழ்ந்த புரிதல் நிகழ்வதுமில்லை. அது சாத்தியமா என்று நாம் சிந்திப்பதுமில்லை. இடையறா எதிர்பார்ப்பு ஒன்று- என் கனவுகள் இந்த​ வாழ்க்கைத் துணையால் ஈடேறுமா என்று. என் கனவுகளோ வடிவம் மாறிக் கொண்டே இருக்கின்றன​. பின்னொரு நாளில் என் எல்லாத் துயர்களின் மூலமே இந்தவாழ்க்கைத் துணை தானா என்னும் கேள்வியே எஞ்சுகிறது. வாழ்க்கையிடம் இருந்து எதை எதிர்பார்ப்பது என்ற​ தெளிவே எனக்கு இல்லாத​ போது வாழ்க்கைத் துணையிடம் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் என​ இரு முனைகளிடைப்பட்ட​ ஊசலாட்டம் என்றுமிருக்கிறது. ஆனால் நாங்கள் ஒருவருக்காகவே மற்றொருவர் படைக்கப் பட்டவர் என்னும் பாவனையும். இந்த​ சிறுகதை அந்த​ பாவனை பலூன் காற்றிழக்கும் தருணம் பற்றியது.

(image courtesy:tamilbookworld.com)

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , , . Bookmark the permalink.

Leave a comment